Saturday, May 28, 2011

சிங்கப்பூர் கிட்னி பவுண்டேஷன் மருத்துவமனையில் ரஜினி.


சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட உடல் நலக் கோளாறுகள் காரணமாக அவதிப்பட்டு வரும் ரஜினிகாந்த்துக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூருக்கு நேற்று அவரை அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர்.

நேற்று இரவு எட்டரை மணியளவில் முதலில் ரஜினிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் குழுவினர் விமான நிலையம் சென்றனர்.

பின்னர் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 10 மணியளவில் ராமச்சந்திரா மருத்துவமனையி்ன் பின்புறம் வழியாக கீழே அழைத்து வரப்பட்டார். சக்கர நாற்காலியில் வைத்து அவரை கூட்டி வந்தனர். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அணிவிக்கப்படும் வெள்ளை நிற உடையில் அவர் இருந்தார்.

அதன் பின்னர் அவரை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றினர். அப்போது வேனின் விளக்குகளை அணைத்து விட்டனர். ரஜினியை வேனில் ஏற்றிய பின்னர் வேன் கிளம்பிச் சென்றது. அப்போது மருத்துவமனைக்கு வெளியே பலத்த கெடுபிடிகளையும் தாண்டி கூடியிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ரஜினிகாந்த்தை வாழ்த்திக் கோஷமிட்டனர். அவரைப் பார்க்கவும் முண்டியடித்தனர். பலர் வேனுக்குப் பின்னால் ஓடவும் செய்தனர்.

உணர்ச்சிப் பெருக்குடன் ரசிகர்கள் காணப்பட்டதால் அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டது.

யார் யார் சென்றனர்?:

ரஜினியுடன் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, மருமகன்கள் நடிகர் தனுஷ், அஸ்வின், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை சிறுநீரக மருத்துவ நிபுணர் பி.சௌந்தர்ராஜன், எலெக்ட்ரோ பிஸியாலஜிஸ்ட் டி.ஆர்.முரளீதரன் உள்ளிட்டோர் சென்றனர்.

இரவு 11.30 மணிக்கு புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ரஜினி புறப்பட்டுச் சென்றார்.

சிங்கப்பூரில் உள்ள நேஷனல் கிட்னி பவுண்டேஷன் மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜி.கே.வாசன் உதவி:

சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு ரஜினியும் அவரது குடும்பத்தினர், மருத்துவக் குழுவினர் செல்ல உடனடி விசாவுக்கும், விமான நிலையத்தில் விமானம் நிற்கும் இடம் வரை ஆம்புலன்ஸ் செல்வதற்கான சிறப்பு அனுமதி பெறவும் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் உதவி செய்துள்ளார்.

உற்சாகத்துடன் இருக்கிறார் ரஜினி-லதா:

சிங்கப்பூர் செல்லும் முன் லதா ரஜினிகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ரஜினியின் உடல் நலம் பெற அவரது ரசிகர்கள் செய்துவரும் பூஜைகளுக்கும் கூட்டு பிரார்த்தனைகளுக்கும் என் குடும்பத்தின் சார்பில் முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ரஜினி தற்போது நலமாக உள்ளார். நல்ல உற்சாகத்துடன் இருக்கிறார். அவருக்கு முழு ஓய்வு தேவைப்படுவதாலும், அவரின் உடல்நலத்தை கவனித்து கொள்வதற்காகவும் குடும்பத்துடன் சிங்கப்பூர் செல்கிறோம்.

ரஜினி பற்றி வரும் வதந்திகளை கண்டு யாரும் கவலைப்பட வேண்டாம். அவருக்கு முழு மருத்துவ கவனிப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ரசிகர்கள் தினமும் செய்துவரும் பிரார்த்தனைகளுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

தனிமையில் இருக்க விரும்புகிறார்-ஐஸ்வர்யா:

ரஜினிகாந்த் குறித்து அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா கூறுகையில், அப்பா மற்ற பயணிகளுடன் தான் சிங்கப்பூர் செல்கிறார். அவருடைய உடல் நிலை சீராக உள்ளது. உடலில் உபரியாக இருக்கும் நீர்ச்சத்தை குறைக்கவும், புத்துணர்வுக்காகவும்தான் சிங்கப்பூர் போகிறார். அவர் கொஞ்ச காலம் குடும்பத்தினருடன் தனிமையில் இருக்க விரும்புகிறார்.

தமிழ்நாட்டில் அவர் ஓவ்வொரு வீட்டிலும் நேசிக்கப்படுபவராக-அந்த வீட்டில் ஒருவராக இருக்கிறார். அவரை பற்றி வரும் வதந்திகள் காரணமாக பொதுமக்கள் பீதியடைவது, அப்பாவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எங்கள் குடும்பத்தினரையும் அது வருத்தப்பட வைத்திருக்கிறது என்றார்.

No comments: