Tuesday, June 14, 2011

“நான் ரெடி.. நீங்க ரெடியா?” - காங்கிரஸ் உடனடியாக “ரெடியில்லை”



“அ.தி.மு.க.விடம் ஒன்பது எம்.பி.க்கள் இருக்கின்றனர். மத்திய அரசின் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைக்கு நாம் கைகொடுக்க விரும்புகிறோம். அதற்காக ஒன்பது எம்.பி.க்களின் நிபந்தனையற்ற ஆதரவை காங்கிரசுக்கு அளிக்கத் தயாராக இருக்கின்றோம்” இவ்வாறு கூறியவர், அ.தி.மு.க.வின் தலைவி ஜெயலலிதா!

காங்கிரஸ் கட்சி, மத்தியில் தைரியமான சில முடிவுகளை எடுப்பதற்கு, அ.தி.மு.க. ஆதரவை காங்கிரஸ் தயக்கமில்லாமல் ஏற்றுக்கொள்ளும் என ஜெயலலிதா நினைக்கிறார். அந்த நினைப்பே, “ஆதரவு தரத் தயார்” என்று வார்த்தைகளாக வெளியாகியிருக்கின்றது.

டில்லியில் இன்று பிரதமரைச் சந்திக்கும் சூழ்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தெரிய வேண்டியதெல்லாம், ஒரேயொரு கேள்விக்குப் பதில்தான். “காங்கிரஸ், தி.மு.க.வைக் கழட்டிவிட்டு வருவதற்கு உடனே தயாராக இருக்கிறதா?”

ஜெயலலிதா டில்லி வந்திறங்கி ஒரு நாளாகிவிட்டது. இந்தக் கேள்விக்கான பதில் இன்னமும் அவருக்குக் கிடைக்கவில்லை.

இதே கேள்வியை, டில்லியிலுள்ள எமது அரசியல் தொடர்பாளர்கள் சிலரிடம் கேட்டுப் பார்த்தோம். அதற்கு அவர்கள் கூறும் பதில்- “இல்லை”

“காங்கிரஸ் கட்சி, தி.மு.க.வைக் கழட்டிவிடத்தான் நினைக்கிறது. ஆனால், அதை உடனடியாகச் செய்வதாக உத்தேசமில்லை. அ.தி.மு.க.வை மாத்திரமல்ல, தி.மு.க.வையும் இன்னமும் சிறிது காலத்துக்கு ஓடவிட்டுப் பார்க்க விரும்புகிறது காங்கிரஸ். இன்னமும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், இரு கட்சிகளையும், நிச்சயமற்ற நிலையில் இன்னமும் சிறிதுகாலம் வைத்திருக்க விரும்புகிறது டில்லி” என்கிறார், டில்லியில் காங்கிரஸ் விவகாரங்களுடன் அதிகம் பரிச்சயமுடைய ஒருவர்.

காங்கிரஸ் கட்சி, அ.தி.மு.க.வை ஸ்டான்ட்-பை நிலையிலேயே வைத்திருக்க விரும்புகிறது. ஒருவேளை கலைஞர், தாமாகவே காங்கிரஸ் உறவை முறித்துக்கொள்ள முன்வந்தால், அப்போது அ.தி.மு.க. பக்கமாகக் கையை நீட்ட அது உதவும்.

இதற்குள் மற்றொரு வேடிக்கையும் அதுபாட்டுக்கு நடந்துகொண்டிருக்கிறது.

தி.மு.க., தமக்காக காங்கிரஸிடம் லாபி செய்ய சிலரை டில்லியில் இறக்கிவிட்டிருக்கிறது. “தி.மு.க.வுடன் உறவை முறித்துக்கொள்ளக் கூடாது” என்று லாபி பண்ணுவதல்ல இவர்களது வேலை. “அ.தி.மு.க.வுடன் உறவு வேண்டாம். ஜெயலலிதாவை நம்ப முடியாது” என்றே இந்த தி.மு.க. லாபிக்காரர்கள் ஓடியோடி பிரசாரம் செய்கிறார்கள்.

தி.மு.க. டில்லியில் இறக்கிவிட்டுள்ள இந்த லாபி குழு பற்றிய சோகம் என்னவென்றால், இந்தக் குழுவில் ஒரேயொருவர்தான் தேசிய அரசியலில் ஈடுபடும் வட இந்தியத் தலைவர். மற்றைய அனைவருமே தமிழக காங்கிரஸின் குட்டி தெய்வங்கள்.

அ.தி.மு.க.வை நம்ப முடியாது என இவர்கள் செய்யும் லாபிக்கு இவர்கள் இழுப்பது பழைய கதை ஒன்றை.

1998ம் ஆண்டு, அ.தி.மு.க. ஆதரவளித்து, வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்றார். திடீரென பா.ஜ.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஜெயலலிதா விலக்கிக் கொண்டார். அதையடுத்து வாஜ்பாய் அரசே 1999ம் ஆண்டு ஏப்ரலில் கவிழ்ந்தது.

இந்தச் சம்பவத்தைக் கூறும் தி.மு.க. லாபி குழு, “இப்படியான ஒருவருடன் உறவு வைத்துக் கொள்வது எவ்வளவு ரிஸ்க்கானது என்று புரிகிறதா” என்று லாபி செய்கிறது.

காங்கிரஸ் தலைமைக்கு இந்த விடயம் தெரியாதது இல்லை.அவர்கள் இதுபற்றிக் கவலைப்படவுமில்லை.

வாஜ்பாய்க்கும், காங்கிரஸ் கட்சிக்குமிடையே பெரிய வித்தியாசம் இருக்கின்றது. வாஜ்பாய் போலில்லாமல், காங்கிரஸ் கட்சி தமது கூட்டாளிகளிடமும் ஒரு ‘பிடி’ வைத்தே டீல் பண்ணுவது வழக்கம். இதனால், வாஜ்பாய்க்கு செய்ததுபோல காங்கிரஸ் கட்சிக்கெல்லாம் எதுவும் செய்ய முடியாது.

காங்கிரஸைப் பொறுத்தவரை அவர்கள் உடனடியாக அவசரப்பட வேண்டிய தேவை எதுவும் கிடையாது. தி.மு.க.வை உடனடியாக விரட்டுவதால் பலன் ஏதும் கிடைக்கப்போவதில்லை.

ஜெயலலிதா டில்லிக்குச் செல்கிறார் என்பது உறுதியானவுடனேயே, “இருந்து பாருங்கள், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்ற அறிவிப்போடுதான் தலைவி திரும்பி வருவார்” என்று அ.தி.மு.க. தலைவர்கள் பரபரத்துக் கொண்டிருக் கிறார்கள்.

அதற்கெல்லாம், உடனடியாக சான்சே இல்லை என்பதுதான் டில்லி நிலைமை.

டில்லிவரை சென்றுள்ள தமிழக முதல்வர், கூட்டணி உறவுக்கு வெளிப்படை யாகவே கையை நீட்டியிருக்கிறார். அவரது, “நான் ரெடி.. நீங்க ரெடியா?” கேள்விக்கு காங்கிரஸ் உடனடியாகப் பதில் கூற “ரெடியில்லை”

No comments: