Tuesday, June 14, 2011

போதைப்பொருள் கடத்தல் வழக்கு : தூக்குதண்டனை விதிக்கப்பட்ட சென்னை பெண் ; காப்பாற்றக்கோரி தமிழக அரசிடம் மனு.

போதைப்பொருள் கடத்தல் வழக்கு:  தூக்குதண்டனை விதிக்கப்பட்ட சென்னை பெண் தவிப்பு;  காப்பாற்றக்கோரி உறவினர்கள் தமிழக அரசிடம் மனு

சென்னையை அடுத்த பட்டூர் மாங்காடு பஜார் தெருவைச் சேர்ந்தவர் பசிலாபீ வயது 62. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். குடும்பம் வறுமையில் வாடியதால், வெளிநாடு சென்று வேலை செய்து குடும்பத்தை காப்பாற்ற பசிலாபீ முடிவு செய்தார்.

இதற்காக திருவல்லிக்கேணியை சேர்ந்த டிராவல் ஏஜெண்டு ஒருவரை அணுகினார். கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந்தேதி பசிலாபீ மலேசியா புறப்பட்டார். அவரை வழியனுப்ப விமான நிலையம் வந்த டிராவல் ஏஜெண்டு உரிமையாளர், பசிலாபீயிடம் ஒரு சூட்கேசை கொடுத்தார்.

ஒரு நபரின் பெயரை குறிப்பிட்டு மலேசியாவில் போய் இறங்கியதும் சூட்கேசை அந்த நபரிடம் கொடுக்குமாறு கூறினார். பசிலாபீ மலேசியா போய் இறங்கியதும் கோலாலம்பூர் விமான நிலையத்தில அவரது உடமைகளையும், சூட்கேசையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது அந்த சூட்கேசில் 3 கிலோ எடை கொண்ட “கேட்டமின்” என்ற கொடிய போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை மலேசிய போலீசார் கைது செய்தனர். போதைப் பொருள் கடத்தியதாக அவர் மீது அந்நாட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் பசீலாபீக்கு மரண தண்டனை (தூக்கு) விதிக்கப்பட்டது. இந்த தகவல் அங்குள்ள டிராவல்ஸ் ஏஜெண்டு மூலமாக சென்னையில் உள்ள பசிலாபீ குடும்பத்துக்கு தாமதமாக தெரிவிக்கப்பட்டது.

பசிலாபீக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை அறிந்ததும் அவரது குழந்தைகளும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவரை காப்பாற்ற பல்வேறு வழிகளிலும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் பலன் கிடைக்கவில்லை.பசிலாபீயை மலேசியாவுக்கு அனுப்பி வைத்த சென்னை டிராவல் ஏஜெண்டும் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கைவிரித்து விட்டார்.

இதனால் பசிலாபீயின் மகள்களும், உறவினர்களும் முதல்-அமைச்சரின் குறைதீர்ப்பு பிரிவிலும், சென்னை போலீஸ் கமிஷனரிடமும் தங்களது தாயாரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு கொடுத்தனர்.

இதுபற்றி பசிலாபீயின் மூத்தமகள் நூர்ஜகான் கூறியதாவது:-

நாங்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். எங்களது தந்தை இறந்த பின்பு குடும்பம் வறுமையில் வாடியது. இதனால் எங்களது தாயார் திருவல்லிக்கேணி டிராவல் ஏஜெண்டு மூலம் மலேசியாவுக்கு சென்றார். அந்த ஏஜெண்டு, மலேசியாவில் ரூ.10 ஆயிரம் மாத சம்பளத்தில் வீட்டு வேலைக்கு அனுப்புவதாக தெரிவித்தார்.

வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் விற்று ரூ.35 ஆயிரத்தை அந்த ஏஜெண்டிடம் கொடுத்தார். கடந்த 2009-ம் ஆண்டு எங்களது தாயாரை மலேசியாவுக்கு அனுப்பி வைத்தோம். அப்போது விமான நிலையத்தில் ஒரு சூட்கேசை கொடுத்து மலேசியா சென்றதும் அதை ஒருவர் வந்து வாங்கிக் கொள்வார் என்று கூறினார்.

சூட்கேசில் என்ன இருக்கிறது என்று அவர் சொல்லவில்லை. அம்மாவும் அதை திறந்து பார்க்கவில்லை. ஆனால் மலேசியா சென்று இறங்கிய பிறகுதான் அந்த சூட்கேசில் போதைப் பொருள் இருந்தது எங்களது தாயாருக்கு தெரிய வந்துள்ளது. தவறான முறையில் எங்களது தாயாருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மலேசியா செல்லும் முன்பு, சில ஆண்டுகள் துபாயில் வேலை பார்த்தார். அதன்மூலம் கிடைத்த சம்பளத்தை வைத்துதான் எனக்கும், எனது சகோதரிகளுக்கும் திருமணம் செய்து வைத்தார். அங்கு வேலை செய்வதற்கான “விசா” காலம் முடிவடைந்து விட்டதால் மலேசியாவுக்கு செல்ல ஒப்புக் கொண்டார்.

எங்களது தாயார் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் டிராவல் ஏஜெண்டை அணுகி முறையிட்டோம். அவர் 2 மாதத்தில் சிறையில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வருவதாக உறுதியளித்தார். 2 மாதங்கள் கழித்து மீண்டும் அவரை சந்தித்த போது மேலும் 2 மாத அவகாசம் கேட்டார். ஆனால் அதன்பிறகும் எதுவும் நடக்கவில்லை.

எங்களது குடும்பத்துக்கு நஷ்டஈடாக ரூ.4 லட்சம் தருவதாக டிராவல் ஏஜெண்டு உறுதியளித்து கடிதம் தந்தார். ஆனால் உறுதியளித்தபடி பணமும் தரவில்லை. எங்களது தாயாரை அவர் ஜாமீனிலும் எடுக்கவில்லை. பின்னர் நாங்கள் ஏஜெண்டை பார்க்க அவரது ஆபீசுக்கு சென்ற போதெல்லாம் எங்களை சந்திப்பதை அவர் தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில்தான் கடந்த 4 நாட்களுக்கு முன்பு எங்களது தாயாருக்கு மலேசிய கோர்ட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்கும் தகவல் தெரியவந்தது. இந்த தகவல் எங்கள் குடும்பத்தையே நிலை குலைய செய்து விட்டது. செய்யாத குற்றத்துக்காக தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ள எங்கள் தாயாரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நூர்ஜகான் கூறினார்.

1 comment:

கோவி.கண்ணன் said...

கொடுமை,

கையாலாகாத ம(க்)கள்கள், 62 வயதுடையவரை வெளி நாட்டுக்கு அனுப்பிதான் பிழைக்க வேண்டுமா ? அந்த மூதாட்டி பணயம் வைக்கப்பட்டு சிக்கியுள்ளார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. சிக்கியதும் அழுது புலம்புகிறார்கள், பாவம் அந்த மூதாட்டி