Tuesday, May 10, 2011

10 ஆண்டுகளுக்கு முன்பே பின்லேடன் வேட்டைக்கு அனுமதி கொடுத்தார் முஷாரப்?


பத்து ஆண்டுகளுக்கு முன்பே, பின்லேடனை வேட்டையாடுவது தொடர்பாக அமெரிக்காவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டதாகவும், இதுதொடர்பாக அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும், பாகிஸ்தானில் அதிபராக இருந்த முஷாரப்பும் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கப் படைகளின் தாக்குதலிலிருந்து தப்பி டோரா போரா மலைப் பகுதியை விட்டு பின்லேடன் இடம் பெயர்ந்ததைத் தொடர்ந்து இந்த ரகசிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பாகிஸ்தானில் பின்லேடன் எங்காவது தென்பட்டால் அவனை அமெரிக்கப் படையினர் வேட்டையாடுவார்கள், அதை பாகிஸ்தான் அனுமதிக்கும் என்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளதாம். அதன் அடிப்படையில்தான் தற்போது பின்லேடனை 'சோலோ'வாக வந்து வேட்டையாடி விட்டுப் போயுள்ளது அமெரிக்கா என்கிறார்கள்.

இந்த ரகசிய ஒப்பந்தம் காரணமாகவே இப்போது அமெரிக்காவுக்கு எதிராக பெரிய அளவில் குரல் கொடுக்க முடியாத இக்கட்டான நிலையில் பாகிஸ்தான் இருப்பதாக கூறுகிறார்கள்.

இந்த ரகசிய ஒப்பந்தப்படி, பாகிஸ்தான் மண்ணில் பின்லேடனோ அல்லது அல் ஜவாஹிரியோ இருப்பது தெரிய வந்தால் அங்கு அமெரிக்கப் படைகள் நுழைந்து இருவரையும் தனியாகவே வேட்டையாடும். இதை பாகிஸ்தான் அனுமதிக்கும். எதிர்ப்பு தெரிவிக்காது. அதன்பின்னர், இஸ்லாமிய நாடுகள் மத்தியில் தனது பெயரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அமெரிக்காவை எதிர்த்து பாகிஸ்தான் குரல் கொடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

ஓய்வு பெற்ற பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்துள்ளதாக அந்த மீடியா செய்தி தெரிவிக்கிறது.

இதுகுறித்து ஒரு மூத்த அமெரிக்க முன்னாள் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு அதிகாரி கூறுகையில், புஷ்ஷுக்கும், முஷாரப்புக்கும் இடையே ஏற்பட்ட இந்த ரகசிய ஒப்பந்தம் குறித்து அதிபர் ஒபாமாவுக்கு நன்றாகத் தெரியும். மேலும் ஒசாமா எங்கு ஒளிந்திருக்கிறார் என்பதும் முன்பே அமெரிக்காவுக்குத் தெரியும். நல்ல சமயத்திற்காக நாங்கள் காத்திருந்தோம் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ரகசிய ஒப்பந்தத்தின்படியே தற்போது அத்தனையும் நடக்கிறது. எங்களது தாக்குதல் குறித்து வெளியுலகில் குய்யோ முறையோ என்று பாகிஸ்தான் கூச்சல் போடுவதும் கூட இந்த ரகசிய ஒப்பந்தத்தின்படிதான். இது குறித்து சர்தாரிக்கும், கிலானிக்கும் கூட நன்றாகத் தெரியும் என்றார் அவர்.

மொத்தத்தில் ஒசாமா பின்லேன் வேட்டையில் இன்னும் வெளியுலகுக்குத் தெரியாமல் இருக்கும் ரகசியம் எத்தனையோ...

No comments: