Tuesday, June 14, 2011

தேர்தலில் மோசடி செய்து வென்று நாட்டை ஏமாற்றியவர் ப.சிதம்பரம் : ஜெயலலிதா தாக்கு.


டெல்லியில் பிரதமரை சந்தித்தபின் முதல்- அமைச்சர் ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. தமிழக அரசின் கோரிக்கைகளுக்கு உதவுவதாக தெரிவித்தார். தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை போக்க மத்திய தொகுப்பில் இருந்து தற்காலிகமாக 1000 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. இதில் தி.மு.க. தலைவரின் குடும்பத்தினர் சிக்கி உள்ளனர். சிலர் ஜெயிலுக்கு சென்று இருக்கிறார்கள்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இப்போது தயாநிதி மாறனும் சிக்கி உள்ளார். அவர் மத்திய மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும். இல்லையெனில் அவரை பிரதமர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

கேள்வி:- சோனியா நடத்தும் தேநீர் விருந்தில் நீங்கள் பங்கேற்பதாக பேசப்பட்டதே, ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லையே, கூட்டணிக்கு முயற்சி நடக்கிறதா?

பதில்:- காங்கிரஸ் இப்போதுவரை தி.மு.க. வுடன் கூட்டணியில் இருக்கிறது. எனவே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கும் கேள்வி எழவில்லை.

கேள்வி: காங்கிரஸ்- அ.தி.மு.க. கூட்டணி மீண்டும் ஏற்பட வாய்ப்பு உள்ளதா?

பதில்:- காங்கிரசும், தி.மு.க.வும் இப்போதுவரை கூட்டணியில் நீடிக்கிறார்கள்.

கேள்வி:-காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகினால் நீங்கள் ஆதரிப்பீர்களா?

பதில்:- கற்பனையான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. மத்திய மந்திரிசபைக்கு ஆதரவு தேவை என்றால் அவர்கள்தான் கேட்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் ப.சிதம்பரத்தின் வெற்றி மோசடியானது. கம்ப்யூட்டரில் டேட்டா எண்ட்ரி¬யை திருத்தி அவர் எம்.பி. ஆகி உள்ளார். பண பலத்தால் தேர்தலை சந்தித்தார். அவரது வெற்றியை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. மோசடி செய்து வெற்றி பெற்ற ப.சிதம்பரம் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும். முல்லைபெரியார் அணை விவகாரத்தில் கேரள அரசு அணை கட்டுவதை தமிழகம் எதிர்த்து வருகிறது. ஆனால் கேரள அரசு அதை கண்டு கொள்வதாக இல்லை.

எனவே தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட சட்டப்பூர்வ நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும். புதிய தலைமை செயலகம் புதிய தலைமை செயலக கட்டிடத்தில் அரசு இயந்திர பணிகளுக்கு கட்டிட அளவு குறைவாக உள்ளது. மாநாடு கூட்ட அரங்கு பகுதியில் மீன்தொட்டி பெரிய அளவில் உள்ளது. அந்த கட்டிடத்தில் தலைமை செயலகம் இயங்க முடியுமா? என்பதை பத்திரிகையாளராகிய நீங்களே பார்த்து முடிவு செய்ய அழைப்பு விடுக்கிறேன்.

இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை பிரச்சினையில் அங்குள்ள முகாம்களில் எவ்வளவு தமிழர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணிக்கை சரியாக தெரியவில்லை. இலங்கை சொல்வதை முழுமையாக நம்பும்படி இல்லை. எனவே அங்குள்ள தமிழர்களின் நிலையை தெரிந்து கொள்ள தமிழ்நாட்டில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் குழுவை அனுப்ப வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளேன்.

கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

தி்முக-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து கொண்டிருப்பதற்கு ப.சிதம்பரம் தான் முக்கியக் காரணம் என்று ஜெயலலிதா கருதுவதாகத் தெரிகிறது. மேலும் டெல்லி வந்த ஜெயலலிதாவை சோனியா சந்திக்காமல் தவிர்த்ததற்கும் சிதம்பரம் தான் காரணம் என்று ஜெயலலிதா கருதுகிறார்.

இதனால் தான் அவர் மீது ஜெயலலிதா பாய்ச்சல் காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

No comments: