Tuesday, May 10, 2011

பின்லேடன் வேட்டையின்போது தேவைப்பட்டால் பாகிஸ்தான் படையினரைத் தாக்கவும் உத்தரவிட்ட ஒபாமா.


பின்லேடன் வேட்டையின்போது அதைத் தடுக்க பாகிஸ்தான் போலீஸாரோ அல்லது படையினரோ முயன்றால் அவர்களைத் திருப்பித் தாக்கவும், அமெரிக்க சீல் படையினருக்கு அதிபர் ஒபாமா உத்தரவிட்டிருந்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானின் அபோத்தாபாத்தில் ஒரு வீட்டில் கடந்த பல வருடங்களாக ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வந்த பின்லேடனை சமீபத்தில் அமெரிக்க கடற்படையின் சீல் வீரர்கள் வேட்டையாடிக் கொன்றனர்.

இந்த வேட்டை தொடர்பான பல்வேறு செய்திகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.

பின்லேடன் வேட்டைக்கு முதலில் சில வீரர்களை மட்டுமே முடிவு செய்யப் பட்டிருந்தது. இருப்பினும் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டார். இதற்கு முக்கியக் காரணம், வேட்டையின்போது, பாகிஸ்தான் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டால் என்ன செய்வது என்பதால்.

பாகிஸ்தான் போலீஸ் தரப்பிலோ அல்லது ராணுவத்தின் சார்பிலோ அமெரிக்கப் படையினரைத் தடுக்க முயன்றால் அல்லது தாக்குதல் தொடுத்தால் திருப்பித் தாக்குமாறும் அமெரிக்கப் படையினருக்கு ஒபாமா உத்தரவிட்டிருந்தார் என்ற பரபரப்புத் தகவலும் வெளியாகியுள்ளது.

ஒரு வேளை அப்படி நடந்திருந்தால் அது இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பதட்டத்தையும், பாகிஸ்தானை அமெரிக்கா உண்டு இல்லை என்று பண்ணியிருக்க வாய்ப்பு ஏற்படுத்தியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அமெரிக்கப் படையினர் அதிவிரைவாக செயல்பட்டதால் தங்களது ஆபரேஷனை வேகமாக முடித்து விட்டு பின்லேடன் உடலோடு பறந்து விட்டனர்.

அவர்கள் போன பின்னர்தான் அந்த இடத்திற்கு பாகிஸ்தான் ராணுவத்தினரும், போலீஸாரும் வந்துள்ளனர்.

முன்னதாக தங்களது எல்லைக்குள் மர்ம ஹெலிகாப்டர்கள் ஊடுறுவியதை பாகிஸ்தான் படையினர் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அவை எங்கே போனது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. அதைக் கண்டுபிடித்து முடிப்பதற்குள் அமெரிக்கா தனது வேலையை முடித்து விட்டது.

மேலும் பாகிஸ்தானுக்குள் போன ஹெலிகாப்டர்கள் தவிர பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் இரண்டு தாக்குதல் ஹெலிகாப்டர்களையும், அதிக அளவிலான வீரர்களையும் அமெரிக்கா தயார் நிலையில் வைத்திருந்தது. பாகிஸ்தானுக்குள் போன அமெரிக்க வீரர்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அவர்களிடமிருந்து உதவி கோரி அழைப்பு வந்தால் மின்னல் வேகத்தில் அங்கு சென்று தாக்குதல் நடத்த அவர்கள் ஆயத்தமாக இருந்தனர். ஆனால் அதற்கான வாய்ப்பை பின்லேடன் வேடையில் ஈடுபட்டவர்கள் வைக்கவில்லை.

No comments: