Thursday, May 19, 2011

மதுரையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.1,000 கோடி நில மோசடி : 6 பேர் கைது.

மதுரையில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.1,000 கோடி நில மோசடி: 6 பேர் கைது

மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மதுரை ஆனைïர் மற்றும் அதை சுற்றியுள்ள பார்க் டவுன், கலைநகர், பசுபதி நகர், கார்த்திக் நகர், பாலாஜிநகர், வாசுநகர், அதிசயா நகர், ஜெய்நகர் ஆகிய இடங்களில் உள்ள சுமார் 153 ஏக்கர் நிலங்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து, அதன் மூலம் அந்த நிலங்களை சிலர் மோசடி செய்து உள்ளனர்.

அந்த நபர்கள் சம்பந்தப்பட்ட நிலங்களுக்கு தொடர்ந்து வில்லங்கத்தை ஏற்படுத்திக்கொண்டும், அதை சரி செய்து கொடுப்பதாகவும் கூறி, நில உரிமையாளர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி கொண்டு ஏமாற்றி வந்துள்ளனர். இதுதொடர்பாக பார்க் டவுன் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் கணேசன் புகார் அளித்தார்.

இந்த புகார் மீது விசாரணை நடத்த தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையின் தீவிர விசாரணையில் இறங்கின. இந்த 153 ஏக்கர் நில மோசடியில் சென்னை சாந்தோமை சேர்ந்த ஜான்கென்னடி, மதுரை எஸ்.ஆலங்குளம் மருதுபாண்டியர் 2-வது தெருவை சேர்ந்த துரைராஜ், ராமன், ராஜசெல்வராஜ், ராஜவிஜயசிங், ராஜதாமோதரன், ராஜகண்ணபிரான், ராஜசெல்வேந்திரன், கார்மேகம், ஜெயலட்சுமி, அவருடைய மகன் முரளிதர மோகன கிருஷ்ணா, பரவை காளியம்மன்கோவில் தெரு ராஜபூமிநாதன், வலம்புரிநாதன், மதுரை பைபாஸ் ரோடு அலுவலக இணை சார்பதிவாளர் ஆகியோர் கூட்டாக சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜான்கென்னடி என்பவர் சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். 153 ஏக்கர் நிலங்கள் தங்களது மூதாதையர்களின் வழிவகை சொத்துக்கள் என்றும், அதற்கு தாங்கள் தான் வாரிசுகள் எனவும் கூறி, அவர்கள் போலி ஆவணங்களை பெற்று இருக்கிறார்கள். 153 ஏக்கரின் தற்போதைய மதிப்பு ரூ.1000 கோடி இருக்கும். இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை தனிப்படையினர் மூலம் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தோம்.

இந்த நிலையில் கார்மேகம், ராஜ தாமோதரன், ராஜ கண்ணபிரான், ராஜ செல்வேந்திரன், ராஜபூமிநாதன், வலம்புரிநாதன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவான மற்றவர்களை தொடர்ந்து தேடி வருகிறோம்.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

இம்மாதிரியான மோசடிகள் தமிழ்நாடு முழுவதுமே நடைபெற்று வருகின்றன..... அரசுபதிவாளர்களும், எழுத்தர்களும் இந்த மோசடிகளில் உடந்தையாக உள்ளனர்.. காவல்துறை அதிகாரிகளும் இந்த மோசடி ஆசாமிகளை கைது செய்வதில்லை... புகார்கூறும் பாதிக்கப்பட்டவர்களிடம் புதிது புதிதாக சட்டங்களைக்கூறி காலதாமதம் செய்து பாதிக்கப்பட்டவர்களிடமும், குற்றவாளிகளிடமும் தனித்தனியாக பணம் கறந்துவிடுகிறார்கள்.. குற்றவாளி களையும் தப்பவிட்டுவிடுகிறார்கள்....

இந்த விசயத்தில் அரசு முனைப்புடன் செயல்பட்டு, நிலமோசடிகளை விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்க தனியாக ஒரு காவல்துறை அமைப்பை ஏற்படுத்தவேண்டும்..இந்த மோசடிக்கு உடந்தையாக இருக்கும் பதிவாளர்களை வீட்டுக்கு அனுப்ப வழிவகை செய்யவேண்டும். இத்தகைய மோசடியில் கைது செய்யப்படும் பதிவாளர்கள்,உடனடியாக ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் மோசடியில் ஈடுபடுகிறார்கள்.. இந்நிலை மாற சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

No comments: