Thursday, May 19, 2011

இந்தியாவை ஆட்டிப்படைக்கும் பவர் கட் : ட்விட்டர், இணையதளம் மூலம் நூதன போராட்டம் .


நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மின் தடை குறித்த விவரங்களை, முழுமையான புள்ளி விவரத்தகவல்களை இணையதளம் மூலம் பகிர்ந்து கொண்டு, அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் புதுவிதமான நெருக்கடியைக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

ஆரம்பத்தில் ட்விட்டர் மூலம்தான் இந்த நூதன போராட்ட நடவடிக்கை தொடங்கியது. தற்போது பெருகி வரும் ஆதரவைத் தொடர்ந்து இணையதளமே அமைத்து விட்டனர்.

நாட்டின் பல பகுதிகள் மின் தடையால் இருண்டு போய்க் கிடக்கின்றன. கேட்டால் மின்சாரம் இல்லை, உற்பத்தி இல்லை, பற்றாக்குறை என்று மாநில அரசுகள் காரணம் கூறுகின்றன.மத்தியஅரசும் இதே பதிலைத்தான் கூறி வருகின்றன. இப்படிக் கூறியதால்தான் தமிழகத்தி்ல் ஆட்சியையே மக்கள் மாற்றி விட்டனர்.

இந்த நிலையில் இந்தியாவின் மின் அவல நிலையை ட்விட்டர் மூலம் உலகம் முழுவதும் வெளிச்சம் போட்டுக் காட்டும் வேலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த முதலீட்டு ஆலோசகர் ஷெபாலி யோகேந்திரா இறங்கியுள்ளார்.

ட்விட்டர் மூலம் இந்தியாவின் மின் தடை அவலத்தை வெளிப்படுத்தி, இதைப் போக்குமாறு அரசியல்வாதிகளுக்கு இந்த ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் நெருக்கடி தர ஆரம்பித்துள்ளனர்.

இதுகுறித்து யோகேந்திரா கூறுகையில், ஒவ்வொருமுறையும் கோடை காலம் வந்து விட்டாலே, எனது ட்விட்டர் நண்பர்கள் இந்தியாவில்நிலவி வரும் கடுமையான மின் தட்டுப்பாடு குறித்துக் கூறுவார்கள். சமீபத்தில் இரண்டு நகரங்களைச் சேர்ந்த எனது நண்பர்கள் அடுத்தடுத்து மின் தடை குறித்து வேதனையுடன்குறிப்பிட்டிருந்தனர். இதைப் பார்த்ததும் எனக்கு யோசனை தோன்றியது.

பொதுவான ஒரு ட்விட்டர் முகவரியைப் பயன்படுத்தி இந்தியாவின் மின் அவலத்தை நமது அரசியல்வாதிகளுக்கு உணர்த்தி இதை சரி செய்யும் வகையில் செயல்பட முடிவு செய்தேன்.

இதற்காகவே #powercutindia அல்லது #PowerCutsIN ஆகிய இரு முகவரிகளில் ஏதாவது ஒன்றின் மூலம் இதை நான் செயல்படுத்தியுள்ளேன். இங்கு இந்தியாவின் எந்தப் பகுதியில் வசிப்பவர்களாக இருந்தாலும் அங்குள்ள மின்சார விநியோக நிலை, மின் தட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்த விவரங்களைத் தெரிவிக்கலாம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மின் வெட்டு அமலாகும்போது ஒரு மெசேஜும், மின்வெட்டு நீங்கி மீண்டும் கரண்ட் வரும்போது ஒரு மெசேஜும் அனுப்புமாறு பயன்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றார் அவர்.

தற்போது இந்த ட்விட்டர் குழுவினர் இணைந்து ஒரு இணையதளத்தை ஆரம்பித்துள்ளனர். அதில் இந்தியா முழுவதும் எங்கெல்லாம் மின்வெட்டு அமலாகிறது என்பதை ஒரு மேப் மூலம் தெரிவிக்கின்றனர். மேலும் மின்வெட்டு குறித்த புள்ளி விவரத் தகவல்களையும் இதில் அவர்கள் இடம் பெற வைத்துள்ளனர்.

ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 10 மின்வெட்டு தொடர்பான தகவல்கள் இவர்களுக்கு கிடைக்கிறதாம். இந்த இணையதளத்தை உருவாக்கி பராமரித்து வருபவர் அஜய் குமார். இவர் ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

பொது நலன் கருதி செயல்படும் இந்த கட்டமைப்பில் பொதுமக்கள் பெருமளவில் இணைய வேண்டும். மின்வெட்டின் விபரீதம் குறித்து அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உணர்த்த வேண்டும் என்று இந்த வித்தியாசமான நடவடிக்கையின் காரணகர்த்தாக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மின்வெட்டு தொடர்பான தகவல்களைத் தர இமெயில் முகவரி ஒன்றையும் அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அதேசமயம், தவறான, சரியில்லாத தகவல்களைத் தந்தால் அதை இவர்கள் நிராகரித்து விடுகிறாகள். மேலும் நம்பகமான தகவல்களைத் தருவோரை ஸ்டார் ரிப்போர்டர்களாகவும் இவர்கள் அங்கீகரித்துள்ளனர். ஒரு ஊரிலிருந்து வரும் மின் வெட்டு குறித்த தகவல்கள் சரியா என்பதை இவர்கள் மூலம் சரி பார்த்துக் கொள்கிறார்களாம்.

முன்பு அன்னா ஹஸாரே ஊழலுக்கு எதிராக போராடியபோது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் மூலம் அவருக்குப் பெரும் ஆதரவு திரண்டது நினைவிருக்கலாம். அது கொடுத்த ஊக்கத்தால்தான் தற்போது மின்வெட்டுக்கு எதிரான இந்த நூதன போராட்டம் தொடங்கியுள்ளது.

No comments: