Thursday, April 28, 2011

2ஜி விவகாரம்: ஜோஷியின் அறிக்கைக்கு காங்-திமுக பிஏசி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு.


2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து விசாரித்து வரும் பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (பிஏசி) ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக திமுக, காங்கிரஸ் ஆகியவை குற்றம் சாட்டியுள்ளன.

பாஜக ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அருண் ஷோரியிடம் முழுமையாக விசாரணை நடத்தாமலேயே ஜோஷி அவசர அவசரமாக அறிக்கை தயாரித்துவிட்டதாக இந்தக் கட்சிகள் புகார் கூறியுள்ளன.

2ஜி வழக்கு சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதே போலல நீதிமன்றத்திலும் விசாரணையில் உள்ளது. மேலும் இதே விவகாரத்தை விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பாஜக, அதிமுகவின் நெருக்குதலால் இது குறித்து பொதுக் கணக்குக் குழு விசாரணைக்கும் உத்தரவிட்டது மத்திய அரசு. இந்தக் குழுவின் தலைவராக முரளி மனோகர் ஜோஷி உள்ளார். இதில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்களும் இடம் பெற்றுள்ளனர்.

21 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவில் ஆளும் கூட்டணி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சமமான எண்ணிக்கையில் உள்ளனர்.

இந்தக் குழு சிபிஐ இயக்குனர் உள்ளிட்ட பல மூத்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியது. ஆனால், அருண் ஷோரியை விசாரணைக்கு அழைக்க ஜோஷி மறுத்துவிட்டார்.

வரும் 30ம் தேதியுடன் இந்தக் குழுவின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதையடுத்து, அதற்கு முன்பாகவே விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய முரளி மனோகர் ஜோஷி திட்டமிட்டார். ஆனால், முழுமையாக விசாரிக்காமல் அறிக்கை தாக்கல் செய்வதற்கு திமுக, காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்தன.

பிஏசி என்பது நிரந்தரக் குழு என்பதால், பதவிக்காலம் முடிந்த பிறகும், அடுத்த குழு அமைக்கப்பட்ட பின்னரும் அறிக்கையை தாக்கல் செய்யலாம் என அவர்கள் கூறிவந்தனர்.

இந் தனது குழுவின் வரைவு அறிக்கை நகல்களை முரளி மனோகர் ஜோஷி திடீரென டெல்லியில் நேற்று வெளியிட்டார். அதில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று பிரதமர் அலுவலகம், அமைச்சரவைச் செயலகம் மீதும் இந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிரதமரும் துரதிருஷ்டவசமான சில தவறுகளை செய்திருப்பதாகவும், பிரதமர் அலுவலகம் செயல்படாமல் இருந்ததே தன்னிச்சையாகவும், நேர்மையற்ற முறையிலும் ஆ.ராசா செயல்படுவதற்கு வசதியாகப் போய்விட்டது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வரைவு அறிக்கை ஒருதலைப்பட்சமானது என்று முரளி மனோகர் ஜோஷிக்கு காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

வரைவு அறிக்கை வெளியானதும் இந்தக் குழுவில் உள்ள காங்கிரஸ் மற்றும் திமுக எம்பிக்களான கே.எஸ்.ராவ், சைபுதீன் சோஸ், நவீன் ஜிண்டால், திருச்சி சிவா ஆகியோர் நிருபர்களி்டம் பேசுகையில்,

பாஜகவின் அரசியல் ஆதாயத்துக்காக முரளி மனோகர் ஜோஷி, அவசர அவசரமாக இந்த அறிக்கையைத் தயார் செய்திருக்கிறார். இந்த அறிக்கையை பிஏசியின் கூட்டத்தில் ஏற்கவிட மாட்டோம். கூட்டத்துக்கு ஒருவாரம் முன்பே தங்களுக்கு வரைவு அறிக்கையின் நகல்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வியாழக்கிழமை (இன்று) இந்தக் குழுவின் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், புதன்கிழமைதான் நகல்கள் வழங்கப்பட்டன.

அரசின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க வேண்டும் என்கிற தவறான உள்நோக்கம் குழுவின் தலைவராக இருக்கும் முரளி மனோகர் ஜோஷிக்கு உள்ளது. இதனால் முரளி மனோகர் ஜோஷி உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றனர்.

பொதுகணக்கு குழுவில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் உறுப்பினர் கே.எஸ்.ராவ் கூறுகையில், அறிக்கையில் பல விஷயங்கள் தவறானவை, தீய எண்ணத்துடன் சேர்க்கப்பட்டுள்ளன என்றார்.

மத்திய அமைச்சர் அம்பிகா சோனி கூறுகையில், பொதுகணக்கு குழு அறிக்கை முறைப்படி வெளியிடுவதற்கு முன்பே சில செய்தி நிறுவனங்களுக்கு கிடைத்துள்ளது. இது எப்படி வெளியானது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றார்.

இந்த அறிக்கை குறித்து இன்னொரு மூத்த மத்திய அமைச்சர் ஒருவர் கூறுகையில், இது பொதுக்கணக்கு குழுவின் அறிக்கை அல்ல, பாஜகவின் அறிக்கை. முரளி மனோகர் ஜோஷி பொதுக்கணக்கு குழுவின் தலைவராக அல்லாமல், பாஜக உறுப்பினர் போல் செயல்படுகிறார் என்றார்.

இந் நிலையில் இன்று இந்தக் குழுவின் கூட்டம் நடக்கவுள்ளது. இதில் கடும் மோதல் நடக்கும் என்று தெரிகிறது. 21 உறுப்பினர்களைக் கொண்ட இக் குழுவில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிட்டத்தட்ட சமமான எண்ணிக்கையில் இருக்கும் நிலையில், இன்றைய கூட்டத்தில் இந்த அறிக்கை ஏற்கப்படுமா என்பது சந்தேகமாகியுள்ளது.

இந்த அறிக்கை ஏற்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும் பகுஜன் சமாஜ், சமாஜவாதி கட்சிகள் எடுக்கும் முடிவைப் பொறுத்தே அமையும்.

No comments: