Thursday, May 19, 2011

கொள்கையை கேட்டுக்கிட்டா விஜயகாந்த்துக்கு ஓட்டு போட்டீர்கள்? சீமான்.


இலங்கையில் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் அந்நாட்டு அரசு நடத்திய இனப்படுகொலையை கண்டித்தும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடும் போர் குறித்து ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கைக்கு ஆதரவாகவும், இலங்கையை இனப்படுகொலை செயத நாடு என அறிவிக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் 18.05.2011 அன்று வேலூர் பெரியார் பூங்காவில் இருந்து கோட்டை அருகே உள்ள மைதானம் வரை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பேரணிக்குப் பின்னர் நடந்த கூட்டத்தில் பேசிய சீமான்,

சீமான் தலைவன் என்று நினைக்கக் கூடாது. நான் யார் என் இனத்தின் விடுதலைக்கு, உண்மையாக நேர்மையாக அர்ப்பணிப்போடு போராடுகிற எண்ணற்ற தலைவர்களை உருவாக்குகிற ஒரு முதண்மை தொண்டன். அப்படியானால் இந்த கட்சிக்கு யார் தலைவர். இந்த கட்சிக்கு மட்டுமல்ல. உலகம் முழுவதும் பரவிக்கிடக்கின்ற 12 கோடி தேசிய இன மக்களுக்கு ஒரே தலைவர் பிரபாகரன்.

நாம் தமிழர் என்கிற கட்சி தேசிய இன விடுதலைக்கான மக்கள் ஜனநாயக புரட்சி. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்காகவா, தமிழினம் மீட்சிக்காக. நாம் தமிழர் கட்சி ஆள்வதற்காகவா, தமிழர்கள் வாழ்வதற்காக. நாம் தமிழர் கட்சி பணத்திற்காகவா, சத்தியமாக இனத்திற்காக. நாம் தமிழர் கட்சி மக்களை வைத்து பிழைப்பதற்காகவா, மக்களுக்காக உழைப்பதற்காக. நாம் தமிழர் கட்சி பதவிக்காகவா, மக்களுக்கான உதவிக்காக. இதனை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் எனது அன்பு தம்பிகள்.

யாரும் வரலாம். இங்கு வாழலாம். நாங்கள்தான் ஆளுவோம். என் பாட்டன் வீரபாண்டிய கட்டப்பொம்மன் படையிலே, என் பாட்டன் வெள்ளைய தேவன் தளபதியாக இருந்ததுபோல, எத்தனை தளபதிகள் எங்களுக்கு இருக்கலாம். நான்தான் மன்னன். அதில் எந்த மாற்றமும் கிடையாது. யாரும் வரலாம். வாழ்த்துக்கலாம். நான்தான் ஆளுவேன். வந்தவர்களையெல்லாம் வாழ வைத்ததில் எனக்கு சிக்கல் வரவில்லை. வந்தவனையெல்லாம் ஆளவைத்தில் எனக்கு சிக்கல். அதனை புரிந்துகொள்ள வேண்டும். யாரும் வரலாம். இங்கு வாழலாம். நாங்கள்தான் ஆளுவோம். இதுதான் எங்கள் கொள்கை.

என் மொழி காக்க, என் இனம் காக்க, என் மண் காக்க, என் மக்களை காக்க, என் உயிருக்கும் மேலாக நின்று போராடிக்கொண்டிருக்கிற எழுச்சிமிக்க இளைஞர்களின் பாசறைதான் இந்த நாம் தமிழர் கட்சி.

ஓயாமல் கொள்கை என்ன என்று கேட்டுக்கொண்டிருக்கக் கூடாது. கொள்கையை கேட்டுக்கிட்டா விஜயகாந்த்துக்கு 29 இடத்தில் ஓட்டு போட்டீர்கள். கொள்கை இருக்குதா. கொள்கையை கேட்டுக்கிட்டா போட்டீர்கள். ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பினார்கள். அந்த ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. இவ்வாறு சீமான் பேசினார்.

No comments: