Tuesday, June 14, 2011

சிவசங்கரனிடம் கலாநிதிமாறனின் பேரம்.




கடந்த வாரம், கலாநிதி மாறனும், காவேரி கலாநிதியும், திடீர் பயணமாக சிங்கப்பூர் சென்றார்கள். இந்தச் செய்தி வெளியில் கசியக் கூடாது என்று அவர்கள் நினைத்தாலும், செய்தி பரவவும், உடல்நலக் குறைவுக்காக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தை சந்திக்கவே சிங்கப்பூர் செல்வதாக, மாறன்கள் தரப்பிலிருந்து தகவல் பரப்பப் பட்டது.

சிங்கப்பூர் சென்று, கலாநிதியும், காவேரி கலாநிதியும், ஏர்செல் சிவசங்கரனுக்கு நெருக்கமான உறவினர்களின் மூலம் சிவசங்கரனிடம் எப்படியாவது எடுத்துச் சொல்லி, புகாரை வாபஸ் பெற கேட்டிருக்கிறார்கள்.

ஆனால், மாறன் குடும்பத்தினரால் பல்வேறு துன்பங்களுக்கு ஆட்பட்ட, சிவசங்கரன் குடும்பத்தினர் இவர்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என்று தெரிகிறது. மேலும், நக்கல் செய்யும் விதமாக, எது வேண்டுமானாலும் செய்வேன் என்றால், சன் டிவியையும், ஸ்பைஸ் ஜெட் விமான சேவையையும் விற்கத் தயாரா என்று கேட்டதும், கலாநிதி அதிர்ந்து போயிருக்கிறார்.

பிறகு, சிவசங்கரன் தரப்பில், சிபிஐயிடம் புகாரும், வாக்குமூலமும் கொடுத்த பிறகு, அதை வாபஸ் வாங்கினால், இந்தியாவில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள சிவசங்கரனுக்கு கடும் நெருக்கடிகள் ஏற்படும் என்பது எடுத்துச் சொல்லப் பட்டிருக்கிறது. ஆனாலும், சளைக்காத கலாநிதி மாறன், இழப்பீட்டு தொகையாக 2000 கோடி ரூபாய் வரை, (லஞ்சமாக) கொடுக்க முனைந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், சிவசங்கரனுக்கு இவர்கள் மீதான கோபம் தணியவில்லை என்று கூறப்படுகிறது. அனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு, ஏர்செல் நிறுவனத்தை விற்க வேண்டும் என்று மாறன்கள் நெருக்கடி கொடுத்ததும் விற்க முடிவு செய்த, சிவசங்கரனுக்கு அனந்தகிருஷ்ணன் 500 கோடி ரூபாய் கொடுக்காமல் பாக்கி வைத்திருந்ததாகவும், அந்தத் தொகையை கொடுத்த பிறகே, பங்கு விற்பனை தொடர்பான ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியும் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால், உடனடியாக பங்கு விற்பனையை முடித்து, ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்க வேண்டும் என்ற அவசரத்தில் இருந்த மாறன்கள், இதற்காக சென்னை காவல்துறையை பயன்படுத்தி, சிவசங்கரன் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்து, சிவசங்கரனையும், அவரது பெற்றோர்களையும், விரட்டியடித்து, மிரட்டியிருக் கிறார்கள். இதன் பின்புதான், சிவசங்கரன் மொத்த ஒப்பந்தத்திலும் கையொப்பம் இட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன.

மாறன்கள் எவ்வளவு கெஞ்சிக் கேட்டாலும், சிவசங்கரனால் புகாரை வாபஸ் வாங்க முடியாத என்பதற்கு, இது மட்டும் காரணமல்ல. சிவசங்கரன் புகாரை வாபஸ் வாங்கினால், சிவசங்கரன் மீது, சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிவசங்கரனுக்குச் சொந்தமான ஹைடெக் ஹவுசிங் என்ற நிறுவனம், கலைஞர் டிவிக்கு 50 கோடி ரூபாய் வழங்கியிருப்பதும் சிபிஐ விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. சிவசங்கரன் இந்தத் தொகையை நேரடியாக வழங்காமல், சகாரா குழும நிறுவனங்கள் என்ற நிறுவனம் மூலமாகவும், மொரீஷியசைச் சேர்ந்த டெலிகாம் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற இரண்டு நிறுவனங்கள் மூலமாக முதலில் பணத்தை அனுப்பி, அதன் பிறகு, சென்னையைச் சேர்ந்த, வீட்டா டெவலப்பர்ஸ் அன்ட் பில்டர்ஸ் மற்றும், ஸ்கை சிட்டி பவுண்டேஷன் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மூலமாக கலைஞர் டிவிக்கு இரண்டு தவணைகளில் 50 கோடியை வழங்கியிருப்பது தெரிய வந்திருக்கிறது.

சிவசங்கரன் சிபிஐக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கும் பட்சத்தில், சிபிஐ, கலைஞர் டிவிக்கு 200 கோடி ரூபாய் கொடுத்தாக தாக்கல் செய்துள்ள இரண்டாவது குற்றப் பத்திரிக்கை போலவே, மற்றொரு குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்து, சிவசங்கரனையும் சிறைக்கு அனுப்ப தயங்காது என்று கூறப்படுகிறது.

எஸ்டெல் என்ற நிறுவனம், முதலில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவதற்கு, சிவசங்கரன் மறைமுகமாக, சென்னையைச் சேர்ந்த வீட்டா டெவலப்பர்ஸ் அன்ட் பில்டர்ஸ் மற்றும், ஸ்கை சிட்டி பவுண்டேஷன் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மூலமாக எஸ்டெல் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவதற்கு, உதவி செய்து விட்டு, ஒதுக்கீடு முடிந்ததும், சிவா குழுமம் என்ற சிவசங்கரனின் நிறுவனம் மூலமாக எஸ்டெல் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதும் சிபிஐ கவனத்துக்கு வந்திருக்கிறது.

எஸ்டெல் நிறுவனத்துக்கும், குறைந்த விலையில் லைசென்ஸ் ஒதுக்கப் பட்டு இருப்பதாக சிஏஜி அறிக்கையிலேயே சுட்டிக் காட்டப் பட்டிருந்தது குறிப்பிடித் தக்கது.

இந்த சூழலில், எஸ்டெல் நிறுவனத்தை சிவசங்கரன் வளைத்ததும், அவர் நிறுவனங்கள் கலைஞர் டிவிக்கு 50 கோடி ரூபாய் கொடுத்ததையும் வைத்து, எளிதாக ஒரு குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்ய முடியும்.

ஆனால், பெரிய முதலைகளான மாறன் சகோதரர்களைப் பிடிப்பதற்காக, சிவசங்கரன் மீது, இப்போதைக்கு நடவடிக்கை இருக்காது என்றே சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிவசங்கரனிடம் நடத்திய பேச்சுவார்த்தை, எதிர்ப்பார்த்த வெற்றியை தராத காரணத்தால், மாறன்கள் மிகுந்த கலக்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அனைத்து பத்திரிக்கைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பும் வழக்கத்தை கொண்டிருந்த மாறன்கள், இப்பொதெல்லாம் நோட்டீஸ் அனுப்பும் பழக்கத்தையும் கைவிட்டு விட்டார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.

மாறன்களின் இந்த நிலைக்கு காரணமாக, அவர்கள் தொழில் நடத்துகையில் துளி கூட நியாயம் பார்க்காமல் நடந்து கொண்டதே காரணம் என்று கூறப்படுகிறது. சிவசங்கரனோடு மோதல் ஏற்பட்டவுடன், அவரது ஸ்டெர்லிங் நிறுவனம் தொடர்பாக எந்தச் செய்தி வந்தாலும், அதை தவறாக சித்தரிக்குமாறு, பல முறை உத்தரவிடப் பட்டிருப்பதாக, சன் டிவி ஊழியர்களே குறிப்பிடுகிறார்கள்.

மாறன்கள் ஈடுபட்ட எந்தத் தொழிலிலும், அவர்கள் நேர்மையாக நடந்து கொண்டதே இல்லை என்று தொழில் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இவர்களின் இந்த நாணயமற்ற போக்கு எரிச்சலை ஊட்டினாலும், அவர்களின் அரசாங்க செல்வாக்கு காரணமாக, எந்த தொழில் அதிபரும் அவர்கள் மீது புகார் கொடுக்க முன்வரவில்லை என்றும், ரத்தன் டாடாவே உரிய நேரம் வரும் வரை அமைதியாக இருந்ததையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

வழக்கமாக, நன்றாக லாபத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒரு தொழிலில் ஈடுபட வேண்டும் என்றால், அந்தத் தொழில் அதிபரை அணுகி, தொழிலை தங்களுக்கு விற்று விடுமாறு கேட்பார்களாம். அவ்வாறு விற்கப்படவில்லை என்றால், சன் டிவியில் அந்த நிறுவனம் தொடர்பாக மோசமாக சித்தரித்து செய்தி வெளியிடுவது இவர்களுக்கு கைவந்த கலை என்றும், சுட்டிக் காட்டப் படுகிறது.

இப்படி அநியாயத் திமிரில் அலைந்து கொண்டிருந்த மாறன் சகோதரர்களுக்கு, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து இவர்கள் மீளுவது மிக மிக கடினம் என்று விபரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

நன்றி - சவுக்கு.

No comments: