Thursday, May 19, 2011

அத்தியாவசிய பொருள் விலை உயரும் : பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் ; “கோப்மா” சங்கம் கோரிக்கை.

அத்தியாவசிய பொருள் விலை உயரும்:    பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்;    “கோப்மா” சங்கம் கோரிக்கை


கோவை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமான பெட்ரோல் விலை உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோப்மா சங்க தலைவர் மணிராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோப்மா சங்க தலைவர் மணிராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு கடந்த 12 மாதங்களில் 9 முறை பெட்ரோல் விலையை உயர்த்தி ஏழை மக்களுக்கு கிடைத்திருக்கும் இரண்டு சக்கர வாகன போக்குவரத்து வசதியைக் கூட அனுபவிக்க விடக்கூடாது என்று கங்கணம் கட்டி பெட்ரோலிய நிறுவனங்கள் தமக்குள் போட்டி போட்டு பெட்ரோல் விலையை சகட்டுமேனிக்கு உயர்த்தியுள்ளதற்கு கோப்மா சங்கம் மிக வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

அதிகப்படியான நுகர்வோர்கள் உள்ள அமெரிக்கா தேசத்தில் கூட இந்தியாவை காட்டிலும் பாதிக்கு பாதி விலை குறைவாக பெட்ரோல் கிடைக்கிறது. ஆனால் இந்தியாவில்ஏழை-எளிய அடித்தட்டு மக்களின் மீதே வரிச்சுமையையும், பெட்ரோல் விலை உயர்வையும் அடிக்கடி ஏற்றி விடுகின்றனர்.

ஏறிய எந்த பொருட்களின் விலையும் இந்தியாவில் குறைவதே இல்லை. இந்தியாவில் விற்கக்கூடிய பெட்ரோல் விலையில் மத்திய-மாநில அரசுகள் 51 சதவீதம் வரை விலையில் பாதியை வரியாகவே மக்களிடமிருந்து பெறுகின்றனர்.

பெட்ரோலிய நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் தரப்படுகின்ற அபரிமிதமான சலுகைகளாலும், ஊதிய உயர்வாலும் மற்றும் நிர்வாக குறைபாட்டால் மட்டுமே நஷ்டம் ஏற்படுகிறது. இந்திய திருநாட்டில் மாதம் ஐந்தாயிம் ரூபாய் ஊதியம் பெற்று குடும்பத்தோடு வாழ்க்கை நடத்துகின்ற பலகோடி மனிதர்களை இந்திய அரசு சிறிதாவது எண்ணிப் பார்க்க வேண்டும்.

பெட்ரோலிய நிறுவனங்களில் நஷ்டம் ஏற்படுவது உண்மையென்றால் அரசு பெட்ரோல் கொள்முதலில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்த்தப்பட்டால் நாட்டில் ஏழை எளியோர் பயன்படுத்தப்படும் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பது அரசுக்கு தெரியாதா? மக்களால் பயன்படுத்தப்படுகின்ற அத்தியாவசிய பொருட்களுக்கு அரசு லாப-நஷ்ட கணக்கு பார்க்க கூடாது.


ஆகவே அரசு உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். மேலும் அனைத்து பெட்ரோலிய நிறுவனங்களையும் தனது கட்டுப்பாட்டில் அரசே வைத்துக் கொளள் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மணிராஜ் கூறியுள்ளார்.

No comments: