Wednesday, May 18, 2011

10 ஆயிரம் ரவுடிகள் பட்டியல் தயார் ; கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க 10 ஆயிரம் ரவுடிகள்    பட்டியல் தயார்;    கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்-அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அதிக கவனம் செலுத்தப்படும். ரவுடிகள் கட்டுப்படுத்தப்படுவார்கள். மக்கள் நிம்மதியாக வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கும்படி காவல் துறைக்கு போலீஸ் டி.ஜி.பி. போலோநாத் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளது. ரவுடிகளை 3 விதமாக போலீசார் பிரித்து வைத்துள்ளார்கள். முதல் ரக ரவுடிகள் கொலை, கூலிக்கு கொலை செய்தல், பணத்துக்காக ஆட்களை கடத்துதல், கற்பழிப்பு வெடிகுண்டு வீசுதல் போன்ற கொடுங்குற்றங்களில் ஈடுபடுபவர்கள்.

2-வது ரக ரவுடிகள் ஆயுதங்களை காட்டி மிரட்டி பணம், நகை பறிப்பது, அடி- தடிகளில் ஈடுபடுவது, கொலை முயற்சிகளில் இறங்குவது, கொள்ளைகளில் ஈடுபடுவது போன்ற குற்றங்களை செய்பவர்கள்.

3-ம் ரக ரவுடிகள் தங்கள் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிப்பது போன்ற குற்றங்களில் ஈடு படுபவர்கள். தமிழ்நாடு முழுவதும் ரவுடிகள் பட்டியல் தயாரிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 10 ஆயிரம் ரவுடிகள் பெயர் சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 2800 ரவுடிகள் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 450-க்கும் மேற்பட்டவர்கள் மிக கொடூரமான ரவுடிகள் என்று கூறப்படுகிறது.

குண்டர் சட்டத்தில் பல முறை ஜெயிலுக்கு சென்றவர்களையும் அவர்களுக்கு பின்னணியில் உதவும் நபர்கள் பற்றிய பட்டியல் தனியாக தயாராகிறது. கடந்த ஆட்சியில் சில இயக்கங்களின் பக்க பலத்துடன் கட்ட பஞ்சாயத்து, மாமூல் வசூலிப்பது போன்ற செயல்களில் பலர் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பற்றிய விபரங்களையும், அவர்களுக்கு பக்க பலமாக செயல்பட்டவர்கள் பற்றியும் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் தனிப்பட்டியல் தயாராகி வருகிறது.

இந்த பட்டியல் தயாரிப்பை அறிந்ததும் கட்ட பஞ்சாயத்து தாதாக்கள், மாமூல் வேட்டை நடத்தி வலம் வந்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இதுபற்றி போலீஸ் டி.ஜி.பி. போலோநாத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை காப்பதில் போலீசார் தீவிரமாக இருப்பார்கள். ரவுடிகளை கட்டுப்படுத்தினாலே சட்டம் ஒழுங்கு சீராகி விடும். ரவுடிகளை அடக்குவதில் பாரபட்சத்துக்கு இடமில்லை. பொதுமக்கள் நிம்மதியாக வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: