Thursday, April 28, 2011

ஸ்பெக்ட்ரம் ஊழல் : பிஏசி தலைவர் ஜோஷியின் அறிக்கை நிராகரிப்பு - சைபுதீன் சோஸ் பிஏசி தலைவரானார்.


2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டும் வகையில் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் (பிஏசி) தலைவரான பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி உருவாக்கிய அறிக்கையை அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள திமுக, காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் நிராகரித்து விட்டனர்.

இதையடுத்து இந்த அறிக்கையை வெளியிடுவது குறித்து நடந்த ஓட்டெடுப்பில் ஜோஷியின் அறிக்கைக்கு எதிராக திமுக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த 11 பேரும், ஆதரவாக பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுகவைச் சேர்ந்த 10 எம்பிக்களும் வாக்களித்தனர்.

இதனால் 1 ஓட்டு வித்தியாசத்தால் ஜோஷியின் அறிக்கை நிராகரிக்கப்பட்டது.

ஜோஷி தலைமையிலான இந்த 22 பேர் குழுவில், காங்கிரஸ் சார்பில் 7 எம்.பிக்களும், திமுக சார்பில் 2 எம்பிக்களும், பாஜக சார்பில் 4 பேரும், பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா சார்பில் தலா ஒரு உறுப்பினர்களும், அதிமுக சார்பில் 2 எம்பிக்களும் உள்ளனர்.

இவர்கள் தவிர சமாஜ்வாடிக் கட்சி சார்பில் 2 பேரும், பிஜூ ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை சார்பில் தலா ஒருவர் என 3 பேர் உள்ளனர். ஒரு இடம் காலியாக உள்ளது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து இந்தக் குழு விசாரணை நடத்தி வந்தது. ஆனால்,
பாஜக ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அருண் ஷோரியிடம் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்ற திமுக-காங்கிரஸ் கோரிக்கையை ஜோஷி ஏற்கவில்லை.

மாறாக அவர் அவசரமாக வரைவு அறிக்கை தயாரித்து அதை மீடியாக்களுக்கும் நேற்று 'லீக்'செய்துவிட்டதாக திமுக-காங்கிரஸ் ஆகியவை குற்றம் சாட்டின.

இந் நிலையில் ஜோஷியின் செயலுக்கு பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சி ஆகியவையும் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்த விவகாரத்தில் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் கலந்தாலோசிக்காமல் ஜோஷி ஏன் அறிக்கையை வெளியிட்டார் என்று அந்தக் கட்சிகள் கேள்வி எழுப்பின. இது குறித்து இன்று நடக்கும் இக் குழுவில் கூட்டத்திலும் பிரச்சனை கிளப்புவோம் என்று அறிவித்தன.

ஏற்கனவே திமுக-காங்கிரசும் இந்த அறிக்கைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய நிலையில் பகுஜன், சமாஜ்வாடிக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததால், இந்த அறிக்கையை நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் ஜோஷியால் இறுதி செய்ய முடியாத நிலை உருவானது.

இந் நிலையில் இன்று மாலை 4 மணிக்கு இந்தக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. அப்போது தங்களிடம் ஆலோசிக்காமல் ஜோஷி உருவாக்கிய இந்த அறிக்கைக்கும், அதை மீடியாக்களுக்கு 'லீக்' செய்ததற்கும் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, ஜோஷி உடனே பதவி விலக வேண்டும் என்று கோரினர்.

இதனால் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் நடந்தது. உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் இந்த அறிக்கையை வெளியிடுவதா வேண்டாமா என்பது குறித்து ஓட்டெடுப்பு நடத்தலாம் என திமுக-காங்கிரஸ் ஆகியவை கோரின.

ஆனால், திடீரென கூட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு முரளி மனோகர் ஜோஷி வெளிநடப்பு செய்தார்.

பிஏசி தலைவரானார் சைபுதீன் சோஸ்:

இதையடுத்து ஜோஷிக்குப் பதிலாக மத்திய அமைச்சர் சைபுதீன் சோஸ் கமிட்டியின் தலைவராக திமுக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடிக் கட்சி எம்பிக்கள் வாக்களித்தனர்.

கூட்டத்தில் அவர்கள் பெரும்பான்மையாக இருந்ததால், இதை பாஜக-அதிமுகவால் தடுக்க முடியவில்லை.

இதைத் தொடர்ந்து ஜோஷியின் அறிக்கை மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. திமுக, காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் 11 பேர் அறிக்கைக்கு எதிராக வாக்களித்தனர்.

பாஜக, அதிமுக, மார்க்சிஸ்ட் எம்பிக்கள் 10 பேர் ஆதரித்து வாக்களித்தனர். இதையடுத்து அந்த அறிக்கை தோற்கடிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது.

இதற்கிடையே ஓட்டெடுப்புக்கு முன்பே கூட்டத்தை முரளி மனோகர் ஜோஷி ஒத்திவைத்துவிட்டு வெளியேறிவிட்டாதால், அவர் தோற்கடிக்கப்படவில்லை என்றும், அவர் தான் மீண்டும் இக் கூட்டத்தைக் கூட்ட முடியும் என்றும் பாஜக கூறியுள்ளது.

இதனால் பிஏசியின் கதி என்னவாகும் என்பதில் பெரும் குழப்பம் நிலவுகிறது.

முன்னதாக நாளை பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ.நாயர், கேபினட் செயலாளர் கே.எம்.சந்திரசேகர் ஆகியோரை இந்தக் குழு நாளை விசாரிக்க இருந்தது.

நாளை மறுதினம் தனது அறிக்கையை முறைப்படி சபாநாயகர் மீராகுமாரிடம் வழங்கவும் ஜோஷி திட்டமிட்டிருந்தார்.

இந் நிலையில், காங்கிரஸ் இந்த வரைவு அறிக்கையை நிராகரிக்க வைத்துள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

No comments: