Sunday, May 1, 2011

எழுச்சி பெறுகிறது ஏற்றுமதி !


சென்ற நிதி ஆண்டில் (2010-11) இந்தியாவின் ஏற்றுமதி 37 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதன் மதிப்பு 24,600 கோடி டாலர் ஆகும். இது ஒரு சாதனை எனலாம். கடந்த மார்ச் மாதத்தில் மட்டும், ஏற்றுமதி 49.9 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. மதிப்பு, 2,900 கோடி டாலர்.

மத்திய அரசு, 2010-11-ம் ஆண்டுக்கு நிர்ணயித்த இலக்கே 22,000 கோடி டாலர்தான். இந்த இலக்கையே எட்டிப்பிடிக்க முடியுமா என்ற ஐயப்பாடு பலருக்கு இருந்தது. காரணம், இதற்கு முந்தைய ஆண்டு, 2009-10 நிதி ஆண்டில், இந்தியாவின் ஏற்றுமதி 17,800 கோடி டாலராக மட்டுமே இருந்தது.

சர்வதேச பொருளாதாரம் மந்தமாக இருந்ததால், மத்திய அரசு பல ஊக்குவிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தியதன் பயனாகவே அது சாத்தியமானது.

ஆக, வரலாற்றில் முதன்முறையாக, ஏற்றுமதி 20,000 கோடி டாலரைத் தாண்டியது மட்டுமல்ல; 24,600 கோடி டாலர் அளவையும் எட்டியுள்ளது.

அதிக அளவில் ஏற்றுமதியான பொருள்கள் பொறியியல் உற்பத்திப் பொருள்கள், ரசாயனம், மருந்து வகை, மின்னணுப் பொருள்கள், ஆபரணக் கற்கள், ஆபரணங்கள், கைவினைப் பொருள்கள், தோல் பொருள்கள், ஜவுளி மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் எனலாம்.

அண்மைக்காலமாக, ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள எழுச்சிக்கு அரசின் ஊக்குவிப்பு, சலுகைகள் தவிர, வேறு சில முக்கியக் காரணங்களும் உள்ளன.

உதாரணமாக, மருந்துகள் உற்பத்தியில் இந்திய நிறுவனங்களின் திறன் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு பற்றிய மதிப்பீடு உலக அளவில் அபரிமிதமாக உயர்ந்துள்ளது.

இரண்டாவதாக, இந்தியாவில் பல்வேறு பொருள்களின் உற்பத்தியில் குழந்தைத் தொழிலாளர்களின் உழைப்பு பயன்படுத்தப்படுவதில்லை என்ற உண்மை, வெளிநாட்டு இறக்குமதியாளர்களை உரிய முறையில் சென்றடைந்துள்ளது. இது ஒரு நல்ல திருப்பம்.

மூன்றாவது, காஷ்மீர் மற்றும் லக்னௌ போன்ற வட மாநிலங்களில் தயாரிக்கப்படும் கலை அழகு மிளிரும் நேர்த்தியான கம்பளங்கள், தரைவிரிப்புகள் (கார்பெட்) ஆகியவை ஏற்கெனவே இருந்தவைதான். ஆனால், அவை வெறும் நுகர்பொருள்களாக, பயன்பாட்டுப் பொருள்களாக அறியப்பட்டிருந்தன. இவற்றை இப்போது கலைபொருள்களாக வெளிநாட்டுச் சந்தைகளில் அறிமுகம் செய்த பெருமை புதிய தலைமுறை ஏற்றுமதியாளர்களுக்கு உண்டு.

இவையெல்லாமாகச் சேர்ந்து, கடந்த காலங்களைவிட இப்போது இந்திய ஏற்றுமதியாளர்கள் மீதுள்ள நன்மதிப்பு, நல்லெண்ணம் உலக அரங்கில் உயர்ந்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க, சர்வதேசப் பொருளாதார மந்த நிலையிலிருந்து, மெல்ல மெல்ல மீட்சி அடைந்து வரும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தேவை ஓரளவு மட்டுமே அதிகரித்து வருகிறது. எனவே, இவ்விரு சந்தைகளை மட்டுமே நம்பியிராமல், இந்திய ஏற்றுமதியாளர்களின் பார்வை ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் பக்கம் திரும்பியுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க மாற்றம்.

வேளாண் சார்ந்த பொருள்களான தேயிலை, காப்பிக்கொட்டை, புகையிலை, மசாலாப் பொருள்கள், முந்திரிப் பருப்பு, பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் ஏற்றுமதி மதிப்பு முதல்முறையாக, 1,200 கோடி டாலரைக் கடந்துள்ளது.

இதில் ஆறுதல் தரும் அம்சம் என்னவெனில், அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொருள்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்பதுதான்.

புதிதாகப் பொருளாதார வளர்ச்சியும், வாங்கும் சக்தியும் பெற்றுவரும் நாடுகளான கஸக்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற மத்திய ஆசிய நாடுகளில் பல்வேறு பொருள்களின் தேவை முதல்முறையாக அதிகரித்துள்ளது. இதுபோன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் இந்திய ஏற்றுமதியாளர்கள் முனைப்புக் காட்டினால் நல்ல பலன் கிடைக்கும்.

ஏற்றுமதியாளர்களுக்கு, மத்திய அரசு அவ்வப்போது பல்வேறு சலுகைகளையும், ஊக்குவிப்புகளையும் வழங்கி வருவது வரவேற்கத்தக்க விஷயம். அதேநேரம், இப்போது ஒரு புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வரிச்சலுகைகளில் முக்கியமான ஒன்றாகத் திகழ்வது, வரிச்சலுகை "பாஸ்' புத்தகத்திட்டம். இத்திட்டம் நடப்பாண்டு ஜுன் மாதம் 30-ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. நீண்டகாலமாக, சிறிய சிறிய மாற்றங்களுடன் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு உறுதுணையாக உள்ள இத்திட்டத்தை, உலக வர்த்தக நிறுவனம் கடுமையாக எதிர்க்கிறது. இது சம வாய்ப்புகளுக்கு அப்பாற்பட்டது என்பது உலக வர்த்தக நிறுவனத்தின் வாதம்.

இந்நிலையில், இந்த எதிர்ப்பைச் சமாளிக்கும் வகையில், இத்திட்டத்துக்கு மாற்றாக, வேறு சலுகை அளிப்பது அவசியமாகும். இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், மத்திய வர்த்தக அமைச்சகம் விரைந்து செயல்பட்டு, ஏற்றுமதியாளர்களின் நலனைக் காத்திட வேண்டும்.

மொத்த ஏற்றுமதியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு 40 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. மூலதனம் குறைவாக உள்ள இந்த நிறுவனங்களால், தங்களது தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக போதிய நிதி ஆதாரத்தைத் திரட்டுவது மிகவும் கடினம். அதேநேரம், இந்நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்களை உலகச் சந்தையில், போட்டிகளைச் சமாளித்து, விற்பனை செய்ய வேண்டுமானால், தொழில்நுட்ப மேம்பாடு அவசியம்.

இதைக் கருத்தில்கொண்டு, இப்போது ஜவுளித்துறையினருக்குத் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோன்ற நிதி உதவித் திட்டத்தை, ஜவுளி அல்லாத பிற துறைகளைச் சேர்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கும் அறிமுகம் செய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்தைச் செயல்படுத்திட, முதல்கட்டமாக ரூ. 2,500 கோடி ஒதுக்கப்படும் என்றும், அடுத்த ஆண்டுக்குள் இது அமல்படுத்தப்படும் என்றும், உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதாக அமையும்.

இத்திட்டத்தின் மூலம் நிறுவனங்கள் தங்களது உற்பத்திப் பொருள்களின் தரத்தை உயர்த்தும் வகையில் நவீனமயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றைச் செய்துகொள்ளத் தேவையான நிதியைக் கடனாகப் பெற்றுக் கொள்ளலாம்.

கடன் தொகையில் 5 சதவீதம் அரசு மானியமாகவும் வழங்கப்படும். ஜவுளித்துறையில், நல்ல பலனை அளித்துள்ள இத்திட்டம், சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கும் உதவிகரமாக இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

நாட்டின் மொத்தத் தொழில் உற்பத்தியில் 45 சதவீதம் இந்த வகை நிறுவனங்களின் மூலம் தான் கிடைக்கிறது என்பது கவனத்துக்குரியது.

இந்த நிறுவனங்களின் எண்ணிக்கை சுமார் 2 கோடியே 60 லட்சம் ஆகும். இவை உற்பத்தி செய்யும் பொருள்களின் எண்ணிக்கை 6,000-க்கும் மேல். இப்பொருள்களின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு உத்தேசத் திட்டம் உறுதுணையாக அமையும் என நம்பலாம்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த ஓராண்டுக்கும் மேலாக, அதிகரித்தவண்ணம் உள்ளது. இது இந்திய ஏற்றுமதியாளர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது. அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய லாபம் குறைகிறது. எப்படியென்றால், நாம் ஏற்றுமதி செய்திடும் பொருள்களுக்கு விலை வெளிநாடுகளிலிருந்து நமக்கு டாலரில்தான் வருகிறது. டாலர் மதிப்பு குறைவதால், நமக்குக் குறைந்த அளவிலான ரூபாய்தானே கிடைக்கும்? மாறாக, டாலரின் மதிப்பு அதிகரிக்கும்போது, நமக்கு ரூபாய் தொகை கூடுதலாகக் கிடைக்கும்.

பொதுவாக, டாலர் மதிப்பு ஓர் அளவுக்கு மேல் குறைந்தால், பாரத ரிசர்வ் வங்கி தலையிட்டு, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது வழக்கம்.

அதாவது, பணச் சந்தையிலிருந்து, ரிசர்வ் வங்கி கணிசமான அளவில் டாலரை கொள்முதல் செய்து, வீழ்ச்சி அடைந்த டாலரின் மதிப்பைத் தாங்கிப் பிடிக்கும். இதனால், டாலருக்குச் சந்தையில் கிராக்கி ஏற்படும்; மதிப்பு உயரும். இது காலங்காலமாக நடைபெற்று வருவதுதான். ஆனால், கடந்த பல மாதங்களாக பாரத ரிசர்வ் வங்கி, ஏனோ அப்படிச் செய்வதைத் தவிர்த்து வருகிறது.

அன்னிய நேரடி முதலீடுகள் மற்றும் அன்னிய நிறுவன முதலீடுகள் அதிக அளவில் நாட்டுக்குள் வருவதுதான் டாலர் மதிப்பு குறைவதற்கு முக்கிய காரணம். பிரேசில் போன்ற சில நாடுகள், தங்கள் நாட்டு ஏற்றுமதியைக் காப்பாற்றுவதற்காக, அன்னிய முதலீடுகள் தேவைக்குமேல் வருவதைத் தடுப்பதற்காக நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் ""பிரிக்ஸ்'' எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் உச்சி மாநாடு அண்மையில் நடைபெற்றது. அதுசமயம், மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு முடிவு சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது.

மேற்கூறிய 5 நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், கடன், மானியம் போன்ற நிதி தொடர்பான பரிவர்த்தனைகளில் டாலருக்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட அந்தந்த நாட்டு நாணயத்திலேயே பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும் என்பதே அது. கருத்தளவில் உருவாகியுள்ள இந்த முடிவில், முழு விவரங்கள் இன்னும் தீர்மானமாகவில்லை.

குறிப்பாக, இதில் ஏற்றுமதியின் நிலை என்ன என்பது குறிப்பிடப்படவில்லை. இத்திட்டத்தின் முழுமையான விவரங்கள் வெளிவரவில்லை என்றாலும், அவற்றை வரையும்போது, ஏற்றுமதியாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அமைய வேண்டும்.

உதாரணமாக, இந்த 5 நாடுகளில் ஒன்றான சீனா, தனது நாணயமான யூவான் டாலருக்கு மாற்று நாணயமாக உருவாக்கப்பட வேண்டும் என்று அண்மைக்காலமாக முயன்று வருகிறது. இப்படி ஒவ்வொரு நாட்டுக்கும், வெளியிடப்படாத ரகசிய நோக்கம் இருந்தால் வியப்பில்லை. எனவே, சில நாடுகளுக்கிடையேயான வர்த்தக ஒப்பந்தமாக இருந்தாலும்கூட, அது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கும் நன்மை பயப்பதாக இருத்தல் வேண்டும் என்பது வலியுறுத்தப்பட வேண்டிய விஷயமாகும்.

எஸ். கோபாலகிருஷ்ணன்

No comments: