Saturday, May 28, 2011

டீசல் விலை உயர்த்தப்பட்டால் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்.


டீசல் விலை உயர்த்தப்பட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரித்து உள்ளது.

இது குறித்து இச் சம்மேளனத்தின் தலைவர் நல்லதம்பி நாமக்கல்லில் வியாழக் கிழமை நிருபர்களிடம் கூறியது:

2008-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 132.47 டாலராக இருந்தது. இப்போது ஒரு பேரலுக்கு 97 டாலராக குறைந்துள்ளது.

ஆனால், கடந்த 2008-ம் ஆண்டு ஒரு லிட்டர் டீசல் ரூ.37.57-க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்போது ரூ.40.63-க்கு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஆனால், கச்சா எண்ணெய் விலை உயர்வதாகக் கூறி, மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டே செல்கிறது. இதனால், ஏற்கெனவே கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் லாரி தொழில் மேலும் நலிவடையும் சூழல் உருவாகியுள்ளது.

சமீபத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 வரை மத்திய அரசு உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, டீசல் விலையை அதிகரிக்கவும் மத்திய அரசு உத்தேசித்துள்ளது. இச் சூழலில், வரும் 9-ம் தேதி அமைச்சரவை கூடுகிறது. இக் கூட்டத்தில் டீசல் விலை உயர்வுக்கான அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.

டீசல் விலை உயர்த்தப்படும்பட்சத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் முடிவெடுத்து உள்ளது. இதற்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முழு ஆதரவை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் டீசல் விலை மாறுபடுகிறது. இந்தியா முழுவதும் டீசலுக்கு ஒரே மாதிரியான விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

கடந்த ஓராண்டில் மட்டும் லாரி டயர்களின் விலை 52 சதவீதம் வரை அதிகரிக்கத்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.21 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு ஜோடி டயர்கள், இப்போது ரூ.32,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டயர் விலை மேலும் 5 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதனால், லாரி தொழில் கடுமையாகப் பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக உள்ள தனியார் டயர் தயாரிப்பு நிறுவனங்களைத் தனிமைப்படுத்தும் நோக்கில் அந்த நிறுவனங்களுக்காக யாரும் லாரிகளை இயக்கக் கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் வெளிநாடுகளில் இருந்து டயர்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றார் நல்லதம்பி.

No comments: