Sunday, May 15, 2011

டெல்லியில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க ஜெயலலிதாவுக்கு சோனியா அழைப்பு.



டெல்லியில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க ஜெயலலிதாவுக்கு இன்று சோனியா அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, சனிக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.

அப்பொழுது சோனியாவிடம் ஜெயலலிதாவும் நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2004 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸக்கு இடையே கூட்டணி ஏற்பட்டதற்குப் பிறகு சோனியாகாந்தியும் ஜெயலலிதாவும் இடையே எவ்வித சந்திப்பும் நிகழவில்லை. இந்நிலையில் சோனியாகாந்தி, வலியவந்து ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு வாழ்த்துக் கூறியிருப்பதால் திமுக வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

காங்கிரஸ் கூறிய காரணம் :

சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றி குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் கூறியபோது, "தமிழகத்தில் ஊழலும், விலைவாசி உயர்வுமே தோல்விக்குக் காரணம்' என்று தெரிவித்தனர். இந்த இருவரின் பேட்டியால் திமுக ஏற்கெனவே அதிர்ச்சியில் இருந்தது. இந்நிலையில் அதிமுகவுடன் காங்கிரஸ் நெருங்கி வருவது போன்ற நிகழ்வு திமுகவை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நேரில் சந்திப்பு?

மாநிலஅரசின் திட்டங்களுக்காக மத்தியஅரசின் நிதியைப் பெற திட்டக் குழு துணைத் தலைவரை ஒவ்வொரு மாநில முதல்வரும் சந்திப்பது வழக்கம். அதன்படி, முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள ஜெயலலிதாவும், தில்லி சென்று திட்டக் கமிஷனிடம் மாநிலத்தின் திட்டங்களைத் தெரிவித்து நிதியைக் கோருவார். அப்போது சோனியாவை அவர் சந்திக்கலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க ஜெயலலிதாவுக்கு இன்று சோனியா அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்மூலம் அவர் சோனியாவை சந்திப்பது உறுதியாகியுள்ளது.


திமுகவை காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே விரட்ட முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது :

சோனியாகாந்தி காங்கிரஸ் தலைவரான பின்னர், ஜெயலலிதா அவரையும் காங்கிரசையும் ஒதுக்க ஆரம்பித்தார். இதனால் மிக வலுவான அந்தக் கூட்டணி உடைந்தது.

இதையடுத்து காங்கிரஸ் கூட்டணியில் திமுக இடம் பிடித்தது. 2004 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இந்தக் கூட்டணி 40க்கு 40 இடங்களைப் பிடித்து காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர திமுக காரணமாக அமைந்தது. அடுத்து 2006ல் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இக் கூட்டணி வென்று திமுக ஆட்சியைப் பிடித்தது.

2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க ஜெயலலிதா தீவிரமாக முயன்றார். ஆனால், ஜெயலலிதாவுடன் பேசுவதைக் கூட சோனியா தவிர்த்துவிட்டதால் அந்தக் கூட்டணி உருவாகவில்லை.



இந்நிலையில் திமுகவை ஒழித்துக் கட்டுவது என்ற வேலையை காங்கிரசின் அடுத்த தலைமுறைத் தலைவரான ராகுல்காந்தி ஆரம்பித்தார். திமுகவுக்கு எல்லா வகையிலும் நெருக்குதல் கொடுக்க ஆரம்பித்தார். அவருக்கு பேருதவியாக வந்து சேர்ந்தது ஸ்பெக்ட்ரம் விவகாரம்.

இதனால் திமுகவை கழற்றிவிட சோனியாவும்-ராகுலும் முடிவு செய்துவி்ட்டதாகத் தெரிகிறது. இதற்கு முன்னோட்டமாக அதிமுகவுடனான பழைய உறவை புதுப்பிக்கும் முயற்சிகளை காங்கிரஸ் ஆரம்பித்துள்ளது.

முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள ஜெயலலிதாவுக்கு தேநீர் விருந்து தர உள்ளார் சோனியா. இதற்காக டெல்லி வருமாறு ஜெயலலிதாவுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இதில் ராகுல்காந்தியும் பங்கேற்று ஜெயலலிதாவை மீண்டும் கூட்டணிக்குக் கொண்டு வரும் வேலையை தீவிரப்படுத்துவார் என்று தெரிகிறது.

1999ம் ஆண்டில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமியுடன் இணைந்து சோனியாவுக்கு ஜெயலலிதா தேநீர் விருந்து தந்ததும், இருவரும் இணைந்து வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து, ஆட்சியைக் கவிழ்த்ததும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொல்ல மத்திய அரசு ஆயுதம் தந்தது
ம், குழந்தைகள் உள்பட 20,000 தமிழர்கள் ஒரு மாதத்தில் கொன்று குவிக்கப்பட்டபோதும், கருணாநிதி அமைதி காத்தார். காரணம், இதைக் கண்டித்தால் சோனியா-ராகுல் காந்திக்கு கோபம் வரும் என்பதால்.

நாம் சண்டை போட்டால் அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி போட்டுவிடும் என்பதால் 2011 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு தமிழர் விரோத செயல்களுக்கு முழு அளவில் துணை போனார்.

இப்போது தமிழகத்தில் மாபெரும் தோல்வியைத் தழுவிட்ட திமுகவால் இனி தனக்கு பயனில்லை என்பதால் அதை காங்கிரஸ் தூக்கி வீச உள்ளது.

பதவிக்காக காங்கிரஸ் போன்ற ஒரு கட்சி செய்த துரோகங்களை எல்லாம் மறைக்க முயன்ற திமுகவுக்கு இந்த தண்டனை நிச்சயம் தேவையே.


1 comment:

Darren said...

இதற்கு சீமான் மற்றும் பதிவுலக போராளிகளின் பதில் என்ன என்று நாம் கேட்க போவதில்லை.

இந்த உணர்ச்சி வசப்படும் முட்டாள்களின் பதில் எப்படி இருக்கும் என்று ஆராய அறிவொன்றும் தேவையில்லை