Tuesday, May 10, 2011

மும்பை தாக்குதலுக்கு உதவிய பாகிஸ்தான் அதிகாரிகள்.

மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி மேஜர் இக்பால் உள்ளிட்ட அந்த நாட்டைச் சேர்ந்த 4 பேர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008, நவம்பரில், மும்பையில் தாஜ் ஓட்டல், சத்ரபதி சிவாஜி ரயில் முனையம், ஓபராய் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில், அமெரிக்காவைச் சேர்ந்த ஆறு பேர் உட்பட, 166 பேர் பலியாயினர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுத்த அமெரிக்க வாழ் பாகிஸ்தானியரான டேவிட் கோல்மேன் ஹெட்லியை, அமெரிக்க போலீசார், சிகாகோவில் 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்தனர்.

ஹெட்லி கொடுத்த தகவலின் பேரில், மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு உதவிய மேலும் நான்கு பேர் மீது அமெரிக்க கோர்ட்டில், கடந்த மாதம் 25ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

மும்பை தாக்குதல் சம்பவத்துக்கான ஆயத்த ஏற்பாடுகளை செய்ததாக சஜத் மிர் என்பவன் மீதும், தாக்குதலை நடத்த பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்ததாக அபு குவாபா என்பவன் மீதும், தாக்குதல் சம்பவத்துக்காக நிதி உதவி செய்த மேஜர் இக்பால் என்பவன் மீதும், மஜார் இக்பால் என்பவன் ஹெட்லிக்கு உடந்தையாக இருந்ததற்காகவும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்ட ஹெட்லிக்கு உதவியாக பாகிஸ்தான் ராணுவ மேஜர் சமீர் அலி என்பவரும், மேஜர் இக்பால் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளனர். இவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் இன்டர்போல் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

No comments: