Saturday, May 28, 2011

சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,


சமச்சீர் கல்வி திட்டத்தை அரசு நிறுத்தி வைத்திருப்பதை ஏற்க முடியாது என்றும், இதுகுறித்து வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் கேள்வி எழுப்பப்படும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்,

தமிழகத்தில் புதிய அரசு மீது மக்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறை பிரச்னைக்கு முன்னுரிமை அளித்து சீர்படுத்த வேண்டும்.

சமச்சீர் கல்வி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு முதலில் அறிவிப்பு வெளியிட்டது. இது தொடர்பான உயர் நீதிமன்ற வழக்கு விவாதத்தில் தமிழக அரசின் வழக்குரைஞர், இத்திட்டம் நல்ல திட்டமல்ல எனவேதான் கைவிடப்படுகிறது என வாதிட்டுள்ளார். இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. ஒரே மாதிரியான பாடத் திட்டம் கல்வியைக் கெடுத்து விடும் என்பதை ஏற்க இயலாது.

சமச்சீர் கல்வித் திட்டம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். இல்லையேல், சமூகநீதியை நாம் காலங்காலமாக புறக்கணிப்பது போலாகும். சமச்சீர் கல்வி என்பது ஒரு கட்சி அல்லது ஆட்சியின் திட்டம் அல்ல. இதற்கென பல மாநாடுகள், ஆய்வரங்குகள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டு கொண்டு வரப்பட்ட பொதுவான திட்டம். சமச்சீர் கல்வித் திட்ட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டுப் பாடல் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளதால், திட்டம் ரத்து செய்யப்படுவதாக அரசு இதுவரை தெரிவிக்கவில்லை.

புத்தகங்களில் பிழைகள் இருக்கின்றனவா என்பதும் தெரியவில்லை. எந்த காலத்திலும் புத்தகங்களில் தவறுகள் இடம்பெறாமல் இருந்ததில்லை. அதை களைய முயற்சிக்க வேண்டுமே தவிர, கைவிடுவது ஆரோக்கியமானதல்ல. கல்வித் துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டுமென்பது மிகவும் அவசியமானது. எனவே, தமிழக அரசு சமச்சீர் கல்வி தொடர்பாக தனது கொள்கையை வெளியிட வேண்டும். இதுகுறித்து வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் கேள்வி எழுப்பப்படும் என்றார்.

No comments: