Wednesday, May 18, 2011

புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை அரங்கம் ஒருவாரத்தில் தயார் ஆகும் ; இரவு - பகலாக பணி தீவிரம்.

புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை அரங்கம்    ஒருவாரத்தில் தயார் ஆகும்;    இரவு-பகலாக பணி தீவிரம்

தமிழக சட்டசபை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையில் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடித்ததையடுத்து, புனித ஜார்ஜ் கோட்டை சீரமைக்கப்படுகிறது. முதல்- அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் பணிபுரியும் அறைகள் தயார் ஆகி விட்டன. ஒரு சில சிறிய வேலைகள் நடந்து வருகின்றன. இது தவிர கோட்டையின் மற்ற பகுதிகள் வண்ணம் பூசப்பட்டு சீரமைக்கப்படுகின்றன. இதற்கான பணிகளில் ஏராளமான ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் 33 அமைச்சர்கள் கடந்த 16-ந் தேதி சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவி ஏற்றுக் கொண்டனர். புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபை கூட்ட அரங்கம் தயார் ஆகி வருகிறது.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் இருக்கைகள் அமைக்கும் பணி இரவு-பகலாக நடந்து வருகிறது. பணியாளர்கள் கூடுதல் எண்ணிக்கையில் நியமிக்கப்பட்டு இருப்பதால் சட்டசபை கூடம் உருவாகும் பணி மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. இருக்கைகளை அமைப்பதற்கான படிக்கட்டுகள், மின்சார வயரிங் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஒலிபெருக்கி கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணி இரவு-பகலாக நடக்கிறது. ஏற்கனவே இருந்த இருக்கைகளில் சில சேதம் அடைந்த நிலையில் உள்ளன. அவற்றை புதுப்பிக்கும் வேலை நடந்து வருகிறது.

சட்டசபை அரங்கத்தை அமைக்கும் வேலையை ஒரு வாரத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப பணியாளர்கள் இங்கு பணிபுரிந்து வருகிறார்கள். 22-ந் தேதிக்குள் பெரும்பாலான பணி முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு முடிவடைந்தால் 23-ந் தேதி புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சட்டமன்ற துறை அலுவலகம் ஏற்கனவே புதிய சட்டசபை கட்டிடத்துக்கு மாற்றப்பட்டு இருந்தது. அதுவும் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்படுகிறது. இதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. சட்டசபை தொடர்பான அனைத்து பணிகளும் 24-ந் தேதிக்கு முடிந்து விடும் என்று கூறப்படுகிறது. 25-ந் தேதி முதல் புனித ஜார்ஜ் கோட்டை சட்டசபை கூடுவதற்கு முழுமையாக தயார் ஆகிவிடும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


No comments: