Sunday, May 15, 2011

அத்துமீறி விமானங்கள் பறந்தால் சுட்டுத்தள்ளுவோம் : அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் மிரட்டல்.

தங்கள் நாட்டின் வான் எல்லை மீது அத்துமீறி பறந்து தாக்குதல் நடத்தினாலோ, டுரோன் ரக ஆள் இல்லாத விமானங்கள் மூலம் குண்டுவீசி தாக்கினாலோ தகுந்த பதில் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று அமெரிக்காவையும் நேடோ படைகளையும் பாகிஸ்தான் நாடாளுமன்றம் எச்சரிக்கிறது.

11 மணி நேர நீண்ட விவாதத்துக்குப் பிறகு பாகிஸ்தான் நாடாளுமன்றம் சனிக்கிழமை நிறைவேற்றிய ஒரு மனதான தீர்மானத்தில் இந்த எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

"பாகிஸ்தான் எல்லை மீது ஒருதலைப்பட்சமாக டுரோன் ரக விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டால் நேடோ படைகள் பாகிஸ்தான் எல்லையில் தங்கி இளைப்பாறவும், எரிபொருள் நிரப்பவும் தரப்படும் வசதிகள் நிறுத்தப்படும்' என்று தீர்மானம் எச்சரிக்கிறது.

சர்வதேச பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்ட ஒசாமா பின் லேடனை தலைநகர் இஸ்லாமாபாத் அருகில் உள்ள அபட்டாபாத் நகரிலேயே ஹெலிகாப்டரில் தரை இறங்கி வீட்டுக்குள் புகுந்து அமெரிக்க கடற்படை கமாண்டோக்கள் சுட்டுக்கொன்றதை நேரடியாகக் கண்டிக்க முடியாமல் பாகிஸ்தான் நாடாளுமன்றம் இத் தீர்மானத்தை இயற்றியிருக்கிறது.

"அபட்டாபாத் நகரில் மே 2-ம் தேதி காலை நடந்த அமெரிக்க கமாண்டோ தாக்குதல் குறித்து சுயேச்சையான குழு விசாரிக்க வேண்டும். அப்படி நம்முடைய வான் எல்லையில் அத்துமீறிப் பறக்கவும் நினைத்த இடத்தில் இறங்கித்தாக்கவும் அவர்களுக்கு அனுமதி கொடுத்தது யார்? அப்படி அவர்கள் அனுமதி இல்லாமல் இறங்கியிருந்தால் அவர்களைத் தடுக்கத் தவறியது யார்?

பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதன் மூலம் பாகிஸ்தானின் இறையாண்மையை அலட்சியம் செய்திருக்கிறார்கள்? சர்வதேசச் சட்டத்தையே மீறியிருக்கிறார்கள்.

அபட்டாபாதில் நடந்த தாக்குதலும் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய எல்லைப்புற மாகாணத்தில் பாகிஸ்தானியப் பழங்குடிப் பகுதிகள் மீது டுரோன் ரக விமானங்கள் மூலமும் அமெரிக்கா நடத்தும் தாக்குதல்களை இனியும் சகித்துக்கொள்ள முடியாது. இது தொடர்ந்தால் நேடோ படைகளுக்கு அளித்துவரும் இடை தங்கல் வசதிகளைத் திரும்பப் பெற நேரிடும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தானில் பின் லேடன் தங்கியிருந்ததைக் கண்டுபிடிக்கத் தவறியதற்காக தார்மிகப் பொறுப்பேற்று பதவி விலகத் தயார் என்று பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் அகமது ஷுஜா பாஷா முன்வந்தாராம். அவரையும், ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் அஷ்பக் நதீம் அகமது, விமானப்படை துணைத் தளபதி ஆசிம் சுலைமான் ஆகியோரையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய கேள்விகளால் துளைத்தெடுத்தனர் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது.

அமெரிக்க கடற்படை கமாண்டோ படை தாக்குதல் குறித்து விசாரணை நடத்தவுள்ள குழுவை பிரதமரும் தாமும்சேர்ந்து தேர்வு செய்யப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் செüத்ரி நிசார் அலி கான் பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

டுரோன் ரக விமானங்கள் மூலம் நடத்தப்படும் தாக்குதலை நிறுத்த 2 வழிகள் உள்ளன. அப்படி தாக்குதல் நடத்தும் டுரோன்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை திருப்பித் தாக்குவது, அல்லது நேடோ படைகளுக்கு அளித்துவரும் இடை தங்கல் வசதிகளை நிறுத்திவிடுவது என்று செய்தித்துறை அமைச்சர் பிர்தெüஸ் ஆஷிக் அவான் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் மீது எல்லை தாண்டி தாக்குவதில் தவறு இல்லை என்ற சர்வதேச நிலைப்பாட்டை ஒட்டியே தாங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் அதற்குத் தங்களுக்கு முழு உரிமை உண்டு என்றும் அமெரிக்கா ஏற்கெனவே அறிவித்திருக்கிறது.

இந்த எச்சரிக்கைக்குப் பிறகு டுரோன் தாக்குதல்களை அமெரிக்கா நிறுத்தாது என்று பாகிஸ்தானுக்கும் தெரியும். நாட்டு மக்களைச் சமாதானப்படுத்துவதற்காக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

No comments: