Thursday, April 28, 2011

சமாதியின் மேல் பகுதியில் சாய்பாபாவுக்கு தங்கச் சிலை ; தரிசனத்திற்கு அலைமோதிய கூட்டம்.

சமாதியின் மேல் பகுதியில்   சாய்பாபாவுக்கு   தங்க சிலை;   சமாதி தரிசனத்திற்கு    அலைமோதிய கூட்டம்

உலக மக்களின் உள்ளம் கவர்ந்த சாய்பாபாவின் உடல் அடக்கம் இன்று புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் உள்ள குல்வந்த் ஹாலில் முழு அரசு மரியாதையுடன் நடந்தது. பண் டிதர்கள் வேதங்கள் முழங்க அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அங்கு இருந்த அனைவரும் “பாபா” என்ற படி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

சாய்பாபா உடலை அடக்கம் செய்வதை பெண்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக சுற்றிலும் பெரிய திரை போட்டு மூடி இருந்தனர். அடக்கத்திற்கு பிறகு திரை விலக்கப்பட்டது. சாய்பாபா அடக்கம் செய்யப்பட்ட சமாதியில் தங்கசிலை வைக்க வேண்டும் என்று ஏராளமான பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஏற்று அவரது சமாதியின் மேல் பகுதியில் சாய்பாபாவின் தங்க சிலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு நிதி தர ஏராளமான தொழில் அதிபர்கள் முன் வந்துள்ளனர். சாய்பாபா உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு சமாதி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் விடிய விடிய வரிசையில் காத்திருந்தனர். அவர்களும் இன்று சமாதி தரிசனம் செய்தனர். இதற்காக பக்தர்கள் 5 கி.மீ. தூரம் வரிசையில் காத்திருந்தனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தபடியே இருந்தது.

சில இடங்களில் பக்தர்கள் முண்டியடித்ததால் நெரிசல் ஏற்பட்டது. அப்போது அங்கு நின்ற அதிரடி படையினர் லேசான தடியடி நடத்தி பக்தர்கள் வரிசையாக செல்ல வழிவகை செய்தனர். பக்தர்கள் 2 நாட்கள் சாய் பாபா சமாதியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

No comments: