Wednesday, May 18, 2011

பதவியேற்பு விழா - வைகோவுக்கு முதல் வரிசையில் நாற்காலி ஒதுக்கிய ஜெ !


ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்கும் விழாவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கும் அழைப்பி வைக்கப்பட்டிருந்தது. முதல் வரிசையில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்தத் தகவலை தனது கட்சியின் உயர் மட்டக் குழுக் கூட்டத்தில் வைகோவே தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்த மதிமுக நடத்திய கூட்டத்தில் பேசிய வைகோ,

தேர்தல் முடிவு எதிர்பார்க்காத ஒன்று தான். தேர்தல் தோல்வியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் நடந்த ரகளை பற்றி அனைவருக்கும் தெரியும். நமது கட்சியில் அப்படியொரு வன்முறை சம்பவத்திற்கு யாரும் இடம் கொடுக்கவில்லை. ஏதாவது ஒரு சம்பவம் நடந்து விடுமோ என்ற அச்சம் எனக்கு இருந்தது. அனைவரது மனதிலும் ஊமை காயம் உள்ளது.

கடந்த ஐந்தாண்டு காலமாக திமுக அரசை கடுமையாக நாம் எதிர்த்தோம். அதற்குரிய பலனை அவர்கள் அனுபவித்து வருகின்றனர். இனி நாம் திமுக தலைவர் கலைஞரை விமர்சிக்க வேண்டியது இல்லை. அதேபோல் ஜெயலலிதாவையும் நாம் விமர்சிக்க வேண்டாம்.

கடந்த ஐந்தாண்டுகளாக நாம் அதிமுகவுக்கு உறுதுணையாக இருந்தோம். முதல்வர் பதவி ஏற்பு விழாவிற்கு கூட எனக்கு அழைப்பிதழ் அனுப்பி வைத்துள்ளனர். நான் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தேன். வீட்டின் வேலைக்கார பெண் தான் அழைப்பிதழை பெற்றுள்ளார். பதவி ஏற்பு விழாவில் முதல் வரிசையில் உட்காருவதற்கு தான் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நாம் திமுக, அதிமுகவை சரிசமமாக பாவிக்க வேண்டும். ஆளுங்கட்சி தவறு செய்தால் சுட்டிக் காட்டுவோம். பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் எனக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அவரது மகள் படிக்கும் கல்லூரியில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியை கேட்டுள்ளனர். என் பெயரை 80 சதவீதம் மாணவியர் தெரிவித்துள்ளதாக, கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதனால் என்னை அடுத்த முதல்வராக நினைத்து வெளியே பேச வேண்டாம். நமக்கு நல்லதொரு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என்று பேசினார்.

முன்னதாக அக் கட்சியின் ஒரு மாநில நிர்வாகி பேசுகையில், வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும். பாஜக கூட்டணி தான் வெற்றி பெறும். அப்போது நாம் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றார். அதை வைகோ கவனமாகக் கேட்டுக் கொண்டார்.

No comments: