Sunday, May 15, 2011

ரூ.67.50 அதிர வைத்த பெட்ரோல் விலை உயர்வு : பல்வேறு அமைப்புகள் கண்டனம்.


பெட்ரோல் விலை உயர்வு துரதிஷ்டம்’’ என்று ஜெயலலிதா விளக்கம் அளித்தார்.

மாநில அரசாங்கத்தின் வரியினை குறைத்து பெட்ரோல் விலையை கட்டுக்குள் கொண்டுவருவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

ஆட்சியில் இல்லாதபோது ஜெயலலிதா அடிக்கடி இக்கருத்தை வலியுறுத்தியதையும், கருணாநிதி மாநில அரசாங்கத்தின் வரியினை குறைத்து, பெட்ரோல் விலையை ஓரளவு குறைத்ததும் நினைவுக்கு வந்து போகிறது.

நாளை விலைவாசி உயர்வுக்கும் இதே பதிலைச் சொல்லுவாரோ காக்கும் கரங்கள் புரட்சித்தலைவி.

பெட்ரோல் விலை உயர்வுக்கு பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்த விலை உயர்வு அனைத்துப் பிரிவு மக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழ்நாடு தரைவழிப் போக்குவரத்து கூட்டமைப்பின் தலைவர் ஆர். சுகுமார்:

எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டம் அடைகின்றன என்று கூறி பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்த்தப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒட்டுமொத்தமாக எவ்வளவு நஷ்டம் ஏற்படுகிறது என்பது இதுவரை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. எனவே நஷ்டம் என்பதில் உண்மையில்லை. பொதுமக்களின் நலன் கருதாமல் தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் பெறும் நோக்கிலேயே இவ்வாறு பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது.

இப்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட்டுள்ளதால் எல்லா பொருள்களின் விலையும் மிகக் கடுமையாக உயரும். இதன் பெரும் சுமை சாதாரண மக்களின் மேல் விழும்.

எனவே பொதுமக்களின் நலன் கருதி எண்ணெய் நிறுவனங்கள் தன்னிச்சையாக விலை உயர்வை மேற்கொள்ள அளிக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும். தனியார் நிறுவனங்களின் எண்ணெய் ஏற்றுமதியைத் தடை செய்ய வேண்டும்.

வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன்: அனைத்துப் பொருள்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் இப்போது பெட்ரோல் விலையைக் குறைப்பதுதான் மக்கள் நலனில் அக்கறையுள்ள ஓர் அரசின் கடமையாக இருக்க முடியும். ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் மத்திய அரசுக்கு ரூ. 16-ம் மாநில அரசுக்கு ரூ.14-ம் வரியாகக் கிடைக்கிறது. இவ்வாறு ஒரு லிட்டர் பெட்ரோலில் மத்திய, மாநில அரசுகள் மட்டும் ரூ. 30 வரியாக வசூல் செய்வது என்பது மிகப் பெரும் மோசடியாகும்.

எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தைக் குறைக்க வேண்டுமானால் பெட்ரோலின் விலையை உயர்த்தத் தேவையில்லை. மாறாக பெட்ரோலியப் பொருள்களின் மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் விலக்கிக் கொண்டாலே போதும் இதனால் எல்லா பொருள்களின் விலையும் 50 சதவீதத்துக்கும் மேல் குறைத்துவிடும்.

ஆட்டோ தொழிலாளர் சம்மேளனப் பொதுச் செயலாளர் (சிஐடியு): இந்தக் கடுமையான பெட்ரோல் விலை உயர்வின் காரணமாக ஆட்டோ வாடகைக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோலிய எரிபொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ள தனியார் பெரும் முதலாளிகள், லாபத்தை அதிகரிப்பதற்காகவே இவ்வாறு பெட்ரோல் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது.

எனவே, ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இந்த விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இதனை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் திங்கள்கிழமை (மே 16) எங்கள் சம்மேளனத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.


பெட்ரோல் விலை உயர்வு: சிபிஎம் கண்டனம்

மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளதற்கு மார்க்சிட் கம்யூனிட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தாமல் இருந்தது. தற்போது தேர்தல் முடிவுகள் வந்துள்ள நிலையில் பெட்ரோல் விலை உயர்வை அறிவித்துள்ளது. லிட்டருக்கு ரூ.5.50 உயர்த்திருப்பது நடுத்தர, உழைக்கும் மக்களை கடுமையாக பாதிக்கும்.பெட்ரோல் விலை உயர்வை தொடர்ந்து மற்ற பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளதை மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது. ஆகவே, மத்திய அரசு பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று மாநில செயற்குழு குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


பெட்ரோல் விலை உயர்வு: ராமதாஸ் எதிர்ப்பு


பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு ஆண்டுக்குள் பெட்ரோல் விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தங்கத்தின் விலை உயர்வை விட மிகவும் அதிகமாகும். பெட்ரோல் விலையில் பாதிக்கும் மேல் வரியாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், அதை குறைக்காமல் சுமையை மக்கள் மீது சுமத்துவது சரியல்ல. எனவே, பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும். பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகளை அரசு குறைக்க வேண்டும். சமையல் எரிவாயு விலையை உயர்த்தும் திட்டம் இருந்தால் அதையும் கைவிட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments: