Sunday, May 15, 2011

பாதுகாப்பு வளையத்திற்குள் போயஸ் கார்டன் : வாகனங்கள் சோதனைக்குப் பின் அனுமதி.


அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நாளை முதல்வராக பொறுப்பேற்பதை அடுத்து அவரது வீடு இருக்கும் போயஸ் கார்டன் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா நாளை முதல்வராக பொறுப்பேற்கிறார்.

அந்த விழாவிற்கான ஏற்பாடுகள் சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் புதிய முதல்வர் ஜெயலலிதாவின் வீடு இருக்கும் போயஸ் கார்டன் போலீஸ் பாதுகாப்பு வளயைத்திற்குள் வந்துள்ளது.

கதீட்ரல் சாலையில் இருந்து போயஸ் கார்டனுக்கு செல்லும், பின்னி சாலைக்கு திரும்பும் பகுதியில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் அனைத்தும் வாகன்ஙகளும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப் படுகிறது.

இது தவிர பின்னி சாலையில், ஒவ்வொரு சாலை சந்திப்பு பகுதியிலும் போலீசார் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர். சாலையில் ஆங்காங்கே இரும்பு தடுப்புகளும், சிகப்பு குமிழ்களும் வைக்கப்பட்டுள்ளன.

போலீஸ் உயர் அதிகாரிகள், போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகள், உளவுப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் அவ்வப்போது வந்து போயஸ் கார்டனை கண்காணிக்கின்றனர். நேற்று பின்னி சாலையில் வெள்ளை மற்றும் கருப்பு நிற வர்ணங்கள் பூசப்படும் பணி விறுவிறுப்பாக நடந்தது.

No comments: