Tuesday, May 10, 2011

பி.இ., எம்.பி.பி.எஸ். கட்-ஆப் மார்க் 0.5 முதல் 1 வரை உயர்கிறது.

மருத்துவம், என்ஜினீயரிங் படிப்புக்கான `கட்-ஆப்' மார்க் உயருகிறது

மருத்துவம் (எம்.பி.பி.எஸ்.), பல் மருத்துவம் (பி.டி.எஸ்.), விவசாயம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேருவதற்கு பிளஸ்-2 தேர்வில் உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களின் மதிப்பெண்கள் கட்-ஆப் மார்க்கிற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இதேபோல், என்ஜினீயரிங் படிப்பு எனில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களின் மதிப்பெண்கள் கணக்கிடப்படுகின்றன. இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் உயிரியல் பாடத்தில் 615 பேரும், கணிதத்தில் 2,720 பேரும், இயற்பியலில் 646 பேரும், வேதியியலில் 1,243 பேரும் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

ஆனால், கடந்த ஆண்டு உயிரியலில் 258 பேரும், கணக்கில் 1,762 பேரும், இயற்பியலில் 231 பேரும், வேதியியலில் 741 பேரும் மட்டுமே 200-க்கு 200 மார்க் எடுத்திருந்தனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த வருடம், கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து இருக்கிறது.

இது மட்டுமல்லாமல், 200 முதல் 185 மார்க் வரை உள்ள மாணவர்களின் எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் உள்ளது. இதன் காரணமாக, தொழிற்கல்வி படிப்புகளில் சேருவதற்கான கட்-ஆப் மார்க் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 0.5 முதல் 1 மார்க் வரை அதிகரிக்கும். தமிழகத்தில் 486 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பி.இ., பி.டெக். இடங்கள் இருக்கின்றன.

அதில் அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்கள் 1 லட்சத்து 15 ஆயிரம் ஆகும். இதேபோல், மொத்தமுள்ள 17 அரசு மருத்துவ கல்லூரிகளில் 1,653 எம்.பி.பி.எஸ். இடங்களும், 8 தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிற்கு 635 சீட்டுகளும் உள்ளன. மேலும், அரசு பல் மருத்துவ கல்லூரியில் 85 பி.டி.எஸ். இடங்களும், தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிற்கு 891 பி.டி.எஸ். சீட்டுகளும் இருக்கின்றன.

இந்த வருடம் சென்னை மருத்துவ கல்லூரியிலும், அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரியிலும் தலா 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளன. அதற்கான ஆய்வை இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) நடத்தி சென்றுள்ளது. இந்த சூழ்நிலையில், இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றிருப்பதால் என்ஜினீயரிங், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளுக்கு கட்-ஆப் மார்க் உயருகிறது.

என்ஜினீயரிங், மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் 16-ந் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. விவசாயம், தோட்டக்கலை, வனவியல் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது.

No comments: