Thursday, April 28, 2011

மரபணு கத்தரிக்காயை பாதியளவு அனுமதிக்கலாம் ; தர மதிப்பீட்டு குழு ஆலோசனை.


மேலும் ஆய்வு வேண்டாம்:   மரபணு கத்தரிக்காயை    பாதியளவு அனுமதிக்கலாம்;    தர மதிப்பீட்டு குழு ஆலோசனை

மரபணு கத்தரிக்காயை பாதியளவு அனுமதிக்கலாம் என்று தர மதிப்பீட்டுக்குழு யோசனை கூறி உள்ளது. கத்தரிக்காயில் “பேசிலியம் பிரிஞ்சோசிஸ் என்ற வைரசை பயன்படுத்தி உருவாக்கப்படுவது மரபணு கத்தரிக்காய். இந்த கத்தரிக்காயை பயிரிட்டால் நிலத்தில் உள்ள நன்மை செய்யும் புழுக்களை அழித்து விடும். இதில் உள்ள இலைகளை ஆடு-மாடுகள் சாப்பிட்டால் இறந்து விடும். மரபணு கத்தரிக்காயில் உள்ள விதைகள் மீண்டும் முளைக்காது.

விவசாயிகள் ஒவ்வொரு முறையும் சர்வதேச கம்பெனிகளிடம் சென்று அதிக விலை கொடுத்து விதைகளை வாங்க வேண்டிய நிலைமை ஏற்படும். மரபணு கத்தரிக்காய் பயிரிட்டால் நமது நாட்டில் உள்ள கத்திரிக்காய் ரகங்கள் அனைத்தும் அழியும் ஆபத்து உள்ளது. இதனால் மரபணு கத்தரிக்காய்க்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் திருத்தணிகாசலம் வழக்கு தொடர்ந்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்தன. இந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய சுற்றுச் சூழல் மந்திரி ஜெய்ராம் ரமேஷ் மரபணு கத்தரிக்காய்க்கு தற்காலிக தடை விதித்தார். அப்போது அவர் கூறும் போது, “மரபணு கத்தரிக்காய் பற்றி மேலும் சில ஆய்வுகள் நடத்தப்படும். அதன் பிறகு அதை அறிமுகப்படுத்தலாமா? வேண்டாமா? என்பது பற்றி முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றார்.

இந் நிலையில் டெல்லியில் மரபணு மாற்று தரமதிப் பீட்டு குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் பேசிய பெரும்பாலான விஞ்ஞானிகள் மரபணு கத்தரிக்காயை முதலில் பாதியளவு பயிரிட அனுமதி அளிக்கலாம். ஏற்கனவே மரபணு கத்தரிக்காய் பற்றி மேற்கண்ட ஆய்வுகளே போதுமானது. மேலும் அது பற்றி ஆய்வு நடத்த தேவையில்லை என்று கருத்து தெரிவித்தனர். இது பற்றி மரபணு மாற்று தரமதிப்பீட்டு குழு இணை தலைவர் அர்ஜுனா ரெட்டி கூறும் போது, “இந்த ஆலோசனை கூட்டத்தில் 30 விஞ்ஞானிகன் பங்கேற்றனர்.

இதில் பெரும்பாலான விஞ்ஞானிகள் மரபணு கத்தரிக்காய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அடுத்த மாதம் நடைபெறும் கூட் டத்தில் இறுதி முடிவு எடுத்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்” என்றார். மரபணு மாற்று தர மதிப்பீட்டு குழுவில் சுப்ரீம் கோர்ட்டு,பார்கவா என்பரை நியமித்துள்ளது. அவர் கூறும் போது, “மரபணு கத்தரிக்காய் பற்றி மேலும் பல ஆய்வுகள் நடத்த வேண்டும். ஆய்வு நடத்தாமல் அதற்கு பாதியளவு கூட அனுமதி தர கூடாது. தர மதிப்பீட்டு குழுவில் உள்ள பெரும்பாலான விஞ்ஞானிகள் மரபணு தொழில் நுட்ப நிறுவனங்களை சேர்ந்தவர்கள், இதனால் தான் அவர்கள் மரபணு கத்தரிக்காயை ஆதரிக்கிறார்கள்” என்றார்.

மனிதர்களுக்கும், உயிரினங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் மரபணு கத்தரிக்காய் பயிரிட அனுமதி அளிக்க கூடாது என்று சென்னையில் உள்ள தூளிகள் சுற்றுச் சூழல் அமைப்பு தலைவர் டாக்டர் திருத்தணிகாசலம் கூறி உள்ளார். அவர் கூறும் போது, ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் மரபணு கத்தரிக்காய்க்கு தடை கோரி வழக்கு தொடர்ந்தோம். அதன் பிறகு தான் மத்திய அரசு அதற்கு தடை விதித்தது. “மீண்டும் சர்வதேச மரபணு மாற்று நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர் மறைமுகமாக மரபணு கத்தரிக்காயை கொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.

இதை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். மரபணு மாற்று காய்கறி, பழங்களை இந்திய மண்ணில் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். விரைவில் மரபணு மாற்று காய்கறி, பழங்களால் ஏற்படும் தீமைகள் பற்றி சென்னையில் கருத்தரங்கம் நடத்துவோம்” என்று டாக்டர் திருத்தணிகாசலம் கூறினார்.

No comments: