Thursday, May 19, 2011

ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை - தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்.


சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் நடிகர் ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை நடந்தது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நேற்று நள்ளிரவில் மருத்துவனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், மூச்சு விடுவதை எளிதாக்குவதற்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நுரையீரல், சிறுநீரகங்கள், இதயம் உள்பட பல்வேறு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் மூலம் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வகிறது என்று மட்டும் கூறப்பட்டுள்ளது.

சுவாசப் பாதை நோய்த் தொற்று, நிமோனியா காய்ச்சல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன்பு ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மைலாப்பூரில் உள்ள இசபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். ஆனால், மீண்டும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பினார்.

ஆனால், நுரையீரல் பாதிப்பின் விளைவால் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு 7வது மாடியில் உள்ள தனி அறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நுரையீரல் பாதிப்பு காரணமாக அவருக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டு வந்தது.

இந்த சுவாச பிரச்சனையால் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து நுரையீரலில் தேங்கியுள்ள நீரை அகற்ற சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந் நிலையில் சிறுநீரகங்களிலும் பிரச்சனை ஏற்பட்டதால் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

No comments: