Wednesday, May 18, 2011

சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களில் திருத்தம் செய்ய முடிவு ; அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை.

சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களில்    திருத்தம் செய்ய முடிவு;    அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

சமச்சீர் பாடப் புத்தகங்களில் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. 1 முதல் 10-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டம் வருகிற கல்வி ஆண்டில் செயல்படுத்தப்படுகிறது.எல்லா குழந்தைகளும் ஒரே பாடத்திட்டத்தை படிக்கக் கூடிய வகையில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த ஆண்டு முதல் முழுமையாக இத்திட்டம் செயல்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக 8 கோடி பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் புதிதாக அ.தி.மு.க. அரசு ஆட்சி அமைத்ததை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையில் சில மாற்றங்களை செய்ய முன் வந்துள்ளது. உயர் அதிகாரிகள், இயக்குனர், இணை இயக்குனர்கள் விரைவில் மாற்றப்படுகிறார்கள். இதன் ஒரு பகுதியாக சமச்சீர் பாடப்புத்தகத்திலும் சில மாற்றங்களை கொண்டு வருவதாக தெரிகிறது.

10-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதிய கவிதைகள், கட்டுரைகள் இடம் பெற்றுள்ளது. 10-ம் வகுப்பு சமச்சீர் தமிழ் புத்தகத்தில் 4 பக்கத்தில் கலைஞரின் “செம்மொழி” பாடல் இடம் பெற்றுள்ளது. 17 பக்கத்தில் செம்மொழி அந்தஸ்தை பெற முயற்சி என்ற தலைப்பில் ஒரு குறிப்பு உள்ளது. 89-ம் பக்கத்தில் தூய தமிழில் கட்டுரை இடம் பெற்றுள்ளது. மாணவர்கள் கூடுதலாக படிக்கும் திறன் பற்றிய பயிற்சி முன்னாள் முதல்வர் எழுதிய கட்டுரை அடங்கி உள்ளது. 100-ம் பக்கத்தில் போர்க்களத்தில் மகனுக்கு வீரத்தை எடுத்துரைக்கும். தாய் பற்றிய பயிற்சியும் இடம் பெற்றுள்ளது.

இந்த பாடத் திட்டங்களை சிலவற்றை திருத்தவோ அல்லது நீக்கவோ பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்கிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் இன்று நடந்தது. கல்வி அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இயக்குனர்கள் வசுந்தராதேவி, அறிவொளி, தேவராஜன், மணி, வசந்தி, ஜீவாகனந்தம், தமிழ்நாடு பாடநூல் நிர்வாக இயக்குனர் ஜீவானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதிகாரிகளிடம் சமச்சீர் பாடப்புத்தகங்களில் வினியோகம் செய்தல், தேவையற்ற பாடங்களை நீக்குதல், அல்லது திருத்தம் செய்தல் போன்றவை குறித்து அமைச்சர்கள் நீண்ட நேரம் கருத்துக்கள் கேட்டறிந்தார். சமச்சீர் பாடப்புத்தகம் பெரும்பாலான அரசு பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு விட்டன. தனியார் பள்ளிகளுக்கு மட்டும் வழங்க வேண்டும். இத்தகைய சூழலில் மாணவர்களை பாதிக்காமல் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

2 comments:

மதுரை சரவணன் said...

பாடநூல் விநியோகிக்கும் முன் திருத்தம் கொண்டு வந்தால் நலம்... ஆனால் பாட நூல்கள் மாவட்டங்களுக்கு அனுப்ப வட்டுவிட்டன என அறிய வருகின்றேன். பகிர்வுக்கு நன்றி .வாழ்த்துக்கள்

பொன் மாலை பொழுது said...

குறிப்பிட்ட பாடங்கள் தேர்வுக்கு இல்லை என்று அறிவித்துவிட்டு அடுத்த வருட கல்வியாண்டில் இவகைகளை நீக்கிவிட்டு புதிய புத்தகங்கள் தயார்செய்யலாம்.