Saturday, May 28, 2011

வீரியம் இழந்த புதிய விதைப்புரட்சி.

ஆர்.எஸ். நாராயணன்


எதிர்கால உணவுத் தேவையை நிறைவேற்ற இந்தியா 2020-ல் நுழையும்போது அரிசி உற்பத்தி மட்டும் 12.21 கோடி டன்னுக்கு உயர்த்தப்பட வேண்டும் என்று மத்திய திட்டக்கமிஷன் இலக்கு நிர்ணயித்தது.

இன்றுள்ள வளர்ச்சி வீதம் நீடித்தால்-அதாவது ஆண்டுக்கு 1.34 சதம் என்றால் 2020-ல் 10.6 கோடி டன் அரிசிதான் இயலும். 12.21 கோடி டன் இலக்கை எப்படி நிறைவேற்றுவது என்ற கேள்விவந்தபோது, 2007-ல் தேசியப் பசிப்பிணிப் பாதுகாப்பு மிஷன் உருவாக்கப்பட்டு, 2011-12-ல் அரிசி உற்பத்தியை 10 கோடி டன்னுக்கு உயர்த்த முடிவானது. அரிசியுடன் கோதுமை மற்றும் பருப்பு உற்பத்தி உயர்வுக்கான வரையறையும் தேசியப் பசிப்பிணிப் பாதுகாப்பு மிஷனில் செய்யப்பட்டது. இவற்றுக்காக 4,882 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இதில் அரிசி உற்பத்தி உயர்வுக்கான பங்கு 1963 கோடி ரூபாய். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ""கிழக்கு மாநிலங்களில் இரண்டாவது பசுமைப்புரட்சி'' என்று கோஷமிட்டு, ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா நிதியிலிருந்து 400 கோடி ரூபாய் பணத்தை மேற்படி மாநில அரிசி, பருப்பு, எண்ணெய் வித்து, உற்பத்தி உயர்வுக்காக ஒதுக்கியது நினைவிருக்கலாம். கிழக்கு மாநிலங்கள் என்றால் இவற்றில் பிகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஒரிசா, கிழக்கு உ.பி. அடங்கும்.

இந்தியாவின் கிழக்குப் பிராந்தியங்களில் அரிசியின் உற்பத்தித்திறன் - அதாவது தலா ஹெக்டேர் விளைச்சல் பஞ்சாப் - ஆந்திரப் பிரதேசம் - தமிழ்நாடு அளவைவிடக் குறைவாயிருப்பதன் காரணம் வீரிய ரகம் அல்லது ஒட்டுவீரிய ரக விதைப்பயன் குறைவு என்று கூறும் கிரிக்கெட் விவசாய அமைச்சர் சரத்பவார் சீனாவைப் பின்பற்ற வேண்டுமென்று கூறுகிறார்.

சீனாவில் சுமார் 3 கோடி ஹெக்டேர் நிலத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அதில் சுமார் 2 கோடி ஹெக்டேர் நிலத்தில் வீரிய ஒட்டு ரக நெல் பயிராகிறது. சீனாவில் வீரிய ஒட்டு ரகம் சுயம்பூ ஐ.ஆர்.ஆர்.ஐ. மணிலா தயாரிப்பு அல்ல. 1964-ல் சீனாவில் தொடங்கப்பட்டுள்ள அந்தத் தொழில்நுட்பத்தில் அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் ஒரு வரிசையில் மலட்டு நெல்லும் ஒரு வரிசையில் வீரிய ரகமும் நட்டு வீரிய ஒட்டு என்ற ஹைபிரீட் விதை நெல் உற்பத்தியாவதாக ஒரு கருத்துண்டு.

மலட்டு நெல்லையும் வீரிய நெல்லையும் கலந்து வீரிய ஒட்டு விதை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் அறிந்த இந்திய அரிசி விஞ்ஞானி ரிச்சாரியோ, இந்தியாவுக்கு ஐ.ஆர்.ஆர்.ஐ. நெல் வேண்டாம் என்று ஃபோர்டு பவுண்டேஷனை எதிர்த்துப் போர் தொடுத்தார். ரிச்சாரியோ, கட்டாக் அரிசி ஆய்வு நிலையத்தின் தலைமை விஞ்ஞானியாகவும் டைரக்டராகவும் செயல்பட்டார்.

ஐ.ஆர்.ஆர்.ஐ. நெல் வேண்டாம் என்றதால் அவரை ஓரம் கட்டினார்கள். அவர் வழக்குத் தொடர்ந்தார். அவருக்குச் சம்பளம் நிறுத்தப்பட்டது. முடிவில் இதய நோய் வந்து இறந்துபோனார். ஐ.ஆர்.ஆர்.ஐ. நெல் விதையை அப்போதே அவர் வேண்டாம் என்றார். இப்போதுதான் மத்திய அரசு ஐ.ஆர்.ஆர்.ஐ. நெல் வீரியம் இழந்ததை உணர்கின்றனர். இப்போது சீனாவிலிருந்து வீரிய ஒட்டு விதை நெல்லை இறக்குமதி செய்யலாமென்று யோசிக்கப்படுகிறது.

சீனாவின் உற்பத்தித்திறன் 6.61 டன் நெல். இந்தியா 3.37 டன். இதன் காரணம் வீரிய ஒட்டு ரக நெல் மட்டுமல்ல. சீனாவில் 90 சதவீத சாகுபடி நிலம் நீர்வளம் நிரம்பியது. இந்தியாவில் சுமார் 50 சதவீத நெல் சாகுபடி நிலம் மட்டுமே நீர்வளம் உள்ளது. மானாவாரி நெல் சாகுபடி சீனாவில் இல்லை. தவிரவும் இந்தியாவைவிட சீனாவில் ரசாயன உரம் அதிகம் வழங்கப்படுகிறது. ஆகவே, சீனாவிலிருந்து வீரிய ஒட்டு விதை நெல்லை இறக்குமதி செய்வதால் மட்டும் உற்பத்தியை உயர்த்த இயலாது. நமது சூழ்நிலைக்கு ஏற்ப நல்ல மகசூல் தரக்கூடிய நெல் விதைகளைத் தேர்வு செய்வது நல்லது.

அரிசி உற்பத்தியை உயர்த்த வீரிய ஒட்டு நெல் விதைகளே சரியான தீர்வு என்று கூறிய அமைச்சர் சரத் பவாரின் யோசனையை ஏற்று கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவில் உள்ள அனைத்து அரிசி ஆராய்ச்சி நிலையங்களும் முழு மூச்சில் செயல்பட்டு வெளியிட்ட வீரிய ஒட்டு எதுவுமே நல்ல பலன் தரவில்லை. குறிப்பாக, கிழக்குப் பிராந்தியத்தில் தோல்வியே. சுமார் 43 வீரிய ஒட்டு நெல் ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

தோல்விக்கு என்ன காரணம் என்று யோசித்தபோது, இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட விதை ரகங்கள் முதற்கண் தடுமாறும் தட்பவெப்பத்தைத் தாக்குப் பிடிக்க வேண்டும்.

மழை வெள்ளத்தால் பாதிப்படையாத மடுவு முழுங்கி போன்ற பல ரகங்கள் கங்கைப் பிரதேசங்களில் உண்டு. இதற்கு நேர்மாறாக நீர் இல்லாமல் வறட்சியுறும் சூழ்நிலைக்கு ஏற்ப வறட்சி தாங்கும் நெல்விதை ரகங்களும் உண்டு. குளிரைத் தாங்கி வளரும் நெல் ரகங்களும் உண்டு. உவரைத் தாங்கி வளரும் நெல் ரகங்களும் உண்டு. மானாவாரி ரகங்களும் உள்ளன. மாநில அளவில் புவியியல் தட்பவெப்ப மாற்றங்களை அனுசரித்துப் பயிராகும் விதை ரகங்கள் வீரிய ஒட்டு ரகங்களை விடவும் விளைச்சல் கூடுதலாயுள்ளன.

வீரிய ஒட்டு ரகங்களை சிறு, குறு விவசாயிகளாலும் பழங்குடி விவசாயிகளாலும் ஏற்க முடியாது. வீரிய ஒட்டுரக நெல்லுக்கு ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். அவற்றின் சாகுபடி அடக்கச் செலவும் அதிகம் என்பதால் கிழக்குப் பிராந்திய விவசாயிகள் ஏற்க மறுக்கின்றனர். எனினும், பணவசதியுள்ள விவசாயிகளுக்கு தட்பவெப்பப் பிரச்னை இல்லாத புவியியல் சூழல் உள்ள நிலங்களில் மட்டுமே சீனாவில் விளையக்கூடிய உற்பத்தித்திறனைப் பெற முடியும், பெற்றும் உள்ளனர். ஆனால், தட்பவெப்பத்தை அனுசரித்து எல்லா நிலங்களுக்கும் பொருந்தும் விதை ரகங்கள்தான் இன்றைய தேவை.

குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே சிறப்பாக விளையும் சீன வீரிய ஒட்டு பெரும்பாலான இடங்களுக்குப் பொருந்தாது. எதிர்பார்க்கும் விளைச்சலைப் பெற முடியாது என்று வேளாண் துறைசார்ந்த விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரிசா மாநிலத்தில் பருவம் - பட்டம் - புவியியல் தட்பவெப்பத்தைத் தாங்கி வளரக்கூடிய பல பாரம்பரிய நெல் விதைகளைப் பயிர் செய்து வெற்றி கண்டுள்ள நடாபர் சாரங்கி என்ற விவசாயியின் வெற்றிக்கதை விவசாய விஞ்ஞானிகளின் கவனத்தை மிகவும் கவர்வதாயுள்ளது.

77 வயதாகும் சாரங்கி, ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர். கோர்தா மாவட்டத்தில் நரிஷோ என்ற கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் நிலத்தில் 350 வகையான நெல் ரகங்களை விதைப் பயனுக்கென்றே சாகுபடி செய்து உள்ளூர் மக்களுக்கு வழங்குகிறார். அவருடைய பாரம்பரிய விதைகளை வாங்கிச் செல்லும் விவசாயிகள் நல்ல லாபத்தில் விவசாயம் செய்வதுடன் விளைச்சலும் கணிசமாயுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

பசுந்தாள் உரம், இயற்கை உரம் கொண்டு நெல் பயிரிட்டு விளைந்ததை அறுவடை செய்து அரிசியாக்கி மணக்க மணக்க உண்பதுடன் நல்ல விலைக்கு விற்பனையும் செய்கின்றனர். சாரங்கி சேகரித்துள்ள பாரம்பரிய விதைகளின் பெயர்களில் பக்திமணமும் உண்டு. உதாரணம்: கேதார கௌரி, பத்ம கிஷோரி, கோவிந்த போக், காஸ்காமினி, ரத்னசூடி, கன்னையா பத்தியா, காலாஜீரா (கருப்பு சீரகச்சம்பா). இவரிடம் உள்ள மடுவு முழுங்கி விதைகள் வெள்ளம் வடிந்த பிறகும் 25 கிளைகள் (டில்லர்) வெடித்து வளர்கின்றன. வெள்ளத்தில் தலை உயர்ந்து வளரும். அதேபோல் சாரங்கி வழங்கும் வறட்சியைத் தாங்கி வளரும் நெல் பயிரின் தண்டு மிக மிக உறுதியுடன் விளங்குகின்றனவாம்.

நாட்டுக்கு ஏற்ற விதை நெல் ரகங்களை நல்ல முறையில் தேர்வு செய்து இனப்பெருக்கம் செய்யும் பணியை உண்மையில் வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டும். பணம் என்னவோ கோடிக்கணக்கில் நாட்டுக்குத் தேவையற்ற விதை ரகங்களைக் கண்டுபிடிப்பதில் பல்கலைக்கழகங்கள் செலவு செய்வது உண்மைதான்.

இதில் வேடிக்கை என்னவென்றால் பணச்செலவே இல்லாமல் சாரங்கி கண்டுபிடித்த நாடியா ஃபூலோ, சோரா, காலாக்கியரி போன்ற மானாவாரி நெற்பயிருக்கு ஈடாகப் பல கோடி ரூபாய் பணம் செலவழித்து இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் கண்டுபிடித்துள்ள ரகங்கள் போட்டி போடவே தகுதி இல்லை என்று அங்குள்ள விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆகவே பணம் முக்கியமல்ல. தேடுதல் வேட்டைதான் இன்றைய தேவை. அரசாங்கம் வழங்கும் விதைகள் வீரியம் இழந்து வரும் சூழ்நிலையில் - இனி எதிர்காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சாரங்கிபோல் ஒரு விவசாயி தோன்றிவிட்டால் எத்தனை பஞ்சம் வந்தாலும் அதை இந்தியா தாங்கி நிற்கும். எல்லோருக்கும் எல்லாமும் வழங்கக்கூடிய இந்தியாவில் என்றுமே சோற்றுக்குப் பஞ்சம் வரும் வாய்ப்பே இராது.

No comments: