Tuesday, June 14, 2011

பிரதமர் மன்மோகன்சிங்குடன் ஜெயலலிதா சந்திப்பு.


முதல் அமைச்சர் ஜெயலலிதா பதவி ஏற்ற பின் 2 நாள் பயணமாக நேற்று டெல்லி சென்றார். தேர்தல் வெற்றிக்குப்பின் முதல் முறையாக டெல்லி சென்ற அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா டெல்லி சாணக்கியபுரியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்துக்கு சென்று தங்கினார். அங்கு அவரை டெல்லி முதல்-மந்திரி ஷீலாதீட்சித், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, பாரதீய ஜனதா கட்சி செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்கள்.

தேர்தல் வெற்றிக்காக அவர்கள் ஜெயலலிதாவுக்கு பூச் செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இன்று காலை 12 மணியளவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக திட்ட பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரினார்.

20 கிலோ இலவச அரிசி திட்டத்துக்கு கூடுதல் அரிசி ஒதுக்கவும், தமிழ்நாட்டில் நிலவும் மின்சார தட்டுப்பாட்டை போக்க உடனடியாக மத்திய தொகுப்பில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

தமிழகத்துக்கான வருடாந்திர நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தவும், நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கி பணியை துரிதப்படுத்தவும், வேண்டுகோள் விடுத்தார். இலங்கை தமிழர் பிரச்சினை பற்றியும் பிரதமருடன், ஜெயலலிதா முக்கிய பேச்சு நடத்தினார்.

இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்த அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவித்து அந்நாட்டுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும், கச்சத்தீவை மீட்பது சம்பந்தமாகவும் தமிழக சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் விரைந்து நடவடிக்கை எடுக்க பிரதமரிடம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தினார். ஜெயலலிதாவுடன் தமிழக அரசின் தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, முதல்-அமைச்சரின் செயலாளர்கள் ராமமோகன் ராவ், ஷீலாபிரியா, நிதித் துறை செயலாளர் கே.சண்முகம் உள்பட தமிழக அரசு உயர் அதிகாரிகளும் டெல்லி சென்றனர். அவர்களும் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர்.

பிரதமரை சந்தித்தபின் முதல்-அமைச்சர் ஜெயலலிதா டெல்லியில் பத்திரிகை யாளர்களுக்கு பேட்டி அளிக்கிறார். அதன் பிறகு இன்று மாலையே சென்னை திரும்புகிறார்.

No comments: