Thursday, May 19, 2011

சதை போடுங்கள் என்றேன் : ரஜினியிடம் உடல் எடையை குறைக்க சொல்லவில்லை ; டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் மறுப்பு.

சதை போடுங்கள் என்றேன்:    ரஜினியிடம் உடல் எடையை    குறைக்க சொல்லவில்லை;    டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் மறுப்பு

ரஜினி உடல் எடையை குறைத்ததால் தான் உடல் நலக்குறைவுக்கு ஆளானார் என்று செய்திகள் பரவியுள்ளது. கடந்த ஓரிரு மாதங்களாகவே ராணா படத்துக்காக தன்னை தயார்படுத்தி வந்தார். திரவ உணவுகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் உடல் எடை குறைந்தது. உணவு பழக்கத்தை மாற்றியது உடலுக்கு ஒத்துக்கொள்ள வில்லை. எனவே தான் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து ராணா பட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

ராணா சரித்திர படம். இதில் ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கிறார். சரித்திரப் படத்தில் மாவீரனாக தோன்ற உடலை யாராவது குறைப்பார்களா? ரஜினி என்றைக்கு குண்டாக இருந்திருக்கிறார். இப்போது இளைக்கச் சொல்வதற்கு நாங்கள் என்ன சரித்திர காமெடி படமா எடுக்கிறோம். அவரை ஒல்லி மாவீரனாக காட்ட? ரஜினி கதை டிஸ்கஷனுக்கு வரும் போதெல்லாம் இன்னும் கொஞ்சம் சதை போடுங்கள் என்று தான் சொல்லிக் கொண்டு இருந்தோம். உடல் எடையை குறைக்க சொல்லவில்லை.

ரஜினிக்கு இறைப்பையில் ஏற்பட்ட சிறு பிரச்சினை மற்றும் சுவாசக் கோளாறு காரணமாகத்தான் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைசிறந்த மருத்துவர்கள் குழு அவரை கண்காணித்து வருகிறது. நாளுக்கு நாள் அவரது உடல் நிலை நன்றாக தேறி வருகிறது. ஆஸ்பத்திரியில் ரஜினியை சந்திக்க நிறைய பேர் விரும்புகிறார்கள்.

எல்லோரையும் அனுமதித்தால் ஓய்வு எடுக்க முடியாது. எனவே தான் சில நாட்கள் கழித்து பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று இருக்கிறார்கள். ரசிகர்கள் வீண்வதந்திகளை நம்ப வேண்டாம். இன்னும் சில நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து விட்டு வீடு திரும்புவார்கள். நாம் எல்லோரது பிரார்த்தனையும் நம்பிக்கையும் வீண் போகாது.

இவ்வாறு கே.எஸ்.ரவிக்குமார் கூறினார்.

No comments: