Thursday, April 28, 2011

ஸ்பெக்ட்ரம்: 5 செல்போன் நிறுவனங்களின் ரூ.10,000 கோடி சொத்துக்களை முடக்க அமலாக்க பிரிவு நடவடிக்கை.


2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் தொடர்புடைய 5 தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ரூ. 10,000 கோடி சொத்துக்கள் விரைவில் முடக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது. ஆனால், அந்த நிறுவனங்கள் எவை என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

இந்த ஊழல் தொடர்பாக உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் முன்னேற்றங்கள் குறித்த விவரங்களை அவ்வப்போது இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வருகின்றன.

அமலாக்கப் பிரிவு நடத்திய விசாரணைகள் குறித்த லேட்டஸ்ட் அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கப் பிரிவு சார்பில் அதன் வழக்கறிஞர் வேணுகோபால் இந்த அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய வேணுகோபால், ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ஈடுபட்ட 5 செல்போன் நிறுவனங்கள் பண பரிவர்த்தனை மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளன. இதன்மூலம் ஒவ்வொரு நிறுவனமும் தலா ரூ. 2,000 கோடி அளவுக்கு முறைகேடாக லாபம் அடைந்துள்ளன. இதில் முதல் கட்டமாக 2 நிறுவனங்களின் தலா ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை (மொத்தம் ரூ. 4,000 கோடி) முடக்க உள்ளோம் என்றார்.

இந்த சொத்துக்களில் அசையும், அசையா சொத்துக்கள் அடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

ஆனால் அமலாக்கப் பிரிவு சொத்துக்களை முடக்கவுள்ள அந்த 5 நிறுவனங்கள் எவை எவை என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

இந்த நடவடிக்கை மூலம் ஸ்பெக்ட்ரம் முறைகேடு மூலம் மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்பை அந்ததந்த நிறுவனங்களிடமிருந்து திரும்பப் பெறும் நடவடிக்கையை அமலாக்கப் பிரிவினர் தொடங்கியுள்ளனர். ஆனால், இந்த நிறுவனங்கள் குற்றம் செய்ததாக நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கிய பின்னரே அந்த சொத்துக்களை அதிகாரப்பூர்வமாக கையகப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமலாக்கப் பிரிவினர் அடையாளம் கண்டுள்ள 5 நிறுவனங்களில் தலா ரூ. 2,000 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டால் அரசுக்கு ரூ. 10,000 கோடி திரும்பி வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் அமலாக்கப் பிரிவினர் சொத்துக்களை முடக்கவுள்ள முதல் இரண்டு நிறுவனங்கள், யுனினார் செல்போன் நிறுவனத்தை நடத்தி வரும் 'யுனிடெக் வயர்லெஸ்' மற்றும் ஷாகித் உசேன் பல்வாவின் 'ஸ்வான் டெலிகாம்' என்று தெரிகிறது.

இதில் யுனிடெக் நிறுவனம் ரூ.2,480 கோடி மதிப்புள்ள ஸ்பெக்ட்ரத்தை ரூ.138 கோடி மட்டும் தந்து அடிமாட்டு விலைக்கு வாங்கியது.

இந்த இரு நிறுவனங்கள் தவிர, சொத்துக்கள் முடக்கப்படவுள்ள பிற நிறுவனங்கள், லூப்டெலிகாம், லூப் மொபைல், எஸ்.டெல் ஆகியவை என்று தெரிகிறது.

இந் நிலையில் தொழில் தரகர் நீரா ராடியா தனது சகோதரி தனது பெயரில் விர்ஜின் தீவில் உள்ள வங்கிகளில் பல்லாயிரம் கோடியை முதலீடு செய்துள்ளதையும் அமலாக்கப் பிரிவு கண்டுபிடித்துள்ளது. இது ஸ்பெக்ட்ரம் ஊழல் பணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. இதற்காக அந்த நாட்டில் 5 நிறுவனங்களை ஆரம்பித்துள்ளார் ராடியா.

No comments: