Wednesday, May 18, 2011

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு இந்தியா கடும் கண்டனம்.


தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு இந்தியா சார்பில் இலங்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

3 நாள் பயணமாக இந்தியா வந்த இலங்கை வெளியுறவு மந்திரி ஜி.எல்.பெரீஸ், டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங், நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி ஆகியோரைச் சந்தித்து பேசினார். வெளியுறவு துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவுடன், பிரதிநிதிகள் குழுவினருடன் பெரீஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையின்போது, தமிழக மீனவர்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் தொடர் தாக்குதல்களுக்கு இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்குப்பின் இரு நாடுகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், "அனைத்து மீனவர்களும் மனிதாபிமான முறையில் நடத்தப்படுவார்கள். எந்த சூழ்நிலையிலும் மீனவர்களுக்கு எதிராக பலப்பிரயோகம் செய்வதை நியாயப்படுத்த முடியாது என்று இந்தியாவும், இலங்கையும் ஒப்புக்கொண்டு இருப்பதாக'' குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் கொண்டுவருவதன் அவசியம் குறித்து உடன்பாடு ஏற்பட்டு இருப்பதுடன், விரிவுபடுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியாவின் சட்டபூர்வ உரிமை கோரிக்கைக்கு பலமான ஆதரவை இலங்கை மீண்டும் உறுதி செய்து இருப்பதாகவும் கூட்டறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போரின்போது அகதிகளாக இடம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் தங்கள் சொந்த இடத்தில் குடியமர்த்தி, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டிய அவசியம் குறித்து, நெருக்கடி நிலை சட்டங்களை விரைவில் வாபஸ் பெற்று மனித உரிமைகள் மீறல் குறித்த விசாரணையை தொடங்க வேண்டும் என்றும், இந்தியா தரப்பில் வற்புறுத்தப்பட்டு உள்ளது.

இந்த பணியில் இலங்கை அரசு அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபட்டு வருவதாக, பெரீஸ் மீண்டும் உறுதி அளித்தார்.

இது தொடர்பாக தமிழர் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இலங்கை அரசு நடத்திவரும் பேச்சுவார்த்தை மற்றும் அதிகார பகிர்வு திட்டத்தின் மூலம் உறுதியான விரைந்த தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 19-ந் தேதி முடிவுக்கு வந்த இறுதிகட்ட போரின்போது ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் மூலம் இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்ததாக ஐ.நா. சபையின் நிபுணர் குழு குற்றம் சாட்டி இருந்தது. இதுகுறித்து சுதந்திரமான அமைப்பு மூலம் விசாரணை நடத்தவும் அந்த குழு சிபாரிசு செய்து இருந்தது.

இலங்கை மந்திரி பெரீசின் 3 நாள் இந்திய பயணம் நேற்று முடிவடைந்த நிலை குறித்து, ஐ.நா. சபையில் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை அரசின் நிலை குறித்து இந்தியாவிடம் தெரிவித்தாரா? என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

1 comment:

Anonymous said...

தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கின்றனவே.. பார்ப்போம் சிங்களவன் பேச்சுக் குடிக்காரன் பேச்சு. நடக்கின்றதா இல்லையா என?