Thursday, May 19, 2011

ரூ.30 ஆயிரம் கோடி கறுப்பு பணம் பறிமுதல்.


கடந்த 2 ஆண்டுகளில் வருமானவரி சோதனை மூலம் ரூ.30 ஆயிரம் கோடி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில், கறுப்பு பணம் பற்றிய தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், பங்கேற்று பேசிய மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுதிர் சந்திரா,

நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளில், வருமானவரி சோதனை மற்றும் ஆய்வு மூலம் ரூ.30 ஆயிரம் கோடி கறுப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சோதனையிலும், ரூ.100 கோடிக்கு மேல் கிடைத்துள்ளது. இதன்மூலம், நாங்கள் சாதாரண மக்களை குறிவைக்காமல், பெரிய மனிதர்களை குறிவைத்து செயல்படுகிறோம் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

கறுப்பு பணம் பற்றிய உறுதியான தகவல் கிடைக்காமல், எங்கள் அதிகாரிகள், அலுவலகத்தை விட்டு வெளியே செல்வது இல்லை. தனிப்பட்ட பகை காரணமாக, எங்களுக்கு ஏராளமான புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதிக கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை தயாரித்து வருகிறோம். அனைவரும் எங்கள் கண்காணிப்பில் உள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த 4 மாதங்களில் வருமான வரித்துறை ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் கோடி ரீபண்ட்' கொடுத்துள்ளது. நடப்பு நிதியாண்டில், முதல் 45 நாட்களில் வருமான வரி வசூல், கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் இருந்ததை விட 3 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, முதல் 45 நாட்களில் ரூ.9 ஆயிரம் கோடி மட்டுமே வசூலானது. ஆனால், தற்போது ரூ.28 ஆயிரம் கோடி வசூலாகியுள்ளது.

கறுப்பு பணம் குறித்த தகவல் பரிமாற்றத்துக்கு தனிப்பிரிவு உருவாக்கி உள்ளோம். வரி ஏய்ப்புக்கு உடந்தையாக இருக்கும் நாடுகளை அடையாளம் கண்டுள்ளோம். அத்தகைய 14 நாடுகளுடன் ஒப்பந்தம் போடுவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எந்த நாடாவது தகவல் அளிக்க மறுத்தால், அந்நாட்டை ஒத்துழைப்பு அளிக்காத நாடு' என்று அறிவிப்பதற்கும் ஒப்பந்தத்தில் வழி உள்ளது என்றார்.

No comments: