Sunday, May 1, 2011

மின் தட்டுப்பாடு, நூல் விலை உயர்வு : 70 ஆயிரம் நெசவாளர்கள் வேலை இழக்கும் அபாயம்.



மின்சாரத் தட்டுப்பாடு, நூல் விலை உயர்வால் விசைத்தறி நெசவாளர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். இதனால் திருத்தணி பகுதியில் 70 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருத்தணி பகுதியில் உள்ள பொதட்டூர்பேட்டை, சொரக்காய்பேட்டை, வங்கனூர், அம்மையார்குப்பம், அத்திமஞ்சேரிப்பேட்டை, ஆர்.கே.பேட்டை, மத்தூர், புச்சிரெட்டிப்பள்ளி, வீரமங்களம், சுற்றுப்புற கிராமங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன.

இத் தொழிலை நம்பி 70 ஆயிரம் விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர். இப்பகுதி விசைத்தறிகளில் காட்டன் ரக வேட்டிகள், புட்டா, கோர்வை, கட்டம், பிளைன் ரக காட்டன் சேலைகள் மற்றும் லுங்கிகள், தமிழக அரசு வழங்கும் இலவச வேட்டி-சேலை திட்டத்துக்கான துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

உற்பத்தி செய்யப்படும் சேலைகள் ஈரோடு ஜவுளி சந்தைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் போன்ற வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் நூல் விலையும், மின்வெட்டு காரணமாகவும் விசைத்தறி நெசவாளர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். மார்க்கெட்டில் நிலவும் கடும் போட்டியால், நூல் விலை உயர்வை காட்டி உற்பத்தியான ஜவுளிகளுக்கு கூடுதல் விலை வைத்து விற்க முடியவில்லை.

தினசரி 12 மணி நேர சுழற்சி முறையில் விசைத்தறிகள் இயக்கப்படுகின்றன. ஒரு விசைத்தறியில் 12 முதல் 15 மீட்டர் வரை நெசவு செய்யப்படுகிறது. ஒரு தறி இயக்கினால் ரூ. 75 முதல் ரூ. 100 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். அறிவிக்கப்பட்ட மின் தடை 3 மணி நேரம், அறிவிக்கப்படாத மின் தடை 6 மணி நேரம்.

இதனால் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதால் நெசவுத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கஞ்சி தொட்டி திறக்கும் நிலை: தற்போது ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாடால் 30 மீட்டர் துணி உற்பத்தி குறைந்துள்ளது. மின் வெட்டால் 70 ஆயிரம் விசைத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதே நிலைமை நீடித்தால் வருமானம் இழப்பு ஏற்ப்பட்டு கஞ்சித் தொட்டி திறக்கும் நிலை ஏற்படும் என நெசவாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து நெசவாளர் ஒருவர் கூறும்போது: நூல் ஏற்றுமதி செய்யப்படுவதால் நூல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால், லுங்கிகள் உற்பத்தி செய்ய முடியவில்லை. மின்வெட்டு காரணமாக தறி ஒன்றுக்கு 30 மீட்டர் துணி உற்பத்தி குறைந்துள்ளது. விசைத்தறி உபத் தொழிலான பாவு ஓட்டுவதற்கும் மின்சாரம் தேவைப்படுகிறது. டப்பா மிஷினில் நூல் சுற்றுவோர் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். தற்போது ஏற்படும் மின்வெட்டால் ஒரு நாளைக்கு ரூ. 40 கூட வருமானம் வருவதில்லை.

நூல் விலையை குறைக்க வேண்டும், சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரி வருகிறோம். மத்திய, மாநில அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

No comments: