Tuesday, May 10, 2011

பாகிஸ்தானில்தான் வசிக்கிறான் தாவூத் இப்ராகிம்-ப.சிதம்பரம்.


பாகிஸ்தானின் கராச்சி நகரில்தான் தாவூத் இப்ராகிம் வசிக்கிறான். அவனை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது மண்ணை இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கான களமாக பயன்படுத்த அது அனுமதிக்கக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இதுகுறித்து ப.சிதம்பரம் கூறுகையில், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி பாகிஸ்தானில் போய் பதுங்கி வாழ்ந்து வரும் ஒவ்வொரு தீவிரவாதியையும் பிடித்து இங்கே கொண்டு வர சர்வதேச அளவிலான ஆதரவை இந்தியா திரட்ட வேண்டும். அவர்கள் தீவிரவாதியாக இருந்தாலும் சரி, தலைமறைவு குற்றவாளிளாக அறிவிக்கப்பட்டு தேடப்படுபவர்களாக இருந்தாலும் சரி அவர்களை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.

தாவூத் இப்ராகிமை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தாவூத் இப்ராகிம் கராச்சியில்தான் வசிக்கிறான் என்று இந்தியா உறுதியாக நம்பகிறது. எங்கு இருக்கிறான் என்பதும் கூட நமக்குத் தெரியும். ஆனால் தாவூத் பாகிஸ்தானில் இல்லை என்று தொடர்ந்து மறுத்து வருகிறது பாகிஸ்தான்.

இப்படித்தான் பின்லேடன் பாகிஸ்தானில் இல்லை என்று கூறி வந்தது அந்த நாடு. எனவே தாவூத் குறித்து பாகிஸ்தான் கூறும் வார்த்தைக்கு மதிப்பே கிடையாது.

இருப்பினும் சர்வதேச அளவில் நெருக்கடிகள் அதிகரித்தால் பாகிஸ்தான் தனது நிலையிலிருந்து மாறியே ஆக வேண்டிய நிலை ஏற்படும்.

மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளின் குரல் மாதிரிகளை நாம் கேட்டிருந்தோம். ஆனால் பாகிஸ்தான் இழுத்தடித்து வருகிறது.

தற்போது மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்த குற்றப்பத்திரிக்கையை அமெரிக்க அரசு தனது கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. அதில், பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றி வரும் மேஜர் இக்பால் என்பவர் பெயரும், சஜீத் மிர், மஸார் இக்பால், அபு குவாஹா ஆகிய பாகிஸ்தானியர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பாகிஸ்தானின் தீவிரவாத தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார் ப.சிதம்பரம்.

No comments: