Tuesday, May 10, 2011

பிளஸ் 2 தேர்வில், 1.25 லட்சம் மாணவர்கள் தோல்வி.


பிளஸ் 2 தேர்வில், மூன்று பாடங்கள் வரை, ஒரு லட்சத்து, 25 ஆயிரத்து, 602 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வை, பள்ளிகள் மூலம், ஏழு லட்சத்து, 16 ஆயிரத்து, 543 பேர் எழுதினர். இவர்களில், ஆறு லட்சத்து, 15 ஆயிரத்து, 593 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு லட்சத்து, 950 பேர் தோல்வியடைந்தனர். இவர்களில், ஒன்று முதல், மூன்று பாடங்கள் வரை, தோல்வியடைந்தவர்கள் மட்டும், ஜூன், ஜூலையில் நடக்கும் உடனடித் தேர்வில் பங்கேற்கலாம்.

பள்ளிகள் மற்றும் தனித்தேர்வு மாணவர்கள் ஆகியோரில், மூன்று பாடங்கள் வரை, ஒரு லட்சத்து, 25 ஆயிரத்து, 602 பேர் தோல்வியடைந்துள்ளனர்.

ஒரு பாடத்தில், 70 ஆயிரத்து, 175 பேர், இரு பாடங்களில், 36 ஆயிரத்து, 459 பேர், மூன்று பாடங்களில், 18 ஆயிரத்து, 968 பேர் தோல்வியடைந்துள்ளனர்.

பள்ளி மாணவர்கள்:
மூன்று பாடங்கள் வரை தோல்வியடைந்த பள்ளி மாணவர்கள், அந்தந்த பள்ளிகள் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள், 9ம் தேதியில் இருந்தே வழங்கப்பட்டு வருகின்றன. "எஸ்.எச்.,' என குறிப்பிடப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, 13ம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட பள்ளிகளிலேயே ஒப்படைக்க வேண்டும். தேர்வுக்கான கட்டணத்தையும், பள்ளிகளிலேயே செலுத்த வேண்டும்.

தனித்தேர்வர்கள்: மூன்று பாடங்கள் வரை தோல்வியுற்ற தனித்தேர்வர்கள், அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.வரும் 16 முதல், 20ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 24ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

No comments: