Sunday, May 1, 2011

கல்பாக்கத்தில் மேலும் இரு அதிவேக ஈனுலைகள் அமைக்க முடிவு.


கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மேலும் இரு அதிவேக ஈனுலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் இயக்குநர் பல்தேவ்ராஜ். இவர் ஏப்ரல் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இந்த அணுமின்நிலையத்தில் புதிய இயக்குநராக சுபாஸ் சந்திரசேதல் பொறுப்பேற்கிறார்.

இவர்கள் இருவரும் கூட்டாக ஞாயிற்றுக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

கல்பாக்கத்தில் பாவினி அதிவேக ஈனுலை ரூ.5,627 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் முடிந்து 2012-ல் இந்த ஈனுலை மின் உற்பத்தியை தொடங்கும். இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை ரூ.4.45-க்கு எங்களால் வழங்க முடியும். இவையல்லாமல் மேலும் இரு அதிவேக ஈனுலைகள் இங்கு அமைக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஜப்பான் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட அணுமின் நிலைய விபத்தை தொடர்ந்து சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இங்கு அதுபோல் ஏதேனும் சம்பவம் ஏற்பட்டால் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இதுதொடர்பாக ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு கொடுக்கும் பரிந்துரையின் அடிப்படையில் மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும்.

கல்பாக்கம் அணுமின்நிலையம் கடல் மட்டத்தில் இருந்து இரண்டரை மீட்டர் உயரத்தில் உள்ளது. அதிவேக ஈனுலை(பாவினி) நான்கரை மீட்டர் உயரத்தில் உள்ளது. இதனால் நிலநடுக்கம் போன்ற சமயங்களில் கடல் நீர் உள்ளே சென்று இப்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை.

இங்கு மின்சாரத் தடை ஏற்பட்டால் மொபைல் ஜெனரேட்டர்கள் உள்ளன. மின்தடை ஏற்படும் பகுதியில் மொபைல் ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் கொடுக்க முடியும். இங்குள்ள சென்னை அணுமின் நிலையத்துக்கும் இந்த மொபைல் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

இப்பேட்டியின்போது பாவினி அணுமின்திட்ட இயக்குநர் பிரபாத்குமார், சென்னை அணுமின்நிலைய இயக்குநர் ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.


No comments: