Saturday, May 28, 2011

விலைவாசி உயர்வு, ஊழல் பெருக காங்கிரஸ் அரசே காரணம்.


இந்தியாவில் ஊழலுக்கும், அத்தியாவசிய பொருள்கள் விலை உயரவும் காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என்று தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தலைவர் என். சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இவை இரண்டையும் நாட்டிலிருந்து வெளியேற்ற ஒருங்கிணைந்த போராட்டம் அவசியம் என்று அவர் கூறினார். ஒவ்வொரு மாநிலத்திலிருந்து படிப்படியாக காங்கிரஸ் கட்சியை வெளியேற்றுவதன் மூலம்தான் நாட்டில் ஊழலற்ற ஆட்சியை உருவாக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

தெலுங்கு தேசம் கட்சியின் ஆண்டு கூட்டம் ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநாட்டில் சந்திரபாபு நாயுடு பேசியது:

அனைத்து பொருள்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்த்தப்படுகிறது. இதனால் பொருள்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய முடியாத நிலை உள்ளது. ரூ. 12 லட்சம் கோடி அளவுக்கு பட்ஜெட் போடும் அரசால், விவசாய பொருள்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க முடியாதது மிகவும் வெட்கக்கேடான விஷயம். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் அரசு பதவி விலகிவிடலாம். மக்களே விலையை நிர்ணயித்துக் கொள்வார்கள் என்று அவர் கூறினார்.

விவசாயிகள் சொல்ல மாட்டாத அளவுக்கு துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இவர்களின் பிரச்னைகளுக்கு அரசு தீர்வு காணாத பட்சத்தில் அவர்கள் விரக்தியின் உச்சத்துக்கு செல்கின்றனர். விவசாயிகளின் பிரச்னை மிகவும் சோகமானது. அவர்கள் பிறந்ததிலிருந்து இறக்கும்வரை கடனாளியாகவே இருக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. தாங்கள் விளைவித்த பொருள்களை ஏற்றுமதி செய்யக்கூட முடியாத நிலைக்கு அரசின் கட்டுப்பாடுகளே காரணமாகும்.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரையை அரசு செயல்படுத்தாதது ஏன்?, அதை செயல்படுத்தினால் விவசாயம் லாபகரமான தொழிலாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி அரசியல் அனுபவம் இல்லாதவர். இதனால் சிக்கலான பிரச்னைகளுக்கு அவரால் தீர்வு காணமுடியவில்லை. மாநிலத்தில் அரசு நிர்வாகம் செயலிழந்துவிட்டது. தங்கள் விளை பொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை ஆற்றில் கொட்டுகின்றனர், அல்லது எரித்துவிடுகின்றனர். மாநிலத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து 75 லட்சம் டன் நெல்லை கொள்முதல் செய்ய இந்திய உணவுக் கார்ப்பரேஷன் (எப்சிஐ) தயாராக இருந்தபோதிலும், அதற்கு உரிய ஒருங்கிணைப்பை மாநில அரசு செய்யத் தவறிவிட்டது என்று அவர் குற்றம் சாட்டினார்.

தெலுங்கானா விவகாரம்: ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்குவது தொடர்பாக மத்திய அரசு உறுதியான நிலைப்பாட்டை வெளியிடவேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கருத்துகளை தெரிவித்துவிட்டன. இதற்குப் பிறகும் மத்திய அரசு தனது கருத்தை வெளியிடாமல் இருப்பது பிரச்னையை மேலும் சிக்கலாக்கும். இந்த விஷயத்தில் மத்திய அரசால் உறுதியான முடிவை எடுக்க முடியவில்லை என்பது தெரிகிறது. இதனால் மாநில அரசு எந்தவித உறுதியான முடிவையும் எடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. தெலுங்கு மொழி பேசும் மக்கள் விஷயத்தில் மத்திய அரசு துரோகம் இழைத்து வருகிறது என்று அவர் கூறினார்.

தெலுங்கானா விவகாரத்தை ஆந்திர அரசு அரசியலாக்குகிறது. தனித் தெலுங்கானா உருவாக்குவது தொடர்பாக டிசம்பர் 9, 2009-ல் மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டு பின்னர் அரசியல் கட்சிகள் இரண்டு பிரிவாக பிளவுபட்டதையடுத்து அதை திரும்பப் பெற்றது ஆகிய நடவடிக்கைகள் மத்திய அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது.

அரசு அமைத்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் முன்பு அனைத்து அரசியல் கட்சிகளும் கருத்துகளைத் தெரிவித்துள்ளன. ஆனால் இதுவரை அறிக்கை குறித்து மத்திய அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை. ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டாலும், இருபகுதிகளிலும் உள்ள தெலுங்கு பேசும் மக்களின நலனை காக்க வேண்டிய பொறுப்பு தமக்கு இருப்பதாக சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டார்.

தனித் தெலுங்கானா கோரி போராடும் தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் இணைவது நடந்தே தீரும். அதனால்தான் தெலுங்கானா விவகாரம் குறித்து சோனியா காந்தியை எவ்வித கேள்வியும் கேட்காமல் டிஆர்எஸ் கட்சி உள்ளது.

அக்கட்சியின் முக்கிய நோக்கமே தெலுங்கு தேசம் கட்சியை முடக்குவதுதான். ஆனால் என்.டி. ராமாராவால் உருவாக்கப்பட்ட இக்கட்சியை எந்த ஒரு சக்தியாலும் முடக்க முடியாது. மக்கள் ஆதரவு எப்போதும் கட்சிக்கு உள்ளது என்று சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டார்.

No comments: