Wednesday, May 18, 2011

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நத்தம் புளி : அறுவடை செய்ய ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் அவதி.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நத்தம் புளி:அறுவடை செய்ய ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் அவதி

வெளிநாடுகளுக்கு நத்தம் பகுதியில் இருந்து புளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது அறுவடை செய்ய ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நத்தம் வட்டாரத்தில் திருமலைக்கேனி, மலையூர், வேம்பார்பட்டி உள்பட பல இடங்களில் ஆயிரக்கணக்கான புளியமரங்கள் உள்ளன. புளியம்பழம் தட்டி விதை நீக்கி தனிப்பழமாக விற்கும் குடிசை தொழில் இங்கு செயல்பட்டு வருகிறது.

இது குறித்து நத்தம் தொகுதி தென்னை, மா, புளி பண்ணையின் அமைப்பாளர் வேம்பார்பட்டி கண்ணுமுகமது, நத்தம் வியாபாரி சேக்முகமது கூறியதாவது:-

நத்தம் பகுதியில் விளையும் நாட்டு புளியம்பழம் தரமுள்ளதாகும். குளிர் சாதன கிட்டங்கி புளி 1 கிலோ ரூ.41, அதே சமயம் விதை நீக்கப்பட்டு பக்குவப்படுத்தப்பட்ட பழங்கள் 1 கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரையிலும் விற்கப்படுகிறது.

நத்தம் உள்ளூர் புளி 1 கிலோ விதை எடுக்கப்பட்டது ரூ.60 முதல் ரூ.65 வரையிலும் விற்கப்படுகிறது. மேலும் நத்தம் பகுதியில் பாகிஸ்தான், தாய்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பெரிய மொத்த கொள்முதல் வியாபாரிகள் வந்து நத்தம் வட்டாரத்தில் கொள்முதல் செய்கின்றனர். இந்த வருடம் விளைச்சல் குறைவு. கடந்த வருடம் சரியான அளவில் பருவமழை பெய்யவில்லை. இதனால் மகசூல் குறைந்து போனது. தமிழ்நாடு அளவிலும் மற்ற மாநிலங்களிலும் விளைச்சல் மந்தமானது.

கடந்த வருடத்தை விட இந்த வருடம் விலை உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் வரத்து குறைவு. மேலும் புளியம்பழம் அறுவடை செய்ய கூலி ஆட்கள் கடும் தட்டுப்பாடு அடைந்துள்ளனர்.இதனால் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வியாபாரிகளும் கவலை கொண்டுள்ளனர்.

No comments: