Wednesday, May 18, 2011

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் : அண்ணாசாலையில் போலீஸ் தடியடி.

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்:    இந்தியன் ஆயில் நிறுவனத்தில்    புகுந்த கம்யூ. தொண்டர்கள்;    அண்ணாசாலையில் போலீஸ் தடியடி

சென்னை, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் புகுந்த கம்யூனிஸ்டு தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இன்று முற்றுகை போராட்டம் நடந்தது. அண்ணாசாலையில் உள்ள மத்திய அரசின் இந்தியன் ஆயில் நிறுவனத்தை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டனர்.

பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கோஷமிட்டார்கள். வட சென்னை மாவட்ட செயலாளர் விஜயகுமார், தென்சென்னை மாவட்ட செயலாளர் லெனின் ஆகியோர் தலைமையில் போலீஸ் தடையை மீறி இந்த போராட்டம் நடந்தது.

அப்போது சிலர் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கேட்டை உடைத்து தள்ளி விட்டு உள்ளே புகுந்தனர். பாதுகாப்புக்கு நின்ற போலீசாரையும் தள்ளி விட்டு உள்ளே சென்றனர். இதில் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர் கீழே விழுந்தார். இதனால் அவர்களை தடியடி நடத்தி போலீசார் வெளியேற்றினர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் சாலையில் உட்கார்ந்தனர். மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர். மத்திய அரசின் எண்ணை அலுவலகத்தில் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அண்ணாசாலையில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

No comments: