Sunday, May 1, 2011

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க கண்காணிப்பு தீவிரம்: ஐ.ஜி.


தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க கடற்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று கடலோர காவல் படையின் (கிழக்கு மண்டல) கமாண்டர் ஐ.ஜி. எஸ்.பி. சர்மா தெரிவித்தார்.

இந்திய தொழிலகங்களின் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) சார்பில் ரகசிய கண்காணிப்பு- பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் அவர் சனிக்கிழமை பேசியதாவது: தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மீன்பிடித் தொழில் மேற்கொள்ளும்போது நமது கடல் எல்லையைத் தாண்டிச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவளத் துறையினர் மூலம் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தவறுதலாக நமது கடல் எல்லையைத் தாண்டி மீன்வளம் செறிந்த பகுதிகளைத் தேடி செல்லும் நமது மீனவர்களை கடலோர காவல் படையினர் எச்சரித்தும் வருகின்றனர்.

இதே போல நமது கடற்பகுதிக்குள் ஊடுருவும் இலங்கை மீனவர்கள் மீதும் கடலோர காவல் படை கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கடந்த சில நாள்களில் மட்டும் இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்து அத்துமீறி மீன்பிடித்த 15 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கை- தமிழகம் இடையே கடலோரப் பகுதியில் நமது மீனவர்களை காக்கும் வகையில் கடலோர காவல் படையின் கப்பல்கள், ரோந்து படகுகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு நடவடிக்கைகளில் ரகசிய கண்காணிப்பும் முக்கிய அம்சமாகமாக உள்ளது. முன்னெச்சரிக்கை, வருமுன் காக்கும் நடவடிக்கைகளுக்கு இதுவே மிகவும் அவசியமாகிறது. புலனாய்வு தகவல்களைப் பெறுவதற்கு இது பேருதவியாக அமைந்துள்ளது. கடல்சார் துறை, கடலோர பாதுகாப்பிலும் இது முக்கிய பங்காற்றுகிறது.

இது நாட்டின் 7,500 கிலோ மீட்டர் தூர கடல் எல்லைப் பகுதியில் அத்துமீறல்களை கண்காணிக்கவும் உதவுகிறது. நாட்டின் வணிகப் போக்குவரத்தில் 90 சதவீதம் கடல் வழியாகத்தான் நடைபெறுகிறது.

கடல்கொள்ளையர்களின் அட்டகாசத்தை ஒடுக்க... லட்சத்தீவுகளைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் அதிகரித்தது. கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டதையடுத்து, இப்போது சோமாலியா கரையோரம், அரபிக் கடலின் தென்கிழக்குப் பகுதிகளிலும் கடல் சார் பாதுகாப்புக்கு பெரும் சவாலாக உள்ளது.

இந்திய கப்பல்களை சுற்றி வளைப்பதோடு ஊழியர்களை பிணையக் கைதிகளாக பிடிப்பதிலும் கடற்கொள்ளை கும்பல் ஈடுபட்டுள்ளது. இந்தக் கடற்கொள்ளையர்களுக்கும், சில தீவிரவாத கும்பலுக்கும் தொடர்பு உள்ளது. சாதாரண வள்ளங்கள் முதல் ஆழ்கடல் மீன்பிடி கப்பல்கள் வரை நமது கடற்பகுதியில் ஏராளமான மீன்பிடி கலன்கள் உள்ளன. இதில் பெரும்பாலானவை பதிவு செய்யப்படுவதில்லை. எனினும், நமது கடற்பகுதியில் ஊடுருவும், சந்தேகத்துக்கு இடமான அன்னிய மீன்பிடி கப்பல்கள், படகுகளைக் கண்டவுடன் தகவல் கொடுக்குமாறு ஒவ்வொரு மீனவ கிராமங்களிலும் மீனவ மக்களும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

நவீன சாதனங்கள் மூலம் கண்காணிப்பு: இதுதவிர செயற்கைக்கோள் உதவியுடன் கூடிய நீண்ட தூர தடம் அறியும் சாதனங்கள் (எல்.ஆர்.ஐ.டி.), சென்சார் கருவிகள், ஏரேஸ்டட்ஸ் சாதனங்கள், ஆளில்லாத கண்காணிப்பு விமானங்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்க செயற்கைக்கோள்கள் மூலம் இயங்கும் நவீன ரேடார்கள் உதவியுடன் ஒருங்கிணைந்த சங்கிலித் தொடர்போன்ற கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய அதி நவீன தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் கடலோர காவல் மட்டுமன்றி கடலுக்கு அடியிலும் கண்காணிப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார் ஐ.ஜி. எஸ்.பி.சர்மா.

இதில், மத்திய அரசின் முன்னாள் தலைமை கண்காணிப்பு ஆணையர் என். விட்டல், சென்னை பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கான பயிற்சி அகாதமியின் கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் கவுதம் பானர்ஜி, இந்திய தொழிலகங்களின் கூட்டமைப்பின் (தென் மண்டலம்) தலைவர் பிரதிப்தா கே. மொஹபத்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments: