Sunday, May 1, 2011

ஐ.டி. சேவை துறைகளில் 2.50 லட்சம் பேருக்கு வேலை: நாஸ்காம் அமைப்பு மதிப்பீடு.


நடப்பு நிதி ஆண்டில் தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) மற்றும் அது சார்ந்த சேவைத் துறைகளில் புதிதாக 2.50 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என நாஸ்காம் அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் தகவல் தொழில்நுட்ப சேவைகளுக்கான தேவைப்பாடு அதிகரித்து வருகிறது. உலகப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ள நிலையில் பல்வேறு அரசு அமைப்புகளும், தனியார் நிறுவனங்களும் தகவல் தொழில்நுட்ப வசதிகளுக்காக செலவிடும் தொகை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டு ஐ.டி. நிறுவனங்களுக்கு வளமான வர்த்தக வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

இந்நிலையில் ஐ.டி. மற்றும் அது சார்ந்த துறைகளில் புதிய பணியாளர்களுக்கான தேவைப்பாடும் உயரத் தொடங்கியுள்ளது. டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பல சாஃப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனங்கள் முழு வீச்சில் ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

இத்துறையில் முன்னணியில் உள்ள நான்கு நிறுவனங்கள் மட்டும், நடப்பு நிதி ஆண்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரை பணியில் அமர்த்த உள்ளன என நாஸ்காம் அமைப்பு தெரிவித்துள்ளது.

சாஃப்ட்வேர் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 60,000 புதியவர்களை பணியில் அமர்த்தப் போவதாக கூறியுள்ளது. மகிந்திரா சத்யம் நிறுவனம் 18,000 பேரை சேர்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. ஐ.டி. சேவை துறைகளில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதில் புதுடெல்லி, மும்பை, ஐதராபாத் மற்றும் பூனா ஆகிய நகரங்கள் முன்னிலை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில், கடந்த 2010-11ஆம் நிதி ஆண்டில் ஐ.டி. மற்றும் பீ.பி.ஓ. துறைகள் 19 சதவீதம் வளர்ச்சி கண்டு, ஒட்டுமொத்த அளவில் 7,600 கோடி டாலர் வருவாய் ஈட்டியுள்ளன. நடப்பு நிதி ஆண்டிலும் சிறப்பான வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும் அண்மைக் காலத்தில் ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக சில இடர்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உலக பொருளாதாரம் வளர்ச்சி கண்டு வந்தாலும் நிறுவனங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றன என நாஸ்காம் குறிப்பிட்டுள்ளது.

No comments: