Tuesday, May 10, 2011

பின்லேடனை வளர்த்து விட்டது அமெரிக்காதான் : பாகிஸ்தான் பிரதமர் கிலானி குற்றச்சாட்டு.


பின்லேடனை வளர்த்து விட்டது யார்? பின்லேடனின் வளர்ச்சிக்கு அமெரிக்காவே காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் கிலானி குற்றம் சாட்டியுள்ளார்.

தலிபான் மற்றும் அல்-காய்தா இயக்கங்களுக்கு 90-களின் தொடக்கத்தில் அமெரிக்கா ஆதரவளித்ததை சுட்டிக் காட்டியிருக்கும் பாகிஸ்தான், "ஒசாமா பின் லேடன் விவகாரத்தில் எங்களை மட்டுமே பொறுப்பாக்கக் கூடாது' என்று கூறியுள்ளது.

பாகிஸ்தானில் அமெரிக்க படைகளின் தாக்குதலில் பின்லேடன் கொல்லப்பட்டார். இதுபற்றி, பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி, அந்நாட்டு பாராளுமன்றத்தில் 09.05.2011 அன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

பின்லேடன் கொலை மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இருப்பினும், அதை வெற்றியாக அறிவிக்க பாகிஸ்தான் விரும்பவில்லை. பாகிஸ்தானில் எண்ணற்ற தீவிரவாத தாக்குதல்கள் மூலம் பலரின் சாவுக்கு காரணமாக இருந்தவர், பின்லேடன். அவரது சாம்ராஜ்யம் அழிக்கப்பட வேண்டும்.

தீவிரவாத எதிர்ப்பு போரில், பாகிஸ்தான் ராணுவம் 30 ஆயிரம் பேரை இழந்துள்ளது. இருப்பினும், இப்போருக்கு தேசிய முக்கியத்துவம் அளிக்கிறது. தனது மண்ணில் தீவிரவாத செயல்களை அனுமதிக்காது. பாகிஸ்தான் மக்களை போல, எந்த நாட்டு மக்களும் இத்தனை சவால்களை சந்தித்து இருக்க மாட்டார்கள்.

பின்லேடனை கொல்வதற்காக, பாகிஸ்தானுக்குள் புகுந்து அமெரிக்க படைகள் தன்னிச்சையாக தாக்குதல் நடத்தியதை ஏற்க முடியாது. இது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும். இந்த தாக்குதல் பற்றி ராணுவ அதிகாரி ஜாவீது இக்பால் விசாரணை நடத்துவார். பாகிஸ்தான் ராடார்களால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அமெரிக்கா தனது தொழில்நுட்ப திறமையை காட்டியுள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள், ரகசியமாகவோ, வெளிப்படையாகவோ நடத்தப்பட்டால், அதற்கு பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்கும். முழுபலத்துடன் பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது. இதுபோன்ற அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கான கொள்கையை வகுக்க, வருகிற 13 ந் தேதி பாராளுமன்ற கூட்டு கூட்டம் நடைபெறும்.

பின்லேடன் விவகாரத்தில், பாகிஸ்தானை திறமையற்றதாக கருத முடியாது. பின்லேடன் மறைந்து வாழ நாங்கள் உடந்தையாக செயல்பட்டதாக கூறுவது முட்டாள்தனமானது. அல் கொய்தாவுடன் நெருக்கமாக செயல்பட்டதாக பாகிஸ்தான் மீதோ, அதன் உளவுப்படை மீதோ குற்றம் சாட்டுவது வஞ்சகமானது. சொல்லப்போனால், எங்கள் உளவுப்படையான ஐ.எஸ்.ஐ. துப்பு கொடுத்ததால்தான், அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி, பின்லேடனை கொல்ல முடிந்தது.

பின்லேடனின் இருப்பிடத்தை உலக நாடுகளின் உளவுத்துறைகளாலேயே கண்டுபிடிக்க முடியாதபோது, ஐ.எஸ்.ஐ.யின் பங்கு பாராட்டத்தக்கது. ஐ.எஸ்.ஐ., இந்த நாட்டின் சொத்து. தீவிரவாத எதிர்ப்பு போரில் அதன் பங்கு மகத்தானது. இந்த போரில், பாகிஸ்தான் அரசு அமைப்புகளிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அனைத்தும் இணக்கமாக செயல்படுகின்றன.

அல் கொய்தா உதயமானது, பாகிஸ்தானில் அல்ல. பின்லேடனை பாகிஸ்தானுக்கோ அல்லது ஆப்கானிஸ்தானுக்கோ நாங்கள் அழைத்து வரவில்லை. ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் ஆதரவுடன் விடுதலை இயக்கம் தோன்றியது. அதுவே, பின்னர் அல் கொய்தாவாக மாறியது. எனவே, பின்லேடனின் வளர்ச்சிக்கு அமெரிக்காவே காரணம். மற்றவர்களின் தவறுகளுக்கும், தவறான கொள்கைகளுக்கும் எங்களை குற்றம் சாட்டுவது சரியல்ல.

அதே சமயத்தில், அமெரிக்காவுடனான உறவுக்கு நாங்கள் உயர் முக்கியத்துவம் அளிக்கிறோம். எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரியின் பாகிஸ்தான் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறோம்.

வல்லரசு நாடுகளுடனும், அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தானின் உறவு நன்றாக இருக்கிறது. இந்தியாவுடனான பாகிஸ்தானின் நல்லுறவு, இருநாட்டு மக்களுக்கும் பலனளிக்கும். இவ்வாறு கிலானி பேசினார்.

No comments: