Sunday, May 1, 2011

ரூ. 214 கோடி கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க கலைஞர் டி.வி.க்கு பணம் எங்கிருந்து வந்தது ? ஜெயலலிதா.


மும்பையைச் சேர்ந்த டிபி ரியாலிட்டி நிறுவனத்திடமிருந்து பெற்ற ரூ.214 கோடி கடனைவட்டியுடன் உடனடியாகத் திருப்பிக் கொடுக்க கலைஞர் டி.வி.க்கு பணம் எங்கிருந்து வந்தது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2ஜி அலைக்கற்றை ஊழலை விசாரித்து வரும் சிபிஐ-யின் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள தனது மகள் கனிமொழியை காக்கும் வகையில், தனக்கே உரிய பாணியில் குழப்பமூட்டும் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் கருணாநிதி.

2ஜி அலைக்கற்றை ஊழல் பற்றிய முதல் செய்திகள் மற்றும் இந்த ஊழலில் மத்திய தொலைத் தொடர்பு முன்னாள் அமைச்சர் ராசாவுக்கு உள்ள பங்கு பற்றிய தகவல்கள் ஆகியவை எந்த எதிர் தரப்பு ஊடகங்களிலும் முதல் முதலாக வரவில்லை. மாறாக, கருணாநிதியின் பேரன்களுக்கு சொந்தமான தொலைக்காட்சியான சன் டி.வி.யில்தான் இது முதன் முதலில் ஒளிபரப்பப்பட்டது.

அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கத்துடன், திமுகவுக்கு எதிரான கட்சி ஆட்சி புரியும் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மத்திய புலனாய்வு துறை அலைக்கற்றை ஊழல் வழக்கை தாக்கல் செய்யவில்லை. மாறாக திமுக முக்கிய பங்காற்றுகின்ற மத்திய அரசின் அறிவுரையின் பேரில்தான் மத்திய புலனாய்வுத் துறை இந்த வழக்கினை தாக்கல் செய்திருக்கிறது.

80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட வலுவான ஆதாரங்களின் ஆவணங்களின் அடிப்படையில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நான் இப்போது ஒரு சில கேள்விகளை கருணாநிதியிடம் கேட்க விரும்புகிறேன்.

கம்பெனிகள் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களின்படி, கலைஞர் டி.வி. நிறுவனத்தில் தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகள் உள்ளன என்பது தெரிகிறது. இந்த அளவு பங்கினை வைத்துக் கொள்வதற்கான நிதி ஆதாரம் குறித்த விவரங்கள் என்ன? இந்த டி.வி.யில் எவ்வளவு பணத்தை தயாளு அம்மாள் முதலீடு செய்தார்? இந்த டி.வி. சேனலில் இந்த அளவுக்கு முதலீடு செய்யும் அளவுக்கு தயாளு அம்மாளுக்கு நிதி எங்கிருந்து கிடைத்தது?

தனிப்பட்ட முறையில் தயாளு அம்மாள் இதில் பங்குதாரராக இருக்கிறாரா? அல்லது கருணாநிதி குடும்பத்தின் தன்னுடைய கிளையின் பிரதிநிதியாகச் செயல்படுகிறாரா?

20 சதவீத பங்குளை வைத்திருக்கும் கனிமொழி இந்த டி.வி.யில் எவ்வளவு முதலீடு செய்தார்? இந்த அளவுக்கு முதலீடு செய்வதற்கு கனிமொழிக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது? தனிப்பட்ட முறையில் கனிமொழி இதில் பங்குதாரராக இருக்கிறாரா? அல்லது கருணாநிதி குடும்பத்தின் இரண்டாவது கிளையின் பிரதிநிதியாகச் செயல்படுகிறாரா?

கலைஞர் டிவியில் இயக்குநராக இருக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி தராததையடுத்தே கனிமொழியால் அதில் இயக்குநராக நீடிக்க முடியவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் இயக்குநராக இருப்பதற்கு எந்த சட்டமும் தடை விதிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் தொலைத் தொடர்பு நிறுவனத்துடன் கனிமொழி தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியதற்கான காரணங்கள் என்ன?

புதிதாக தொடங்கப்பட்ட கலைஞர் டி.வி.யில் இவ்வளவு பெரிய தொகையை மும்பையைச் சேர்ந்த டி.பி. ரியாலிட்டி கட்டுமான நிறுவனம் ஏன் முதலீடு செய்தது?

அலைக்கற்றை வழக்கை சிபிஐ விசாரிக்க தொடங்கியுடன் டிபி ரியாலிட்டிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை உத்தரவாதமற்ற கடனாக மாற்றி அதனை உடனடியாக ஒப்படைப்பு செய்ய கலைஞர் டி.வி. ஏன் திடீர் முடிவு எடுத்தது?

திடீரென இந்தக் கடனை வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும் அளவுக்கு கலைஞர் டி.வி.க்கு பணம் எங்கிருந்து கிடைத்தது?

எனவே ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் என்பது உண்மையாக நடந்த ஒன்று. முன்னாள் அமைச்சர் ராசாவும் கருணாநிதி குடும்பத்தினரும் இதன் மூலம் பயனடைந்துள்ளனர்.

எனவே கனிமொழியை மட்டும் குற்றப் பத்திரிகையில் சேர்த்ததன் மூலம் சிபிஐ தன்னுடைய பணியை சரிவர செய்யவில்லை. நீதியை நிலைநாட்ட வேண்டுமானால் கருணாநிதி குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற வேண்டும்.

No comments: