Tuesday, June 14, 2011

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை திரும்ப பெறவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் : பிரதமரிடம் ஜெயலலிதா மனு .

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை திரும்ப பெறவேண்டும்: பிரதமரிடம் ஜெயலலிதா மனு

பிரதமர் மன்மோகன்சிங்கிடம் முதல்- அமைச்சர் ஜெயலலிதா 30 பக்க மனு கொடுத்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-

விடுதலைப்புலிகளுக்கு எதிரான கடைசிக் கட்டப் போரில் இலங்கை ராணுவம் போர்க் குற்றங்களை புரிந்துள்ளது. மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டுள்ளது. இதில் ஏராளமான தமிழர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். மனிதாபிமான உதவிகளும் மறுக்கப்பட்டுள்ளன. ஐ.நா.சபை நியமித்த நிபுணர் குழு விசாரணையில் இவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, இந்த விவகாரத்தை ஐ.நா. சபைக்கு எடுத்து செல்ல வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முள்வேலி முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும், அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்படும் வரை, இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும். தமிழக மக்களுக்கு அளிக்கப்படும் சமூக நலத் திட்டங்களை, இலங்கை அகதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

கச்சத்தீவு திரும்பப் பெற வேண்டும், தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை அங்கு நிலைநாட்டப்பட வேண்டும். தமிழ்நாடு நீண்ட கடற்கரையை தன்னகத்தே கொண்டுள்ளது. 10 லட்சம் பேர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 54 ஆயிரம் பழமையான படகுகளையும், 6 ஆயிரத்து 200 நவீன படகுகளையும் பயன்படுத்தி வருகின்றனர். மீனவர்களின் சுமூக- பொருளாதார அந்தஸ்தை உயர்த்த, மீன்பிடித்துறையை நவீனமயமாக்க சிறப்பு உதவிகள் அளிக்க வேண்டும். அதாவது புதிய மீன்பிடி துறைமுகங்கள் ஏற்படுத்த வேண்டும்.

“நடுக்கடல் மீன் உலர்த்தல் பூங்கா” அமைக்க உதவி அளிக்க வேண்டும். பழமையான படகுகளை புதுப்பிக்க ஆண்டுதோறும் மத்திய அரசு அளித்து வரும் ரூ.3 கோடி நிதியை ரூ.15 கோடியாக அதிகரித்து வழங்க வேண்டும். சில ஆண்டுகளாக தமிழகத்தின் மின்தேவை அதீதமாக அதிகரித்துள்ளது.

உடனடியான மின் உற்பத்திக்கு வாய்ப்பு இல்லை. தற்போது, மொத்த மின்சார தேவை 11 ஆயிரத்து 500 மெகா வாட் ஆகும். ஆனால், 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரமே கிடைக்கிறது. தனியாரிடம் இருந்து 1,800 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது. இதை சரிக்கட்ட மத்திய அரசு சிறப்பு சலுகை உதவியாக ரூ.40 ஆயிரம் கோடி அளிக்க வேண்டும். “சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களுக்கு ரூ.45 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது.

இந்த திட்டங்களுக்கும் மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையம், நெய்வேலி அனல் மின் நிலையம், கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகியவற்றில் பணிகளை விரைந்து முடித்து வரும் ஆண்டில் மின் உற்பத்திக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக மின்சாரம் வழங்க வேண்டும். சென்னையில் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மெட்ரோ பாலிட்டன் நகரமான சென்னை மிகப்பெரிய நகரமாக வளர்ச்சி அடைந்து இன்னும் 10 ஆண்டுகளில் மக்கள் தொகை 1 கோடி ஆக உயரும் என எதிர்க்கப்படுகிறது. எனவே சென்னையில் நகர்ப்புற போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியுள்ளது.

வருகிற 2026-ம் ஆண்டில் இந்த கட்டமைப்பை 46 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளோம். அதற்காக சென்னையில் “மோனோ ரெயில்” திட்டத்தை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. தொடக்கத்தில் இந்த திட்டம் 111 கி.மீட்டர் தூரம் செயல்படுத்தப்படும். பின்னர் படிப்படியாக 300 கி.மீட்டர் தூரத்துக்கு விரிவு படுத்தப்பட உள்ளது.

முதல் கட்டமாக செயல்படுத்தப்பட உள்ள 111 கி.மீட்டர் தூர திட்டம் இன்னும் 2 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக 1 கி.மீட்டருக்கு ரூ. 150 கோடி வீதம் ரூ. 16,650 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்திற்கு தேசிய நகர்ப்புற போக்குவரத்து திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதி உதவி வழங்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை (ஐ.டி.) தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும். அவர்களின் அறிவு திறனை வளர்க்க மேல்நிலைப் பள்ளிகள், என்ஜினீயரிங், பாலி டெக்னிக் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர்கள் (மடிக்கணினி) வழங்கப்பட உள்ளது. வர இருக்கின்ற 5 ஆண்டுகளில் 68 லட்சம் லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வழங்க உள்ளோம்.

அதற்காக ரூ. 10,200 கோடி தேவைப்படுகிறது. முதலாம் ஆண்டில் 9.12 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளது. எனவே இந்த திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 10,200 கோடியை சிறப்பு மானியமாக வழங்க வேண்டும். தமிழக அரசு காவிரி ஆற்றுடன் அக்னியார், தெற்கு வெள்ளார், பம்பார், மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாலறு போன்றவற்றை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள வறட்சி மாவட்டங்கள் வளம் பெறும். இதற்கான திட்டம் ரூ. 4 ஆயிரம் கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே நதிகள் இணைப்புக்கு ரூ. 4 ஆயிரம் கோடியும், உள்நாட்டு நீர்வழிச் சாலை திட்டத்துக்கு ரூ. 650 கோடியும் வழங்க வேண்டும். காவிரி பிரச்சினையை தீர்க்க சுப்ரீம் கோர்ட்டு நடுவர் மன்றத்தை அமைத்தது. பின்னர் 5-2-2007-ம் ஆண்டில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதை மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட பிரதமர் நட வடிக்கை எடுக்க வேண்டும். முல்லைபெரியாறு அணை பிரச்சினை தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. எனவே கேரள அரசு புதிய அணை கட்ட எந்தவித ஆய்வோ அல்லது தொடக்க நிலை பணிகளோ மேற் கொள்ளக் கூடாது. ஆகவே தமிழக அரசின் வழக்கு முடியும் வரை கேரள அரசு மேற்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்க கூடாது என அறிவுரை வழங்க வேண்டும்.

ஆந்திர அரசு பாலாறு குறுக்கே அணை கட்ட முயற்சித்து வருகிறது. அதை நிறுத்தும்படி பிரதமர் அறிவுறுத்த வேண்டும். இந்த அரசு கிராமப்புறத் தில் உள்ள ஏழை மக்களின் நலனுக்காக சூரிய ஒளியில் பசுமை வீடு திட்டத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. 300 சதுர அடியில் ஒரு யூனிட்டுக்கு ரூ.1.80 லட்சம் செலவாகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும். இந்த அரசு நடப்பாண்டில் 115 லட்சம் டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்வதே இலக்காக கொண்டுள்ளது. இதற்கு உரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு மொத்தம் 26 லட்சம் டன் உரம் தேவைப்படுகிறது.

11.12 லட்சம் டன் யூரியா, 3.66 லட்சம் டன் டி.ஏ.பி., 4.80 லட்சம் டன் எம்.ஒ.பி., 6.52 லட்சம் காம்ப்ளக்ஸ் உரம் இதில் அடங்கும். இதனால் போதுமான உரத்தை மத்திய அரசு தமிழக அரசுக்கு அளிக்கவேண்டும். தமிழ்நாட்டில் விவசாயத்தை நவீன தொழில்நுட்ப மூலம் பயன்படுத்துவதற்கான நிதி அளிக்கவேண்டும். உள்ளூரில் ஜவுளி தொழிலை காப்பாற்ற வெளி நாட்டுக்கு பருத்தி ஏற்றுமதி செய்ய தடை செய்யவேண்டும்.

என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு, புதிதாக குறைந்த பட்ச தகுதி வரம்பை, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு வகுத்துள்ளது. இதனால் தமிழகத்தில் மிகவும் பின் தங்கிய, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியான பிரிவு மாணவர்கள் பாதிக்கப்படுவார். எனவே, முந்தைய தகுதி வரம்பையே மீண்டும் கொண்டு வரவேண்டும். கடந்த 1983-ம் ஆண்டில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இலங்கை- தூத்துக்குடி இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து, நேற்று மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையை துவங்கும் முன்பு மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்கப்பட வில்லை. சாத்தியமற்ற சூழ்நிலையில் இந்த கப்பல் போக்குவரத்து துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைய வாய்ப்புள்ளது என்பதால், தூத்துக்குடி- இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்தை நிறுத்தி வைக்க வேண்டும். சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களை கூடுதல் மானியம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்துக்கு மாதம் ஒன்றுக்கு 65,140 கிலோ லிட்டர் மண்எண்ணெய் தேவைப்படுகிறது. எனவே மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு போதுமான மண்எண்ணை வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments: