Thursday, April 28, 2011

அசன்அலி பாஸ்போர்ட் விவகாரம் : கவர்னர் பதவி விலக கோரி புதுவையில் முழு அடைப்பு .

அசன்அலிக்கு பாஸ்போர்ட் விவகாரம்:    கவர்னர் பதவி விலக கோரி    புதுவையில்    முழு அடைப்பு;   தனியார் பஸ்கள் ஓடவில்லை; கடைகள் அடைப்பு

குதிரைப்பண்ணை அதிபர் அசன் அலிக்கு பாஸ்போர்ட் வழங்க புதுவை கவர்னர் இக்பால்சிங் சிபாரிசு செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கவர்னர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் புதுவை கவர்னர் இக்பால்சிங் மீது மேலும் 2 புதிய புகார்கள் எழுந்தது.

மகன்களை உறுப்பினராக கொண்ட சவுத் எஜூகேசனல் டிரஸ்ட்டுக்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி மருத்துவ கல்லூரிக்கு அனுமதி பெற்று கொடுத்தார் என்றும், புதுவையில் சொற்ப எண்ணிக்கையில் வசிக்கும் சீக்கிய மதத்தினருக்கு குருத் வாரா கட்ட அரசு நிலம் ஒதுக்கினார் என்றும் புகார் கூறப்பட்டது.

இது எதிர்க்கட்சிகளின் குரலை மேலும் வலுவடைய செய்தது. கவர்னரை பதவி விலக வலியுறுத்தி பாரதிய ஜனதா, மார்க்சிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு (பந்த்) அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி இன்று காலை 6 மணிக்கு போராட்டம் தொடங்கியது. இதனால் அதிகாலையில் இருந்தே தனியார் பஸ்கள் ஓடவில்லை.

தமிழக அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஓடியது. புதுவை எல்லையில் இருந்து தமிழக அரசு பஸ்கள் பஸ் நிலையம் வரை பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டன. பின்னர், மீண்டும் எல்லை வரை போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. பந்த் போராட்டத்தையொட்டி புதுவையில் பெரும் பாலான டெம்போக்களும், ஆட்டோக்களும் ஓட வில்லை. இதனால் அலுவலகங்களுக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர்.

கோடை விடுமுறை என்பதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிந்தது. ஒரு சில தனியார் கல்லூரிகள் மட்டும் இயங்கின. கல்லூரிக்கு செல்ல பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் அவதியுற்றனர். நகரம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. சின்ன மார்க்கெட், பெரிய மார்க்கெட், உழவர் சந்தை ஆகியவை இயங்க வில்லை. பஸ் ஓடாததாலும், கடைகள் அடைக்கப்பட்டிருந்ததாலும் ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

No comments: