Sunday, May 1, 2011

ஹெலிகப்டருடன் மாயமான முதல் மந்திரி ! செயற்கை கோள் உதவியுடன் தேடும் பணி தீவிரம் .


அருணாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் முதல்- மந்திரி டோர்ஜி காண்டு நேற்று காலை தபாங் என்ற இடத்தில் இருந்து தலைநகரம் இட்டா நகரு்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.

ஹெலிகாப்டரில் முதல் - மந்திரியின் பாதுகாப்பு அதிகாரி, எம்.எல்.ஏ. ஒருவரின் சகோதரி மற்றும் பைலட்டுகள் 2 பேர் இருந்தனர்.

ஹெலிகாப்டர் பறந்து சென்ற 20-வது நிமிடத்தில் ஹெலிகாப்டரின் தரை தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு ஹெலிகாப்டருடன் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. எனவே ஹெலிகாப்டர் மாயமாகி விட்டதாக கருதப்பட்டது.

இதனால் ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இந்த நிலையில் ஹெலிகாப்டர் பூடான் நாட்டில் பத்திரமாக இறங்கி விட்டதாக தகவல் கிடைத்தது. ஆனால் அது உறுதியான தகவல் இல்லை என்பது பின்னர் தெரியவந்தது.

இதனால் மீண்டும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்திய விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் நேற்று மதியத்தில் இருந்து மாலை வரை தொடர்ந்து தேடிவந்தன. ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் இரவு ஆகிவிட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று காலை மீண்டும் தேடும் பணி தொடங்கியது.

ஹெலிகாப்டர்களில் தாழ்வாக பறந்து ஒவ்வொரு இடமாக தேடிவருகின்றன. இத்துடன் ராணுவ வீரர்களும் இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினரும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

அவர்கள் காட்டுப் பகுதிக்குள் இறங்கி தேடுகின்றனர். ஹெலிகாப்டரை கண்டுபிடிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமும் உதவி வருகிறது. இந்திய விண்ணில் செலுத்தியுள்ள செயற்கை கோள்கள் 24 மணி நேரமும் பூமியை சுற்றி வந்து படம் எடுத்துக்கொண்டே இருக்கும்.

இந்த படத்தின் உதவியுடன் ஹெலிகாப்டரை கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர். ஹெலிகாப்டர் மாயமானதற்கு பிறகு நேற்று 2 தடவை இந்திய செயற்கை கோள்கள் அந்த பகுதியை கடந்து சென்று படம் பிடித்து உள்ளன. ஆனால் அந்த படத்தை ஆராய்ந்த போது ஹெலிகாப்டர் விழுந்து கிடந்தது போன்ற எந்த காட்சியும் இல்லை.

இன்றும் அதே போல பகலில் செயற்கை கோள்கள் அந்த பகுதியில் வரும். அப்போது எடுக்கும் படத்தை வைத்து கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள். மேலும் செயற்கைகோள்கள் ஹெலிகாப்டரில் சிக்னல்களையும் கிரகிக்கும் சக்தி கொண்டவை அதன் மூலமும் கண்டுபிடிக்க முயற்சி நடக்கிறது.

ஒரு வேளை பூட்டான் நாட்டு எல்லைக்குள் ஹெலிகாப்டர் விழுந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே பூட்டான் அரசும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஹெலிகாப்டர் வந்த பாதையை ஒட்டி சீனாவின் செலபாஸ் எல்லை பகுதி உள்ளது.

அங்கே விழுந்து இருக்க வாய்ப்பு இருப்பதால் சீனாவுக்கும் தகவல் தெரிவிக் கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மாயமானதும் அது காட்டுப் பகுதியில் எங்காவது தரை இறங்கி இருக்க வேண்டும் என்றே கருதினார்கள்.

ஆனால் மாயமாகி 24 மணி ஆகியும் எந்த தொடர்பும் இல்லாததால் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி இருக்க வேண்டும். அதில் இருந்தவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றே கருதப்படுகிறது. மாயமான ஹெலிகாப்டர் “பவான் ஹன்ஸ்” என்ற ஹெலிகாப்டர் நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த நிறுவனம் அருணாச்சலபிரதேச அரசு நடத்துகிறது. வட கிழக்கு மாநிலங்களில் போதுமான சாலை வசதி இல்லாததால் இந்த நிறுவனம் ஹெலிகாப்டர் போக்குவரத்தை நடத்தி வருகிறது.

கடந்த 19-ந்தேதி இந்த நிறுவனத்தின் ஹெலிகாப்டர்தான் இதே பகுதியில் விழுந்து நொறுங்கி 17 பேர் உயிர் இழந்தனர். இப்போது இந்த ஹெலிகாப்டர் மாயமாகிவிட்டது. இது “ஏ.எஸ்.350-பி-3 என்ற வகையை சேர்ந்த குட்டி ஹெலிகாப்டர் ஆகும்.

வானிலை மோசமாக இருக்கும் நேரத்தில் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்வது ஆபத்தானது. நேற்று முதல்- மந்திரி பயணம் செய்தபோதும் வானிலை மோசமாக இருந்துள்ளது. எனவே அதை தாக்கு பிடிக்க முடியாமல் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

பவான் ஹன்ஸ் நிறுவன விமானங்கள் தொடர்ந்து விபத்தை சந்திப்பதை அடுத்து அருணாச்சல பிரதேசம், மேகாலயா மாநிலங்கள் இந்த நிறுவன ஹெலிகாப்டர் போக்குவரத்தை உடனடியாக ரத்து செய்துள்ளன.

ஹெலிகாப்டரில் பயணம் செய்த 5 பேர் விவரம். 1. டோர்ஜி காண்டு முதல்- மந்திரி 2. யேஷி ஜோட்டக், முதல்- மந்திரியின் பாதுகாப்பு அதிகாரி. 3. யேஷி லாமு, இவர் அருணாசல பிரதேச எம்.எல்.ஏ. டெஸ் வாஸ்கினின் சகோதரி. 4. ஜே.எஸ்.பாப்பர், ஹெலிகாப்டர் பைலட். 5. கே.எஸ்.மாலிக், துணை பைலட்.

No comments: