Tuesday, June 14, 2011

1ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை தொடர உச்சநீதிமன்றம் உத்தரவு.



திமுக ஆட்சியில் கடந்த கல்வியாண்டில், ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பில் மட்டும் சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தாண்டு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டம் விரிவாக்கப்படவிருந்தது. இதற்காக சுமார் 6கோடி புத்தகங்கள் 210கோடி ரூபாய் செலவில் அச்சிட்டு தயாராய் உள்ளது.

ஆனால், அதிமுக அரசு அமைந்ததும், இந்தத் திட்டம் தரமானதாக இல்லை, எனவே நடப்பு ஆண்டில் இது நிறுத்தி வைக்கப்படுகிறது. நிபுணர் குழு அமைத்து இதை சீரமைத்த பின்னர் பரிசீலனை செய்யப்படும் என்று அறிவித்தது.

இதுதொடர்பாக சட்டத் திருத்த மசோதாவும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதை விசாரித்த உயர்நீதிமன்றம், சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்கும் வகையில் தமிழக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி திருத்த மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதித்து விட்டது. மேலும், நடப்பு ஆண்டிலும் சமச்சீர் கல்வியைத் தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், கடந்த திமுக அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளது. சமச்சீர் கல்வித் திட்டம் என்ற பெயரில் அதிகாரத்தை வரம்பு மீறிப் பயன்படுத்தி அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, அவரது மகள் கனிமொழி ஆகியோர் எழுதிய பாடல்களை பாடப் புத்தகத்தில் சேர்த்துள்ளனர்.

கருணாநிதியின் புகழ் பாடும் பாடல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு தங்களது பாடல்களைப் படிக்கும்படியான கட்டாய நிலையை அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். எனவேதான் இவற்றை நீக்கி தரமான பாடங்களை குழந்தைகளுக்குக் கொடுக்க அரசு முடிவு செய்தது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் பி.எஸ்.செளகான், ஸ்வதேந்திர குமார் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவைப் படித்துப் பார்க்க அவகாசம் தேவைப்படுவதால் நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம்:

தமிழகத்தில் இந்த ஆண்டு 1ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டத்தைத் தொடர வேண்டும். இதர வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி அமல்படுத்துவது குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும்.

இந்தக் குழு தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட வேண்டும். அதில் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குனர் இடம் பெற வேண்டும். இவர்கள் தவிர பள்ளிக் கல்வி வாரிய அதிகாரிகள் 2 பேர், தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் 2 பேரும் இக்குழுவில் இடம் பெற வேண்டும்.

மேலும் 2 வாரத்திற்குள் இந்நிபுணர் குழு அறிக்கையை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும். நிபுணர் குழு தாக்கல் செய்த அறிக்கையின் மீது 1 வாரத்திற்குள் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என கூறியுள்ளது.

இந்நிலையில் உயர்நீதி மன்றம் தீர்ப்பளிக்கும் வரை 2, 3, 4, 5, 7, 8, 9, 10 - ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தவேண்டாம் எனவும், உயர்நீதிமன்றம் தீர்ப்புக்குப் பிறகு மற்ற வகுப்புகளுக்கு பாடம் நடத்தலாம் என உத்தரவிட்டுள்ளது.

No comments: